Published:Updated:

"முன்பு டெரர் வில்லி... இப்போ ரெண்டு கன்னடப் படத்தில் ஹீரோயின்!" 'நீலி' கவிதா

"முன்பு டெரர் வில்லி... இப்போ ரெண்டு கன்னடப் படத்தில் ஹீரோயின்!" 'நீலி' கவிதா
"முன்பு டெரர் வில்லி... இப்போ ரெண்டு கன்னடப் படத்தில் ஹீரோயின்!" 'நீலி' கவிதா

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'நீலி' சீரியலில் ரேகாவாக நடித்தவர், கவிதா. நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தாலும் தனக்கென ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர். கன்னடம் இவரது தாய்மொழி. தற்போது, ஹீரோயினாக இரண்டு கன்னட படங்களில் நடிக்கிறார். அவரிடம் பேசுவதற்கு முன்னர் அவரைப் பற்றிய குட்டி பயோ...

பெயர்: கவிதா கெளடா

படிப்பு: பி.காம்

முதல் தமிழ் சீரியல்: நீலி

தற்போது நடிப்பது: கன்னட சீரியல், கன்னட படங்கள்

எதிர்காலத் திட்டம்: நல்ல நடிகை என மக்கள் மனதில் இடம்பிடிக்கணும்.

''எனக்கு பெங்களூர். அம்மா சிங்கிள் மதரா என்னையும் தங்கச்சியையும் வளர்த்தாங்க. என் 18 வயசுல மீடியா வாய்ப்பு தேடிவந்துச்சு. மீடியான்னா என்னன்னே தெரியாது. ஆனாலும், ஓகே சொல்லிட்டேன். மலேசியாவில் 10 நாள் ஷூட்டிங். அவங்களே எனக்கு பாஸ்போர்ட் எடுத்துத் தந்தாங்க. ஷூட்டுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி, 'எனக்குப் பயமா இருக்கு, நான் நடிக்க வரலைனு சொல்லிட்டேன். அப்புறம், என் கவனம் முழுக்க படிப்பில் மட்டும்தான் இருந்துச்சு. நான் பி.காம் படிச்சிருக்கேன். கேன்சலான அந்த ஷூட்டில் உள்ளவங்க ரெஃபர் பண்ணி ஒரு சீரியல் ஆடிஷனுக்கு வரச்சொன்னாங்க. நானும் கலந்துகிட்டேன். நான் போன முதலும் கடைசியுமான சீரியல் ஆடிஷன் அதுதான். அங்கே அழுது காட்டச் சொன்னாங்க. நானும் அழுதேன். உடனே செலக்ட் பண்ணிட்டாங்க. அந்த சீரியலில் 24 மணி நேரமும் அழுதுட்டேதான் இருப்பேன். 'லட்சுமி பாரம்மா' என்கிற கன்னட சீரியல்தான் என் முதல் சீரியல். நான் நிஜத்தில் ஜாலியான பர்சன். எதுக்காகவும் அழவே மாட்டேன். ஆனா, அந்த சீரியலில் அப்படியே எதிர்புறம். 

அந்த சீரியலில் நடிக்கிறேன்னு சொன்னபோது அம்மா ரொம்ப யோசிச்சாங்க. அவங்களுக்கு மீடியா பற்றி தெரியாது. அவங்களுக்கு ரெண்டு பொண்ணுகளும் நல்ல நிலையில் பாதுகாப்பா இருக்கணும் அவ்வளவுதான். அவங்க நைட் ஷூட் இருக்குன்னு சொன்னாலே பயப்படுவாங்க. ரொம்ப வெகுளியானவங்க. நல்லா யோசிச்சுதான் முடிவுபண்ணிருக்கேன். எனக்கு பிடிச்சிருக்குன்னு இந்த ஃபீல்டை செலக்ட் பண்ணினேன். ஆனாலும், என் அம்மாவுக்கு நான் அரசு வேலை பார்க்கணும்னு ஆசை. அப்புறம், 'உன் இஷ்டம்'னு சொல்லிட்டாங்க.

தமிழில் 'நீலி' சீரியல் வாய்ப்பு வந்துச்சு. முதல் தமிழ் சீரியல்னு ஆர்வம் இருந்துச்சு. ஆனா, நெகட்டிவ் கதாபாத்திரம். கொஞ்சம் தயங்கினேன். பிறகு, நெகட்டிவ் கதாபாத்திரம் மூலமாதான் நம் நடிப்புத் திறமையை முழுமையா வெளிப்படுத்த முடியும்னு தெரிஞ்சுக்கிட்டேன். அதேமாதிரி, விஜய் டெலிவிஷன் அவார்டுல சிறந்த வில்லிக்கான விருதை வாங்கினேன். அது என் வாழ்நாளில் மறக்கமுடியாத தருணம். என்னைவிட  சீனியர் ஆர்ட்டிஸ்ட் நாமினேஷனில் இருந்தாங்க. அவங்களில் ஒருத்தர் வாங்குவாங்கன்னு நினைச்சுட்டிருந்தப்போ, என் பெயரை அறிவிச்சது சர்ப்ரைஸா இருந்துச்சு

'நீலி' முடிஞ்சதும் வேற தமிழ் சீரியல் வாய்ப்பு வந்துச்சு. அதிலும் நெகட்டிவ் கதாபாத்திரம்னு சொன்னதால் மறுத்துட்டேன். நிறைய வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கணும். அதுமட்டுமில்லாமல் நான் ஒரு பரதநாட்டிய டான்சர்.  இப்போ கன்னடத்தில் இரண்டு படங்களிலும், ஒரு சீரியலிலும் நடிச்சுட்டிருக்கேன். கன்னடம், தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி என ஐந்து மொழிகள் எனக்குத் தெரியும். அந்த ஐந்து மொழிகளிலுமே நடிக்கணும். 'நடிகையர் திலகம்' மாதிரியான சிறப்பான படங்களில் நடிக்கணும்னு ஆசை'' எனப் புன்னகைக்கிறார் கவிதா.

ஆசை நிறைவேறட்டும் கவிதா!