Published:Updated:

அஜித்திடமிருந்து இந்த விஷயத்தைக் கற்றுக்கொண்டேன் - `சந்திரலேகா’ ஸ்வேதா

வெ.வித்யா காயத்ரி
அஜித்திடமிருந்து இந்த விஷயத்தைக் கற்றுக்கொண்டேன் - `சந்திரலேகா’ ஸ்வேதா
அஜித்திடமிருந்து இந்த விஷயத்தைக் கற்றுக்கொண்டேன் - `சந்திரலேகா’ ஸ்வேதா

`ஆழ்வார்' படத்தில் அறிமுகமாகி பல்வேறு படங்களில் ஹீரோயினாக வலம் வந்தவர் ஸ்வேதா. ஸ்வேதா என்ற பெயர் நமக்கு புதியதுதான்.. ஏனெனில் அவர் சந்திராவாகத்தான் நமக்கு பரீட்சயமாகியிருக்கிறார். பத்துக்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கும் ஸ்வேதா, சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'சந்திரலேகா' மூலம் நம் இல்லங்களுக்கு திரைவழியாக விசிட் அடிப்பவரை போனில் பிடித்தேன்.

''என்னுடைய சொந்த ஊர் புனே. ஆனா, பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையிலதான். நானும், என் தம்பியும் சேர்ந்து ஏதாச்சும் சேட்டை செஞ்சு அம்மா, அப்பாகிட்ட திட்டு வாங்கிட்டு இருப்போம். என் பலமும் பலவீனமும் என் ஃபேமிலிதான்.

ஹீரோயின் வாய்ப்பு எப்படி கிடைச்சது..?

''எனக்குச் சின்ன வயசுலருந்தே மாடலிங் துறைல ஆர்வம் அதிகமாயிருந்துச்சு. அதுனாலதான் படிச்சிட்டு இருக்கும்போதே அந்த துறையைத் தேர்வு செஞ்சேன். கொஞ்ச நாள் மாடலிங் பண்ணிட்டு இருந்தேன். மாடலிங் மூலமாதான் எனக்கு சினிமா வாய்ப்பு கிடைச்சது. வீட்டுல என்னுடைய விருப்பத்துக்கு கிரீன் சிக்னல் கொடுத்தாங்க. அப்படித்தான் 'ஆழ்வார்' படத்துல அஜித் சாருக்கு தங்கச்சி கேரக்டர்ல நடிச்சேன். அதுக்கப்புறம் நான் நடிச்ச எல்லா படத்துலயும் நான்தான் ஹீரோயின். முதல் படத்துல மட்டும் தான் கேரக்டர் ரோல் பண்ணேன்''.

ஆழ்வார் பட அனுபவம் பற்றி..?

''ஆழ்வார் படத்துல நடிக்கும்போது 'தல' அஜித் கூட நடிக்கப் போறோம்னு ரொம்பவே ஹாப்பியா இருந்துச்சு. தல ரொம்பவே அமைதியான ஃபர்சன். அவர் செட்டுக்குள்ள வந்த உடனேயே எல்லோருக்கும் வணக்கம் சொல்லுவார். சின்னவங்க, பெரியவங்கணுலாம் கிடையாது. எல்லோருக்கும் மரியாதை கொடுப்பார். எல்லோரையும் மதிக்குற குணத்தை நான் அவரிடமிருந்துதான் கத்துகிட்டேன்''.

வெள்ளித்திரை டூ சின்னத்திரை காரணம்..?

''வெள்ளித்திரையில் நடிச்சிட்டு இருக்கும்போது சின்னத்திரை வாய்ப்பு கிடைச்சது. இப்போ கூட வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைச்சா அதுலேயும் நடிப்பேன். சின்னத்திரையில் என்னைப் பார்த்ததுக்கு அப்புறம்தான் நான் படங்களிலும் நடிச்சிருக்கேனே நிறைய பேருக்கு தெரிய வந்துச்சு. சீரியல் மூலமா நேரா மக்களுடைய வீட்டுக்குள்ளவே நுழைய முடியுங்குறதைப் புரிஞ்சிகிட்டேன்''.

இடையில் விஜேவாகவும் வலம் வர்றீங்களே..?

''சன் டிவியில் 'புதுப்படம் எப்படி இருக்கு'ங்குற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கேன். ஒவ்வொரு விஷயத்தையும் புதுசு, புதுசா கத்துக்குறது எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். நிகழ்ச்சியோட ஸ்கிரிப்ட் சொல்லிடாங்கனா நானே அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிடுவேன்.

ஒரே நேரத்துல சீரியல், சினிமா, விஜேனு மூணு பாதையில பயணிக்க எனக்குப் பிடிக்கும். எல்லாத்திலேயும் என்னோட பெஸ்ட்டை கொடுப்பேன். நல்ல கதைக்களம் அமைஞ்சதும் வெள்ளித்திரையிலும் உங்க சந்திராவைப் பார்க்கலாம்''.

மேரேஜ்?

''என்னை விட உயரமா, கொஞ்ச தாடியோட ஸ்மார்ட்டா எனக்குப் பிடிச்ச மாதிரி கேரக்டரோட இருக்குற பையனைப் பார்க்குறதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன். நிச்சயமா லவ் மேரேஜ்தான்.. ஆனா, இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு தான் டும்..டும்..டும்..''

ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்..?

''  'சந்திரா' கதாப்பாத்திரத்தில் நடிச்சதுக்கு அப்புறம் தான் என்னோட முகம் பலருக்கு தெரிய ஆரம்பிச்சது. இப்போ மக்கள் என்னை சந்திராவாகத்தான் பார்க்குறாங்க. படம் வாங்கி தராத பெயரை சீரியல் வாங்கிக் கொடுத்துருக்கு''.

நிஜத்தில் ஸ்வேதா எப்படி..?

''சந்திரா ரொம்ப போல்டான பொண்ணு. எந்தப் பிரச்சனையா இருந்தாலும் துணிஞ்சு அதை எதிர்த்து நிப்பா. ஆனா, ஸ்வேதா அப்படி கிடையாது. நான் கொஞ்சம் போல்டான பொண்ணுதான். இருந்தாலும், சீரியலில் வர்ற அளவுக்கு போல்டான பொண்ணு கிடையாது''.

'ஸ்டார் வார்' நிகழ்ச்சியில் கலக்குறீங்களே..?

''அந்த நிகழ்ச்சியில் கலந்துகிட்டப்ப பயமா இருந்துச்சு. அந்த குழுவும், அந்த நிகழ்ச்சியில் என்னோட போட்டியாளர்களா இருக்குறவங்களும் கொடுத்த நம்பிக்கையாலதான் பயத்தை தூக்கி போட முடிஞ்சது. எனக்கு நீச்சல் அடிக்கத் தெரியாது. ஆனா, அதையும் அந்த நிகழ்ச்சியில் பண்ணேன்''.

உங்க அம்மாகிட்ட ரீசண்டா திட்டு வாங்குன விஷயம்..?

''இப்போ சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'ஸ்டார் வார்' நிகழ்ச்சியைப் பார்த்துட்டு எதுக்கு இவ்வளவு ரிஸ்க் எடுக்குறனு திட்டுனாங்க. அப்புறம், அவங்களே உன்னால முடியும்னு நம்பிக்கையோட முயற்சி பண்றேனு என்னை பாராட்டவும் செஞ்சாங்க''.

உங்களுடைய ஆசை..?

''நாங்க டி.நகரில் இருக்கோம். அம்மாவுக்கு நாங்க இருக்குற இந்த ஏரியாவிலேயே சொந்தமா வீடு வாங்கணும்னு ஆசை. அவங்களுக்காக அவங்களுக்கு பிடிச்ச மாதிரியான வீடு வாங்கிக் கொடுக்கணும் அதுதான் இப்போதைக்கு என்னுடைய ஆசை''.

நீங்க பார்ப்பதற்கு ஹன்சிகா மாதிரி இருக்கீங்கனு யாராச்சும் சொல்லியிருக்காங்களா..?

நிறைய பேர் என்னை ஹன்சிகானு தான் கூப்டுவாங்க. சன் டிவி செட்டுல நிறைய பேர் நீங்க ஹன்சிகா மாதிரி இருக்கீங்கனு சொல்லுவாங்க. 'மாப்பிள்ளை' படத்தோட புரொமோ பார்த்துட்டு என்னுடைய நண்பர்கள் நிறைய பேர் எனக்கு ஃபோன் பண்ணி தனுஷ் கூட நடிச்சிருக்க.. சூப்பர்னு வாழ்த்துனாங்க. அது நான் இல்லனு ஒவ்வொருத்தரிடமும் சொல்லிட்டு இருந்தேங்க.. ஹன்சிகானு என்னை கூப்டும் போது ரொம்பவே ஹாப்பியா இருக்கும்.