Published:Updated:

''என் கணவர் கொடுத்த சர்ப்ரைஸை என்னால் எப்பவும் மறக்கமுடியாது!'' - 'அழகு' மித்ரா குரியன்

வெ.வித்யா காயத்ரி
''என் கணவர் கொடுத்த சர்ப்ரைஸை என்னால் எப்பவும் மறக்கமுடியாது!'' - 'அழகு' மித்ரா குரியன்
''என் கணவர் கொடுத்த சர்ப்ரைஸை என்னால் எப்பவும் மறக்கமுடியாது!'' - 'அழகு' மித்ரா குரியன்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'அழகு' சீரியலின் வழியே நம் மனதில் அழகாகப் பதிந்தவர், மித்ரா குரியன். 'காவலன்' படம்மூலம் நமக்கு பரீட்சயமானவர், தற்போது சின்னத்திரையில் ஆர்வம் காட்டி வருகிறார். இசையமைப்பாளர் வில்லியம் பிரான்சிஸைக் காதலித்து, திருமணம் செய்துள்ளார். அவர்களின் நட்பு திருமணத்தில் முடிந்த அனுபவத்தைப் பகிர்கிறார். 

''நானும் அவரும் ஒரு நிகழ்ச்சியில் சந்திச்சோம். அந்த நிகழ்ச்சிக்கான பயிற்சி சுமார் ஒன்றரை மாதம் தொடர்ந்து நடைபெற்றது. அதுவரை அவரும் நானும் நண்பர்களாகவே பழகிட்டிருந்தோம். அந்த நிகழ்ச்சி முடிஞ்சதும், எல்லா நண்பர்களையும் மிஸ் பண்ற மாதிரிதான் அவரையும் மிஸ் பண்றதா நினைச்சேன். அந்தச் சமயத்தில்தான் அவருடைய காதலைச் சொன்னார். நான் கொஞ்சம் யோசித்து அப்புறம்தான் 'ஓகே' சொன்னேன். ரெண்டு பேரும் காதலிக்கும் விஷயத்தை எங்கள் வீடுகளில் சொன்னோம். அவங்களுக்கும் பிடிச்சிருந்ததால் 'ஓகே' சொல்லிட்டாங்க. எனக்குக் குடும்பத்துடன் மகிழ்ச்சியா இருக்குறதுதான் ரொம்ப பிடிச்ச விஷயம். நான் நினைச்ச மாதிரியே அழகான குடும்பத்தில் மருமகளா போயிருக்கேன். காதலிக்கும்போது இருந்த பாசத்தைவிட, திருமணத்துக்கு அப்புறமா வில்லியம் அதிகமா என்மீது அன்பாவும், அக்கறையாகவும் இருக்கிறதை உணரமுடியுது. மித்ராவுக்கு என்ன பிடிக்கும்... என்ன பிடிக்காது என நுனி விரலில் வெச்சிருக்கார் என்னுடைய கணவர்'' என்கிற மித்ரா குரேயின் ஒவ்வொரு வார்த்தையிலும் காதல் பெருமிதம். 

''குடும்பத்துக்காக நேரம் செலவழிக்கும் அதேநேரம் என் கரியரிலும் கவனம் செலுத்த முடியுமா எனக் குழப்பத்தில் இருந்தப்போ, கணவர்தான் சீரியலில் நடிக்க வழிகாட்டினார். சீரியலில் குறிப்பிட்ட நேரம்தான் ஷூட் இருக்கும். மீதி நேரத்தைக் குடும்பத்துக்காக சரியாக ஒதுக்கலாம்னு சொன்னார். அவர் பியானோ & மியூசிக் இன்ஜினீயர். அவரும் ரொம்ப பிஸியா இருப்பார். வேலையெல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு வரும்போது நானும் பிஸியா இருந்தால் எப்படி? அதனால்தான் சினிமா வாய்ப்புகளைத் தவிர்த்தேன். சின்னத்திரையின் மூலம் என்னுடைய நடிப்புத்திறமையை வெளிப்படுத்தலாம்னு நினைச்சேன். அதே மாதிரி வாய்ப்பு அழகு சீரியலின் மூலம் கிடைச்சது. எனக்கு கிடைச்ச வாய்ப்பை சரியா பயன்படுத்தணும்னு விரும்புறேன். என் கணவருக்கு நிறைய சர்ப்ரைஸ் பண்ணியிருக்கேன். ஆனால், அவர் என்னை ஜெயிச்சுக்கிட்டே இருப்பார்'' எனக் கணவரின் சர்ப்ரைஸ் அனுபவங்களைக் கண்கள் விரிய பகிர்கிறார். 

''சுவிட்சர்லாந்து, மலேசியா, பாரிஸ், யூரோப், அயர்லாந்து எல்லா ஊருக்கும் போய்ட்டு வந்துட்டோம். எனக்குச் சின்ன வயசிலிருந்தே ஈபிள் டவரைப் பார்க்கணும்னு ஆசை. அதை ஒருமுறை பேச்சோடு பேச்சா கணவரிடம் சொல்லிருந்தேன். என் பிறந்தநாளுக்கு எந்த பிளானும் இல்லாமல் திடீர்னு ஈபிள் டவர் பார்க்க கூட்டிட்டுப் போனார். என் வாழ்நாளிலேயே மறக்கமுடியாத சர்ப்ரைஸ் அது. இப்போ நினைச்சாலும் ஒரு கனவு மாதிரியே இருக்கு. என் மாமியார் எனக்கு இன்னொரு அம்மா. அவ்வளவு அன்பா என்னைப் பார்த்துக்கறாங்க. எனக்குச் சமைக்கிறது ரொம்ப பிடிச்ச விஷயம். என் கணவருக்கு அசைவம் இருந்தால்தான் சாப்பாடு இறங்கும். அவருக்காக விதவிதமா சமைக்கத் தெரிஞ்சுக்கிட்டேன். காதலிக்கும்போது இருக்கும் அன்பும் அக்கறையும், கல்யாணத்துக்கு அப்புறம் பல மடங்காகும்போதுதான் அந்தக் காதல் உண்மையாக ஜெயிக்குது. அந்த வகையில் நாங்க காதலில் ஜெயிச்சுட்டதா கர்வத்தோடு சொல்லிக்கிறோம். இந்த வரி அவருக்கு... காதலர் தின வாழ்த்துகள் பேபி'' என உருகுகிறார் மித்ரா குரியன்.