Published:Updated:

"மூவி டிராப்... ஆனாலும், அவரை கை பிடிச்சுட்டேன்!" 'கல்யாணப் பரிசு’ ஶ்ரீவித்யா

கு.ஆனந்தராஜ்
"மூவி டிராப்... ஆனாலும், அவரை கை பிடிச்சுட்டேன்!" 'கல்யாணப் பரிசு’ ஶ்ரீவித்யா
"மூவி டிராப்... ஆனாலும், அவரை கை பிடிச்சுட்டேன்!" 'கல்யாணப் பரிசு’ ஶ்ரீவித்யா

"சினிமா ஆசையால படிப்பையும் உதறினேன். எனக்குப் பிடிச்ச சினிமாதான், நல்ல கணவரை எனக்குக் கொடுத்திருக்குது. அதான் வாழ்க்கை முழுக்க சினி ஃபீல்டுலேயே இருக்கணும்னு மனசு சொல்லிட்டே இருக்குது" - நெகிழ்ச்சியாகப் பேசுகிறார் நடிகை ஶ்ரீவித்யா. சன் டிவி 'கல்யாணப்பரிசு' சீரியலில் வனிதா ரோலில் நடித்துக்கொண்டிருப்பவர்.

"உங்க மீடியா பயணம் எப்படி தொடங்கியது?"

"பிறந்து வளர்ந்ததெல்லாம் கோயம்புத்தூர். சின்ன வயசுலேருந்தே, நடிப்புல எனக்கு ஆர்வம் அதிகம். சினிமா அல்லது சீரியல்ல நடிச்சா நல்லா இருக்கும்னு அம்மா ரொம்பவே ஆசைப்பட்டாங்க. அதுக்குத் தேவையான முயற்சிகளையும்  செய்தேன். காலேஜ்ல பிசிஏ படிச்சுட்டு இருந்தப்போ, விஜய் டிவி 'கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்' சீரியல் ஆடிஷன்ல செலக்ட் ஆனேன். எனக்குப் படிப்புல கொஞ்சம் ஆர்வம் குறைவுதான். ஆனாலும் நடிச்சுக்கிட்டே படிச்சேன். அந்த சீரியல்ல ரெண்டு வருஷம் செம ஜாலியா நடிச்சேன். சீரியல் முடிக்கிறப்ப டிகிரியும் வாங்கிட்டேன்."

"அடுத்தடுத்து சினிமா, சீரியல்ல பிஸியா நடிச்ச அனுபவம்"

" 'கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்' சீரியல்ல நடிச்சுகிட்டு இருந்தப்பவே சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பிச்சுது. அந்த சீரியல் முடிஞ்சதும், 'சில்லுனு ஒரு சந்திப்பு'ங்கிற படத்துல லீட் ரோல்ல நடிச்சேன். 'ஜே.கே. என்னும் நண்பனின் வாழ்க்கை' உள்பட நாலு படங்கள்ல அடுத்தடுத்து நடிச்சேன். அப்புறம் சீரியல் வாய்ப்புகளும் வந்துச்சு. குறிப்பா சன் டிவி 'முந்தானை முடிச்சு' சீரியல் பெரிய ரீச் கொடுத்துச்சு. பாசிட்டிவ், நெகட்டிவ் ரோல்ல நடிச்சதால, அந்தச் சீரியலுக்காக நிறைய பாராட்டும், திட்டுக்களும் சேர்ந்தே கிடைச்சுது. அடுத்தடுத்து பல சேனல்கள்லேயும், இளவரசி, அழகி, சிவசங்கரி, புதுக்கவிதை உள்பட நிறைய சீரியல்கள்ல நடிச்சுட்டேன். இப்போ சன் டிவி 'கல்யாணப் பரிசு', ஜெயா டிவி 'கைராசிக் குடும்பம்' சீரியல்ல பிஸியா நடிச்சுட்டிருக்கேன்.

"மூவி டிராப் ஆனாலும், லைஃப் பார்ட்னரை சரியா பிடிச்சுட்டீங்களே..."

"ஆமாம். என் கணவர் பெயர் அர்ஜூனன் கார்த்திக். கந்தசாமி, சுறா, காவலன்னு பல படங்கள்ல அசோசியேட் கேமராமேனா வொர்க் பண்ணியிருக்காரு. இப்போ 'நிலம் நீர் காற்று'னு ஒரு படத்துல வொர்க் பண்ணி முடிச்சுட்டார். தவிர, ஃபிலிம் ஃபெஸ்டிவலுக்காக நிறையப் படங்களுக்கும் கேமராமேனா வொர்க் பண்ணிட்டிருக்காரு. நான் படங்கள்ல நடிச்சுட்டிருந்தப்போ, ரெண்டு பேரும் ஒரு படத்துல வொர்க் பண்ணினோம். அந்தப் படம் பாதியிலயே டிராப் ஆகிடுச்சு. ஆனா, எங்க காதல் சக்சஸ் ஆகி, அவரையே கரம் பிடிச்சுட்டேன். இதுக்கிடையில நிறைய போராட்டம், நெகிழ்ச்சி, அன்புனு அவ்ளோ அற்புதமான சம்பவங்கள் எங்க ரெண்டு பேர் வாழ்க்கையிலும் நடந்திருக்கு."

"உங்க காஸ்டியூம் டிசைனரும் கணவராமே..."

(சிரிப்பவர்) "கல்யாணத்துக்குப் பிறகு என் வளர்ச்சிக்கு இப்போ வரைக்கும் அவர் செய்ற உதவிகள் ரொம்ப அதிகம். சரியா டேட் கொடுத்து நடிச்சுக்கொடுக்கிறது, எல்லோர்கிட்டயும் நல்ல பெயர் எடுக்கிறது, கோபத்தைக் குறைச்சுகிட்டு எல்லோர்கிட்டயும் அன்பா பழகுறதுனு நிறைய விஷயங்களை சொல்லிக்கொடுத்தார். இப்போ வரைக்கும் என் நலனில் கேர் எடுத்து செயல்படுற முதல் நபர் அவர்தான். கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் வெஜ்தான் சாப்பிடுவேன். இப்போ அவருக்காக நான்-வெஜ் சாப்பிடுறேன். எனக்குப் பொருத்தமான டிரெஸ்ஸை சரியா செலக்ட் செஞ்சு, எல்லோரும் பாராட்ட காரணமா இருப்பார். அதனால, என்னோட காஸ்டியூம் டிசைனர்னு அவரை தாராளமா சொல்லலாம்." 

"அடிக்கடி லாங் ட்ரிப் போவீங்களாமே..."

"அவர் சூப்பரா டிரைவ் செய்வார். ஒருநாள் எதேச்சையா, 'வா லாங் டிரைவ் போலாம்'னு கேட்டாரு. அப்படி கிளம்பினதுல சென்னை டு கன்னியாகுமரி போனது ரொம்பவே புதுமையான, த்ரில்லிங்கான அனுபவமா இருந்துச்சு. இப்பவும் அடிக்கடி லாங் டிரைவ் போயிட்டு இருக்கிறோம். எனக்கும் சீக்கிரமே கியர் பைக் ஓட்டக் கத்துக்கொடுக்கிறதா சொல்லியிருக்காரு. தவிர, ஷூட்டிங் இருந்தாலும் இல்லாட்டியும் தினமும் சினிமா பார்க்கப் போயிடுவோம். பாஷையே தெரியாத பல மொழிப் படங்களையும் பார்த்து, இப்போ நிறைய மொழிகளை பேசக் கத்துக்கிட்டேன். படம் பார்த்துட்டு வந்ததும், அந்தப் படத்தைப் பத்தி நிறைய டிஸ்கஸ் பண்ணுவோம்.வாழ்க்கை ரொம்பவே மகிழ்ச்சியா போகுது.  குறிப்பா, நாங்க ரெண்டு பேரும் விரைவில் ஒரு படத்துல வொர்க் பண்ற தருணமும் அமையலாம்" என புன்னகைக்கிறார் ஶ்ரீவித்யா.