Published:Updated:

``கோபமா டயலாக் பேசிட்டு, நானும் ரேவதியும் பயங்கரமா சிரிச்சுடுவோம்!” ‘அழகு’ ராஜலட்சுமி

கு.ஆனந்தராஜ்
``கோபமா டயலாக் பேசிட்டு, நானும் ரேவதியும் பயங்கரமா சிரிச்சுடுவோம்!” ‘அழகு’ ராஜலட்சுமி
``கோபமா டயலாக் பேசிட்டு, நானும் ரேவதியும் பயங்கரமா சிரிச்சுடுவோம்!” ‘அழகு’ ராஜலட்சுமி

“நிஜத்துல நான் பரம சாது. ஆனா, அதுக்கு நேர்மாறானது 'அழகு' சீரியல்ல என்னோட கேரக்டர். ரொம்பவே புதுமையான அனுபவமா இருக்கிறதோடு, நடிப்புக்கு நல்ல வரவேற்பும் கிடைச்சிருக்குது" - உற்சாகமாகப் பேசுகிறார் நடிகை ராஜ்யலட்சுமி. 80-களில் பல மொழி முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்தவர். தற்போது சன் டிவி 'அழகு' சீரியலில் தேவி கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

"முதல் முறையா நெகட்டிவ் ரோல்ல நடிக்கிறீங்க. இந்த அனுபவம் பற்றி..."

"இதுவரைக்கும் கண்ணைக் கசக்கிகிட்டு நடிச்சதுக்காக நிறைய பாராட்டுகள் வாங்கியாச்சு. தொடர்ந்து அப்படியே நடிச்சு ரொம்ப சலிச்சுடுச்சு. கொஞ்சம் வெரைட்டியான ரோல்ல நடிக்கணும்னு நினைச்சிட்டிருந்தேன். அப்போதான், 'அழகு' சீரியல் வாய்ப்பு வந்துச்சு. கதை கேட்கிறப்பவே, இந்தக் கேரக்டர் எப்படியும் பல வருஷத்துக்கு மக்கள் மனசுல நிற்கும்னு நம்பிக்கை வந்துச்சு. அது இப்போ நடந்திருக்குது."

" 'தேவி' கேரக்டரை நீங்க எப்படி பார்க்கிறீங்க?"

"கதைப்படி 'அழகம்மா (ரேவதி)' சொல்லைத் தட்ட மாட்டார் அவங்க கணவர். ஊரே புகழும் அவங்க ஜோடிப் பொருத்தத்தைப் பத்தி. ஆனா, என் புருஷன் மருந்துக்குக்கூட என் பேச்சைக் கேட்க மாட்டார். அந்த ஆதங்கமும், என் ஒரே பையனுக்கு நல்ல வாழ்க்கை அமையணுங்கிற ஆதங்கமும் சேர்ந்த கலவைதான் என் கேரக்டர். என் நியாங்களை மத்தவங்களுக்குப் புரியவைக்கப் போய், அவங்க மனசை காயப்படுத்துற கேரக்டர். ஸ்கிரீன்ல பார்க்கிறப்போ, என் மேல ஆடியன்ஸுக்கு பயங்கர கோபம் வர மாதிரி இருக்கும்." 

"வெளியிடங்கள்ல ஆடியன்ஸ் ரியாக்‌ஷன் எப்படியிருக்கிறதா ஃபீல் பண்றீங்க?"

"சீரியல் ஆரம்பிச்சு ரெண்டு மாசம்தான் ஆகுது. இப்போ கதையில நானும் பிரதானமா இடம்பிடிக்கிறேன். என்னோட நெகட்டிவ் போர்ஷன் கொஞ்சம் அதிகமாவே போயிட்டிருக்குது. அதனால வெளிய போற இடங்கள்ல, என் கேரக்டரைச் சொல்லிப் பாராட்டுறாங்க. நிறையப் பேரு என் மேல கோபத்தைக் காட்டுறாங்க. அந்த ஃபீட்பேக்தான் என்னோட ரோலின் வெற்றி."

“நீங்களும் ரேவதியும் சினிமாவில் சகோதரிகளா நடிச்சிருக்கீங்க. இப்போ, சீரியல்ல இணைந்து நடிக்கும் அனுபவம்..."

“ ‘கைக்கொடுக்கும் கை' உள்ளிட்ட ரெண்டு படங்கள்ல நாங்க சகோதரியா நடிச்சிருக்கோம். அப்போதிலிருந்து 30 வருஷத்துக்கும் மேலா தொடருது எங்க நட்பு. இந்த சீரியல் ஷூட்டிங்ல என் ரோல்படி ரொம்பவே கோபமா, நெகட்டிவா நான் பேசிடுவேன். டேக் முடிஞ்சதும், நாங்க ரெண்டு பேரும் பயங்கரமா சிரிச்சுடுவோம். 'நிஜத்துல சாஃப்டான கேரக்டர். நீயா ராஜீ இப்படி டயலாக் பேசுறே'னு ரேவதி அடிக்கடி என்னைக் கிண்டல் பண்ணுவாங்க. எங்கக் காலத்து ஹீரோயின்கள் பலரும் இப்போ பார்த்துக்க முடியாட்டியும், எங்களுக்குள் நட்பு நினைவுகள் அப்படியேதான் இருக்குது. ஷாட் இல்லாத சமயத்துல, ரெண்டு பேரும் பழைய நினைவுகள் உள்பட பல விஷயங்களைப் பேசிச் சிரிப்போம்."

"இப்போ தொடர்ந்து ஆக்டிவா நடிச்சுகிட்டிருக்கீங்க போல..."

"80-கள்ல பல மொழிகள்லயும் பிஸி ஹீரோயின். கல்யாணத்துக்குப் பிறகு சிங்கப்பூர்ல செட்டிலாகிட்டேன். மீண்டும் இந்தியா வந்த பிறகு, ஆக்டிங்கை தொடர்ந்தேன். 'திருப்பாச்சி' (விஜய் அம்மா), 'திருப்பதி' மற்றும் 'வரலாறு' (அஜித் அம்மா) உள்ளிட்ட நிறையப் படங்கள் மற்றும் சீரியல்கள்ல நடிச்சுட்டேன். இப்போ தமிழ், தெலுங்கில் சில படங்கள்லயும், 'அழகு', 'ராஜா ராணி' சீரியல்கள்லயும் நடிச்சுகிட்டிருக்கேன். தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட கேரக்டர்கள்ல நடிக்க ஆர்வமாயிருக்கேன்."

"ரஜினிகாந்த் உடன் நடிச்சிருக்கீங்க. சமீபத்தில் அவரை சந்திச்சிருக்கீங்களா?”

"பெரிய ஹீரோ பிம்பம் எல்லாம் இல்லாம எல்லோர்கிட்டயும் ரொம்பவே யதார்த்தமாகவும், அன்பாகவும் பழகுவார். சமீபத்துல அவரை ஒருமுறை சந்திச்சப்போகூட, நாங்க ஜோடியா நடிச்ச 'மூன்று முகம்' படத்தைப் பத்தி பேசினோம். இப்போ அரசியல்லயும் இறங்கியிருக்காரு. அவருக்கு என் வாழ்த்துகள்" எனப் புன்னகைக்கிறார் ராஜ்யலட்சுமி.