Published:Updated:

“ஆமாம், ‘பகல் நிலவு’ சீரியலிருந்து வெளியேறிவிட்டோம்!” அன்வர் - சமீரா ஜோடி ஒப்புதல்

அய்யனார் ராஜன்
“ஆமாம், ‘பகல் நிலவு’ சீரியலிருந்து வெளியேறிவிட்டோம்!” அன்வர் - சமீரா ஜோடி ஒப்புதல்
“ஆமாம், ‘பகல் நிலவு’ சீரியலிருந்து வெளியேறிவிட்டோம்!” அன்வர் - சமீரா ஜோடி ஒப்புதல்

ரியல் லவ் ஜோடி அன்வர் - சமீரா  காதலர்களாக அறிமுகமாக‌, அமர்க்களமாகத் தொடங்கியது 'பகல் நிலவு' சீரியல். ப்ரமோ வீடியோக்களிலெல்லாம் இருவரும் படுநெருக்கமாக நடிக்க, சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு. கதையில் இருவரும் பதிவுத் திருமணம் செய்த சீன்கள் ஒளிபரப்பான நாள்களில், ஆறரை மணி ஸ்லாட்டில் அசத்தல் ரேட்டிங் பெற்று ஆச்சர்யப்படுத்தியது தொடர்.

ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், ரேட்டிங்கும் பிரச்னையில்லாமல் போய்க்கொண்டிருக்கிற சூழலில், சீரியலிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள் அன்வரும் சமீராவும். என்ன காரணம்?

''ஒரு ஜோடி இல்ல, ரெண்டு ஜோடிகளோட கதை பகல் நிலவு. அன்வர் -சமீரா போலவே விக்னேஷ் கார்த்திக்-சௌந்தர்யா இன்னொரு ஜோடி. 'அக்னி நட்சத்திரம்' டைப் கதை. ரெண்டு ஜோடிகளுக்கும் சமமான முக்கியத்துவமே தரப்பட்டு வந்திச்சு. இடையில விக்னேஷ் -சௌந்தர்யா ட்ராக் காணாமப்போன மாதிரி இருந்திச்சு. அதுக்குக் காரணம் அன்வர்ங்கிற மாதிரியான டாக் யூனிட்டுக்குள்ளேயே எழும்பி அடங்குச்சு. இந்த மாதிரிப் பேச்சுக்கள் ஆர்ட்டிஸ்டுகளுக்கிடையே மனக்கசப்பை உண்டாக்க, அப்ப இருந்தே ஆர்ட்டிஸ்டுகளுக்கிடையே சுமுகமான ரிலேஷன்ஷிப் இல்லை'' என்கிறார் சீரியலில் நடிக்கும் பெயரைக் குறிப்பிட விரும்பாத அந்த சீனியர் நடிகை.

\


'கோ ஆர்ட்டிஸ்ட் சம்பந்தப்பட்ட சீன்களில் டாமினேட் பன்ணக்கூடிய அளவுக்கு அன்வர் செல்வாக்குப் பெற்றவரா? எனக் கேள்வி எழுப்பினால், சேனலுடன் தயாரிப்பாளராக ஏற்கெனவே இருக்கும் உறவைச் சுட்டிக் காட்டுகின்றனர். இந்தப் பிரச்னையைப் பேச விரும்பாத நடுநிலை ஆட்களோ, 'யூனிட்டில் ஆர்ட்டிஸ்டுகளுக்கிடையே எந்தப் பிரச்னையும் இல்லை. இந்த சீரியல் நல்லாப் போயிட்டிருக்கறப்பவே அன்வர் போட்டி சேனல்ல ஒரு சிரியலை தயாரிக்கக் கிளம்பினார். 'ரியல் லவ் ஜோடி'ன்னு இங்க விளம்பரப்படுத்தி அது பேசப்பட, அதேபோல அங்கயும் ரெண்டு பேரும் நடிக்கக் கிளம்பினாங்க. இது சேனல் வட்டாரத்துல கடுப்பைக் கிளப்பி, அதானாலேயேகூட இப்ப விலகியிருக்காங்களோ என்னவோ' என்கிறார்கள்.


'யூனிட்டில் என்ன பிரச்னை' என இயக்குநரைக் கேட்கலாம்' எனறால் அந்த இடத்திலும் ஆள் மாற்றம் நடந்துள்ளது. 'அன்வர் வாய் திறந்தால் மட்டுமே உண்மை வரும்' என  அவர் முன்பு போய் அமர்ந்தோம்.. 

''டிசம்பர் மாதமே சமபந்தப்பட்டவங்களுக்குச் சொல்லிட்டேன். நானும் சமீராவும் நல்லா யோசிச்சு தெளிவா எடுத்த முடிவுதான். ஒரு சீரியல் ஓடாட்டிதான் அதுக்கு காரணத்தை அடுத்தவங்க மேல போடறது நடக்கும். அதே சீரியலுக்கு ரேட்டிங் கிடைச்சா அதுக்கு உரிமை கொண்டாட அத்தனை ஆர்ட்டிஸ்டுகளும் அலைமோதுவாங்க. இது யதார்த்தத்துல நடக்கறதே. நல்லா போனா ஆட்டோமேடிக்கா 'எனக்கு ட்ராக் இல்லை'ங்கிற மாதிரியான பேச்சுகள் கிளம்புது. விக்னேஷ் கார்த்திக் சமபந்தப்பட்ட சீன்கள் கம்மியாச்சு; அதுக்கு நான் காரணம்கிற பேச்சுகள் அர்த்தமில்லாதவை. அந்த சீரியல்ல நான் புரடியூசர் இல்லை. சேனலோட எனக்கு நல்ல உறவு இருக்குங்கிறது நிஜம். ஆனா எனக்கு இப்படி கீழ்த்தரமான உதவிகளைச் செய்றதுதான் சேனலுக்கு வேலையா? இதைச் சொன்னா நம்ப மாட்டேங்கிறாங்க. சீரியலோட புரொடக்ஷன் ஹவுஸ் கூடவும் எனக்கு எந்தப் பிரச்னையுமில்லை.

ஷெட்யூல் கரெக்டா இல்லாதது, சக ஆர்ட்டிஸ்டுகளுக்கிடையேயான குரூப் பாலிடிஸ் போன்ற விஷயங்கள் எனக்கு வருத்தத்தை தந்திச்சு. பொதுவாகவே நான் அவ்வளவா பேச மாட்டேன். உடனே, ‘திமிர் பிடிச்சவன்'னு பேசினாங்க. சில விஷயங்களை டீடெய்லாப் பேச முடியாது. ஆனா ஒரு ஆர்ட்டிஸ்டா நானும் மனுஷந்தான். எனக்குன்னு  உணர்வுகள் இருக்கு. அவமதிக்கப்படறதா நினைச்சா அந்த இடத்துல இருந்து வேலை பார்க்கணும்னு அவசியல்லை. எல்லாத்துக்குமே ஒரு லிமிட் இருக்கில்லையா? அது தாண்டறப்ப வேற வழி இல்லை. அதனால டீசன்டா ஒதுங்கிக்கிடறது நல்லதுன்னு நினைச்சு இந்த முடிவை எடுக்க வேண்டியதாயிடுச்சு. எங்க ரெண்டு பேருக்கும் இதுவரைக்கும் சப்போர்ட் செய்த ரசிகர்கள்கிட்ட நாங்க மன்னிப்புக் கேட்டுக்கறோம்'' என்றவர், 'றெக்கை கட்டிப் பறக்குது மனசு' தொடர் தயாரித்ததால் பிரச்னை' என்பதையும் மறுக்கிறார்..

'அந்தத் தொடர் ஆரம்பிச்சு ரொம்ப நாளாச்சு. அதனால எந்தப் பிரச்னையுமில்லை. ஏன் நான் இதே சேனல்ல 'பொன்மகள் வந்தாள்'னு பகல் டைம் ஸ்லாட் வாங்கி அடுத்த சீரியல் வேலையையும் தொடங்கிட்டேனே. அதனால சேனலுக்கும் எனக்குமோ அல்லது 'பகல் நிலவு' தயாரிப்பாளருக்கும் எனக்குமோ எந்தப் பிரச்னையுமே இல்லை” என்கிறார்.

கொஞ்ச நாளைக்கு முன் புதிதாக ஒரு ஜோடி அறிமுகப்படுத்தப்பட, தற்போது அன்வர்-சமீரா ஜோடிக்குப் பதில் அவர்களின்  ட்ராக் முக்கியத்துவம் பெற்று வருவதையும் சீரியல் ப்ரியர்கள் கவனிக்கத் தவறியிருக்க மாட்டார்கள். ஆனாலும் அன்வர்-சமீரா ரொமான்ஸ்க்குத் தனி ரசிகர் கூட்டம் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனாலும் சேனல் இவர்களின் பஞ்சாயத்தில் தலையிடாமல் தள்ளி நிற்கிறதோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.

சீரியல் நட்சத்திரங்களுக்கிடையே ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் காமெடி, டிராஜெடிகளைத் திரட்டினாலே ஐந்தாறு சீரியல் எடுக்கலாம் போல!