Published:Updated:

"இந்த சீரியலுக்காக எவ்வளவு எடை குறைச்சேன் தெரியுமா?!"- 'வேலுநாச்சி' சித்ரா

வெ.வித்யா காயத்ரி
"இந்த சீரியலுக்காக எவ்வளவு எடை குறைச்சேன் தெரியுமா?!"- 'வேலுநாச்சி' சித்ரா
"இந்த சீரியலுக்காக எவ்வளவு எடை குறைச்சேன் தெரியுமா?!"- 'வேலுநாச்சி' சித்ரா

க்கள் டிவி-யில் அறிமுகமாகி, 'சின்ன பாப்பா பெரிய பாப்பா', 'டார்லிங் டார்லிங்', 'சரவணன் மீனாட்சி' போன்ற தொடர்களில் நடித்துக் குறுகிய காலத்தில் உயரத்தைத் தொட்டிருக்கிறார், விஜே சித்ரா. 'ஜீ டான்ஸ் லீக்' நிகழ்ச்சியின் மூலம் நடனத்திலும் வெளுத்துக்கட்டினார். கொஞ்ச நாள் அனைத்து மீடியாவிலிருந்தும் ஒதுங்கியிருந்தவர் 'கலர்ஸ்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'வேலுநாச்சி' சீரியல் மூலம்  ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவரிடம் 'வேலுநாச்சி' குறித்துப் பேசினோம்.

''எப்படி இருக்கிறது இத்தனை வருட சின்னத்திரை வாழ்க்கை?''

''நான் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் படிக்கும்போதே மாடலாக அறிமுகமானேன். படிப்பை முடித்ததும் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளரானேன். அங்கேதான் அவ்வளவு அழகாகத் தமிழ் பேசக் கற்றுக்கொடுத்தார்கள். இன்று என்னால் தமிழை சரளமாக, துல்லியமாகப் பேசுவதன் காரணம், மக்கள் தொலைக்காட்சியால் மட்டுமே. இப்போதெல்லாம் டி.வி நிகழ்ச்சிகளில் தூய தமிழில் பேசினாலே ஒரு மாதிரி பார்க்கிறார்கள். ஆனால், என்னுடைய தமிழ் உச்சரிப்பு தான் எனக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தது.''

"வேலு நாச்சி அனுபவம்..?"

''மக்களுக்கு பிடிக்கிற மாதிரி கலகலன்னு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினேன். அதுக்கப்புறம், சன் டிவியின் 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' தொடரிலும், ஜீ தமிழ் 'டார்லிங் டார்லிங்' தொடரிலும்  காமெடி ரோல் பண்ணேன். விஜய் டிவி 'சரவணன் மீனாட்சி' சீரியலில் கொஞ்சம் ரொமான்டிக்கான லவ்வர் ரோல். இப்படி என்னால முடிஞ்ச அளவுக்கு என்னுடைய திறமையை வெளிப்படுத்திட்டுதான் இருந்தேன். அப்பதான் கலர்ஸ் சேனலில் 'வேலுநாச்சி' வாய்ப்பு வந்தது. நான் வேலுநாச்சியாருடைய வீரத்தைப் பற்றி படிச்சிருக்கேன். இந்தத் தொடர் முழுக்க என்னை சுற்றித்தான் நடக்கும். வேலுநாச்சிங்கிற கதாபாத்திரம் வீரமான பொண்ணா இருக்கணும்னுதான் இந்த டைட்டிலே வெச்சிருக்காங்க. இப்படிப்பட்ட நல்ல கதைக்கு நான் பொருத்தமா இருப்பேன்னு என்னை நம்பி வந்ததுக்காகவே ஓகே சொல்லிட்டேன். இப்போ இளைஞர்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு.. சித்ரா ஹாப்பி அண்ணாச்சி..!''

''இதுக்காக எப்படி உங்களைத் தயார் பண்ணிக்கிட்டீங்க..?''

''இந்த சீரியலுக்காக கடினமா ரிஸ்க் எடுத்தேன். முதல்ல என்னுடைய எடையை 8 கிலோ வரைக்கும்  குறைச்சேன். அப்புறம் சிலம்பம், மரம் ஏறுவது, நாற்று நடுவது, களை அறுக்கிறதுன்னு எல்லாமே கத்துக்கிட்டேன். அரிசி சாப்பாட்டை தவிர்த்துட்டு காய்கறிகள், பழங்கள்னு சாப்பிட ஆரம்பிச்சிட்டேன். பயங்கர டயட் மெயின்டெயின் பண்ணிட்டு இருக்கேன்.''

''சிலம்பம் கத்துக்கிட்ட அனுபவம் எப்படியிருந்தது?''

''ஒரு மாசத்துக்கு மேல சிலம்பம் கத்துகிட்டு இருக்கேன். சிலம்பம் சுற்றும்போது மனசுக்குள்ள ஓர் அமைதியையும், உடம்புல ஒரு தெம்பையும் உணர முடியுது. சிலம்பம் சுற்றும்போது கல் வீசுவாங்க அதை லாகவமாக அடிக்கணும். அது ஒரு பயிற்சி. இப்போ அந்த பயிற்சியைத்தான் கற்றுக்கொள்ள ஆரம்பிச்சிருக்கேன். சிலம்பம் ஒரு கடல் மாதிரி. அதில் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கு.'' 

''சீரியலுக்காக நிஜமாகவே மரம் ஏறுனீங்களா..?''

''இந்த சீரியலில் வரப்போகிற காட்சிகள் அனைத்தும் உண்மையா இருக்கணும்னு சொல்லிட்டாங்க. அதனால ஒருமாசமா மரம் ஏற என்னைத் தயார்படுத்திக்கிட்டேன். முதல்ல மரம் ஏறும்போது கீழே வழுக்கிடுச்சு. கை முழுக்க சிராய்ச்சு ரத்தம் வந்தது. அதற்கப்புறம் தொடர்ந்து முயற்சி செய்து ஏறிட்டேன். அந்தத் தொடரிலேயே ஒரு காட்சியில் கை சிராய்ப்பைக் காட்டுற மாதிரி ஒரு சீன் வரும். அது உண்மையான காயம்''.

''இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறீங்களே... வீட்டுல என்ன சொல்றாங்க..?''

 ''ஷூட் முடிஞ்சதும் களைப்போட வீட்டுக்கு வருவேன். வீட்டுக்குள்ளே நுழைஞ்சதும் என் அம்மா  ஏன் இப்படி ரிஸ்க் எடுக்குறன்னு கேட்டுட்டே இருப்பாங்க. இப்போ டிவியில் பார்த்துட்டு ரொம்ப அருமையா நடிச்சிருக்கேன்னு பாராட்டுறாங்க. இனிமே என்னை வெள்ளித்திரையிலேயும் நீங்க பார்க்கலாம்''