Published:Updated:

``ப்ரஜினின் பெண் ரசிகைகள்; சாண்ட்ராவின் மீன் குழம்பு; அடுத்த ட்விஸ்ட்!" - 'சின்னத்தம்பி' ஸ்பாட் : ஷூட்டிங்ல மீட்டிங் - பகுதி 1 #ShootinglaMeeting

``ப்ரஜினின் பெண் ரசிகைகள்; சாண்ட்ராவின் மீன் குழம்பு; அடுத்த ட்விஸ்ட்!" - 'சின்னத்தம்பி' ஸ்பாட் : ஷூட்டிங்ல மீட்டிங் - பகுதி 1 #ShootinglaMeeting
``ப்ரஜினின் பெண் ரசிகைகள்; சாண்ட்ராவின் மீன் குழம்பு; அடுத்த ட்விஸ்ட்!" - 'சின்னத்தம்பி' ஸ்பாட் : ஷூட்டிங்ல மீட்டிங் - பகுதி 1 #ShootinglaMeeting

பின்வாசலில் மரம், செடி கொடிகள், கிராமத்துத் திண்ணை, வாளி போட்டு தண்ணீர் இறைக்கிற கிணறு என ரம்மியமான அம்சங்களுடன் காட்சியளிக்கிற ஜி.கே.ஹவுஸ், சென்னை வளசரவாக்கத்தில் இருக்கிறது. 'நந்தினி இன்னைக்கு இருக்காங்களா', 'இந்த மலரு பரவால்ல, அப்பப்ப அவ அம்மா வாயை அடக்கி வைக்கிறா', 'சின்னத்தம்பி பாவம், அவங்க அம்மா பேச்சையும் கேட்க முடியாம நந்தினி பக்கமும் பேச முடியாம ரொம்பவே தவிக்கிறாப்ல' - இப்படியான கமென்ட்டுகளுடன் எந்த நேரமும் அக்கம்பக்கத்துக் குடியிருப்புவாசிகள் சிலரையாவது இந்த பங்களாவின் வாசலில் பார்க்க முடிகிறது. (ஆர்ட்டிஸ்டுகளின் ஒரிஜினல் பெயர்களை இங்கு யாருமே உச்சரிப்பதில்லை. எனவே, அடைப்புக்குறிக்குள் தந்திருக்கிறோம்.) தங்கள் அபிமான சீரியல் நட்சத்திரங்களைப் பக்கத்தில் பார்க்கும் ஆவலில், தினமும் வந்து செல்லும் இவர்கள் சீரியல் பிரியர்கள். யெஸ்... ப்ரஜின் , பாவினி நடிக்க, பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் 'சின்னத்தம்பி' சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட்டேதான்!. 

வார இறுதி நாளொன்றின் முன்காலைப் பொழுதில் அங்கு போய் இறங்கினோம். மொத்த யூனிட்டும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது

''ஷூட்டிங் போயிட்டிருக்கு பிரதர். கொஞ்ச நேரத்துல 'லஞ்ச் பிரேக்' இந்தக் கிணத்தடியிலேயும் திண்ணையிலும் உட்கார்ந்து இவங்க அடிக்கிற அரட்டையையெல்லாம் ஹிடன் கேமராவுல ஷூட் பண்ணி, டெலிகாஸ்ட் பண்ணினா, ரேட்டிங் சும்மா தாறுமாறா போகும். ஜில்லுன்னு ஒரு மோரைக் குடிச்சுட்டு வெயிட் பண்ணுங்க, இன்னைக்குப் பார்க்கத்தானே போறீங்க' - க்ளோஸ் மானிடரில் சீன்களைப் பார்த்தபடியே நம்மை வரவேற்றார், தொடரின் இயக்குநர் ஃபிரான்சிஸ் கதிரவன்.

கதைப்படி, சின்னத்தம்பி குடும்பமும் அவரது சித்தப்பா குடும்பமும் ஒன்றாக வசிக்கும் திண்டுக்கல் சின்னாளப்பட்டி வீடு இது. கொல்லைப்புறத்தில் கிணறு வெட்டி, சினிமா மற்றும் சீரியல்களின் ஷூட்டிங்கிற்காகவே கட்டப்பட்ட பங்களா. சின்னத்தம்பி (ப்ரஜின்), நந்தினி (பாவினி), அன்ன லக்ஷ்மி (அனீலா), ரத்தினசாமி (கிரீஷ்) மலர் (ஹேமா), சாந்தி (ரேகா சுரேஷ்) என அத்தனை நட்சத்திரங்களும் அன்றைக்கு ஷூட்டிங்கில் இருக்க, காத்திருந்த அந்த மதிய இடைவேளையும் வந்தது.

'யூனிட்லேயே ஜூனியர். எல்லோருக்கும் செல்லப் பொன்ணு. செல்லம் ஜாஸ்திங்கிறதால கொஞ்சம் வாயும் ஜாஸ்தி. எடுத்துக் கொடுத்தீங்கன்னா, நிறுத்தவே மாட்டா. இவதான் உங்களுக்குத் தீனி போட லாயக்கு' என மலரை நம்மிடம் அறிமுகப்படுத்திய ரேகா சுரேஷ்,

'இந்தா பாரு பொண்ணு. வழக்கமா உளர்ற மாதிரி உளறாத. மைக், கேமரா, பேட்டினு வந்துட்டா வாயைக் கட்டுக்குள்ள வெச்சுகிட்டுப் பேசு, புரியுதா' என அவரையும் எச்சரித்தார். மலர் 'மானாட மயிலாட', 'ஜோடி' உள்ளிட்ட ஷோக்களில் ஆடியவர். 'களத்து வீடு' முதல் சீரியல். 'கல்யாணம் முதல் காதல் வரை', 'சரவணன் மீனாட்சி' தொடர்களை அடுத்து, இப்போது 'சின்னத்தம்பி'யில் பிரஜினின் தங்கையாக நடித்து வருகிறார்.

'அப்படி என்ன வில்லங்கமாப் பேசுவீங்க'? - மலரிடமிருந்தே ஆரம்பித்தோம்.

'அதொண்ணுமில்ல சார். நந்தினியும் சின்னத்தம்பியும் சீரியல்ல புருஷன் பொண்டாட்டிதானே. ஆனா, மத்த நேரங்கள்ல அவரை இவங்க அண்ணானு கூப்பிடுறாங்க. நானெல்லாம் சீரியல், பிரேக்னு ரெண்டு டைம்லேயும் 'அண்ணா'னுதானே கூப்பிடுறேன். இவங்க மட்டும் ஏன் இப்படி? வேற என்ன சொல்லி வேணா கூட்டிட்டுப் போகட்டும், ஆனா ஹீரோயின் ஹீரோவை 'அண்ணா'னு கூப்பிடற அநியாயம் வேற எங்கேயாச்சும் கேள்விப்பட்டிருக்கீங்களா? அதனால, நான் எப்பவுமே உங்களை 'அண்ணி'னுதான் கூப்பிடுவேன்'னு அவங்ககிட்ட சொல்லிட்டேன். அவங்ககூட பெருசா இதைக் கண்டுக்காம போயிடுறாங்க. ஆனா, சுத்தியிருக்கற மத்தவங்கதான் ஒரே அலப்பறை' என்றார்.

'ப்ரஜின் குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்குற வேலை இது'னுகூடத் தெரிய மாட்டேங்குது பாருங்க' என்றார் ரேகா சுரேஷ்.

'அட நீங்க வேற சார்... இவங்க புரியாம பேசிட்டிருக்காங்க. எங்க அண்ணாவோட ரியல் வைஃப் இருக்காங்களே, அவங்க செம க்யூட். சாண்ட்ரா அக்காவை எனக்கு ரொம்பவே பிடிக்கும். இவங்க சொல்ற மாதிரில்லாம் அவங்க கிடையாது. மொத்த யூனிட்டுக்கும் சேர்த்து சமைச்சுக் கொடுத்து விடுவாங்க தெரியுமா' என மலர் சொல்ல, குறுக்கிட்டார் ரேகா சுரேஷ்.

''ப்ரஜின் மட்டுமில்ல, எங்க எல்லோர் வீட்டுல இருந்தும் அப்பப்ப இங்க சாப்பாடு வரும். தினமும் ஷூட்டிங் ஸ்பாட் சாப்பாடே எடுத்துக்கணுமானு நினைச்சா, சேஞ்சுக்கு இப்படிப் பண்ணுவோம். அந்த நாள்ல கூட்டாஞ்சோறுதான். சில நாள் அன்னலக்ஷ்மி சாதத்தை உருண்டையா உருட்டி ஆளாளுக்குக் கொடுப்பாங்க. செமயான எக்ஸ்பீரியன்ஸா இருக்கும். சாண்ட்ரா வைக்கிற மீன் குழம்பு அவ்வளவு டேஸ்ட்டா இருக்கு. அதனால ப்ரஜின் வீட்டுல இருந்து சாப்பாடுன்னாலே, மீன் குழம்பு கட்டாயம் வேணும்னு சொல்லிடுவோம். அந்த மீன் குழம்புக்காகவே யூனிட்ல நான் -வெஜிடேரியனா மாறினவங்க நிறைய!.

அன்னலக்ஷ்மியின் குரல் சீரியலில் மட்டுமல்ல, பிரேக்கிலும் ஓங்கியே ஒலிக்கிறது. அன்னலக்ஷ்மி மலையாளத்தில் சீனியர் நடிகை. திலகன், கலாபவன் மணி, சுரேஷ் கோபி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 'சின்னத்தம்பி'யில் மாமியார் ரோல். நல்ல மாமியாரா, மோசமான மாமியாரா என்பதெல்லாம் இனி வரும் நாள்களில்தான் தெரியும் என்கிறார்கள்.

''சில நேரம் சாப்பிட்டு முடிச்சா சும்மா இருக்க மாட்டாங்க. ஒரே ஆட்டம் பாட்டுன்னு இறங்கிடுவாங்க.  ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்கிற கூட்டம் சும்மா இருக்குமா, அதனால ரெண்டு அதட்டு அதட்டுவேன்' என்கிற அன்னம், 'எங்களுக்கெல்லாம் சின்னப் பொறாமை என்னன்னா, மாமியாரோ, ஹீரோயினோ பொதுவா சீரியல்கள்ல பெண்கள் ஸ்கோர் பண்ணுவாங்க. இந்த சீரியல்ல என்னடான்னா, அந்தத் தம்பி, அதான்.. சின்னத்தம்பிதான் ஸ்கோர் பண்ணிட்டுப் போயிட்டிருக்கு' என்கிறார்.

'அவரோட பழைய பெண் ரசிகைகள் இன்னைக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குத் தங்களோட மகன், மகள்களை அழைச்சுகிட்டுப் பார்க்க வர்றாங்க சார், அதைப் பத்திக் கேளுங்க' என கேமரா உதவியாளர் ஒருவர் காதில் கிசுகிசுக்க, 'சின்னத்தம்பி' ப்ரஜின் பக்கம் திரும்பினோம்.

''சீரியல் நல்ல ரேட்டிங்ல போயிட்டிருக்கிறதுக்கு நான் மட்டும் காரணமில்லீங்க. எல்லாருமே அவங்கவங்க கேரக்டருக்கு என்ன செய்யணுமோ அதைச் செய்றாங்க. கூட்டு முயற்சிதான். என்னைப் பொறுத்தவரை டிவியில அறிமுகமானேன். ஆங்கரா ஒரு ரவுண்ட் வந்தேன்னு கூடச் சொல்வேன். ஏன்னா, தனியார் சேட்டிலைட் சேனல் வரத் தொடங்கினப்ப ஆங்கரா அதுக்கு தேர்வான ஒன்பது பேர்ல என்னைத் தவிர எல்லோருமே பெண்கள்தான். முதல்ல சில நாள்கள் கூச்சமா இருந்துச்சு. போகப் போக அதுவே ப்ளஸ் ஆகிடுச்சோ என்னவோ, எனக்கு அவ்ளோ பெண் ரசிகைகள். அப்போ எங்க வீடு எக்மோர் போலீஸ் குவார்ட்டர்ஸ்ல இருந்துச்சு. அதே தெருவுல ரெண்டு லேடீஸ் ஹாஸ்டல். இன்னைக்கும் இருக்கு. வேலை முடிஞ்சு நான் லேட் நைட் வீட்டுக்கு வந்தாலும், வழியில ஹாஸ்டல் வாசல்ல சில கேர்ள்ஸ் கண் முழிச்சிருந்து பேச ஆசைப்படுவாங்க. அதெல்லாம் ஒரு காலம். பிறகு சினிமா பக்கம் போனேன். சில படங்களும் நடிச்சேன். சில படங்கள் ரிலீஸாகலை. ஆனாலும், சினிமா மட்டுமே குறிக்கோளா இருந்தேன். அதனாலேயே 'சரவணன் - மீனாட்சி', 'ராஜா ராணி' ரெண்டு சீரியல்களையும் இழந்தேன்.

கொஞ்சம் லேட்டாதான் டிவி, சினிமா ரெண்டுக்கும் வித்தியாசம் ஸ்க்ரீன் சைஸ் மட்டும்தான்னு புரிஞ்சது. அந்த நேரம் 'சின்னத்தம்பி' தொடருக்கு மறுபடியும் அதே சேனல்ல இருந்து கூப்பிட்டாங்க. பெண்கள் டாமினேட் பண்ற சீரியல் ஏரியாவுல ஹீரோவுக்கு முக்கியத்துவம் தர்ற சீரியலா தெரிஞ்சது. இந்த வாய்ப்பைக்கூட முதல்ல நான் ஏத்துக்கலை. வேறு ஹீரோ போட்டு ஷூட்டிங் தொடங்கி என்ன காரணத்தாலேயோ அப்படியே நின்னுட்டதா சொன்னாங்க. ரசிகையா எனக்கு அறிமுகமாகி, லைஃப் பார்ட்னராகிட்ட என்னோட சாண்ட்ராவும் இந்தத் தொடர் நல்லா வரும்னு நம்பினதால, ஓ.கே. சொன்னேன். தொடர்ல நான் பிள்ளையார் பக்தன். அந்தப் பிள்ளையார்தான் என்னைச் சரியான முடிவெடுக்க வெச்சிருக்கார்னு இப்போ நினைக்கிறேன்" என்கிறார், ப்ரஜின்.

மறுபடியும் டிவி பக்கம் வந்துவிட்டாலும் சினிமா முயற்சியை விடப்போவதில்லையாம். தற்போதும் இரண்டு படங்கள் ரிலீஸுக்குக் காத்திருப்பதாகச் சொல்கிறார்.

பழைய பெண் ரசிகைகள் பார்க்க வருவது குறித்துக் கேட்டதற்கு, 'என்னோட டைரக்டரோட பொண்ணு சார் அவங்க. கல்யாணமாகி ஆறு வயசுல குழந்தை இருக்கு. இந்த சீரியல்ல நடிக்கிறேன்னு தெரிஞ்சதும், பார்க்கணும்னு ஆசைப்பட்டு ஒருநாள் இங்க வந்தாங்க' எனச் சிரிக்கிறார்.

வீட்டின் இன்னொரு பக்கம் டப்ஷ்மாஸ், செல்ஃபி என பிஸியாக  இருந்தார், நந்தினி. 'இன்டர்வல் பிரேக்னா இதுதான் வேலையா' என்றோம்.

''செட் சேர்கிற ஆட்களைப் பொறுத்தே எந்த ஒண்ணும். மாமியார் மாமனார் கேரக்டர்லாம் பக்கத்துல இருந்தா கண்டமேனிக்குக் கலாய்க்க முடியுமா? சின்னப்பசங்களா சேர்ந்தா செமயா இருக்கும். அதே மாதிரி டைரக்டர் எங்களோட வந்து சேர்ந்துக்கிட்டாலும் ஏரியாவே கப்சிப்னு இருக்கும். அப்பெல்லாம் மொபைலே கதின்னு கிடக்க வேண்டியதுதான். ஹால்ல இருக்கிற ஊஞ்சல்ல குட்டித் தூக்கம் போடுவாங்க சிலர்' என்கிறார், நந்தினி.

'பிரஜினை அன்ணன் என அழைப்பது உண்மையா'? 

'பிரஜினை சுருக்கமா 'ப்ரோ'னு கூப்பிடுறேன். இதை பிரதர்னு நினைச்சுட்டாங்க போல' எனப் புது விளக்கம் அளிக்கிறார்.

சீரியல் சமீபத்தில்தான் நூறாவது எபிசோடைக் கடந்துள்ளது. அன்றைய தினம் பெரியதாகக் கொண்டாடவில்லையாம். 'ஐந்நூறு, ஆயிரமாவது எபிசோடைப் பெரிய அளவுல செலிப்ரேட் பண்ணணும்னு இருக்கோம்' என்கிறார்கள்.

சின்னத்தம்பியின் அப்பா ரத்தினசாமியாக நடிக்கிற கிரீஷிடம் பேசியபோது, 'ஷூட்டிங்னோ, இதை எங்களோட வேலைன்னோ சொல்ல முடியாது தம்பி. ஒரு வீடு, ஸ்கூல், காலேஜ் மாதிரியான அனுபவமே இங்க எல்லாருக்கும் கிடைக்குது' என்கிறார்.

லஞ்ச் பிரேக் முடிவுக்கு வந்த வேளையில் அங்கு வந்த இயக்குநர் ஃபிரான்சிஸ் கதிரவனிடம் நூறு எபிசோடு கடந்ததற்கு வாழ்த்துச் சொன்னோம். நன்றி தெரிவித்துவிட்டு, ஷூட்டிங் கிளம்பியவரிடம், சீரியலில் அடுத்து நடக்கப்போகும் சில சுவாரஸ்யமான விஷயங்களைக் கேட்டோம். 

அடுத்து என்ன ட்விஸ்ட்?

'கோகோ பாபு'ங்கிற பெங்காலி சீரியலோட தமிழ் வெர்சனே 'சின்னத்தம்பி'. 'என் செருப்புகூட இந்த மாதிரி கிராமத்துப் பக்கம் வராது'னு சொன்ன நந்தினி,சந்தர்ப்ப சூழல்ல சின்னத்தம்பியைக் கல்யாணம் செய்து அதே கிராமத்துக்கு மருமகளா வந்துடுறாங்க. அவங்களுக்குச் சின்னத்தம்பியை முதல்ல பிடிக்கலை. மாமியாருக்கோ மருமகளைப் பிடிக்கலை. ஆனா, 'சின்னத்தம்பி' பிரபு மாதிரி குணம் கொண்ட ஹீரோ, போகப்போக நந்தினி மனசைக் கரைச்சிடுறார். இப்போதைக்கு இவ்ளோதான் நடந்திருக்கு. ஹீரோயினுக்கு ஹீரோ மேல லவ் உண்டாகியிருக்கிறதால கொஞ்ச நாளைக்கு ரொமான்ஸ் தூக்கலா இருக்கும். ஷூட்டிங் திருத்தணியில போயிட்டிருக்கு. வயக்காடு, வாழைத்தோட்டத்துக்குள்ள லவ் பண்ணணும்னா அங்கதான் ஏரியா நல்லா இருக்கு. உச்சக்கட்டமா, நந்தினி, சின்னத்தம்பி மேல அளவில்லாத காதல் காரணமா ஒரு விஷயம் பண்ணுவாங்க. அதுதான் சீரியல்ல அடுத்த ட்விஸ்ட்!'' என்கிறார் ஃபிரான்சிஸ் கதிரவன். 

அடுத்த வாரம், இன்னொரு ஷூட்டிங்  மீட்டிங் பகுதியோடு சந்திப்போம்!