Published:Updated:

" 'சரளமாக தமிழ் பேசுவது எப்படி...' இந்த புக்குதான் எங்க ஹீரோயினோட பொக்கிஷம்..!" - 'முள்ளும் மலரும்' ஸ்பாட் : ஷூட்டிங்ல மீட்டிங் - பகுதி 2

அய்யனார் ராஜன்
" 'சரளமாக தமிழ் பேசுவது எப்படி...' இந்த புக்குதான் எங்க ஹீரோயினோட பொக்கிஷம்..!" - 'முள்ளும் மலரும்' ஸ்பாட் : ஷூட்டிங்ல மீட்டிங் - பகுதி 2
" 'சரளமாக தமிழ் பேசுவது எப்படி...' இந்த புக்குதான் எங்க ஹீரோயினோட பொக்கிஷம்..!" - 'முள்ளும் மலரும்' ஸ்பாட் : ஷூட்டிங்ல மீட்டிங் - பகுதி 2

ப்ரோமோ வெளியானபோதே, 'பார்ரா' என வியக்க வைத்த சீரியல், ஜீ தமிழில் தினமும் மாலை ஆறரை மணிக்கு ஒளிபரப்பாகிற 'முள்ளும் மலரும்'. வியப்புக்குக் காரணம், சீரியலின் ஹீரோ. முதல் சீரியலில், 'சம்பந்தம்' என்கிற கேரக்டரில் காமெடியனாக வந்து சிரிக்கவைத்துக் கொண்டிருந்த அந்த முனீஸ் ராஜாவேதான். 'விருமாண்டி', 'அந்நியன்', 'சண்டக்கோழி' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகர் சண்முகராஜனின் தம்பி. தேஜஸ்வினி என்ற பெங்களூரு பொண்ணு, ஹீரோயின். ஜெயமணி, ஆர்ட் டைரக்டர் ராஜன், வனிதா, பாலாம்பிகா, விஜய் என சின்னத்திரையின் ஃபேவரைட் நட்சத்திரங்கள் நடித்துவருகிற தொடரின் இயக்குநர், ஆர்.சி என்கிற ராமச்சந்திரன்.

'ஷூட்டிங்ல மீட்டிங்' பகுதிக்காக தொடரின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நாம் சென்றபோது, டிடெக்டிவ் ஏஜென்சியில் வில்லன் அடியாட்களுடன் வந்து மிரட்டிக்கொண்டிருக்கும் சீன் எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. எனவே, ஹீரோ ஒரு ஓரத்தில் ரிலாக்ஸாக இருந்தார். நம்மைப் பார்த்ததும், அதே பழைய சம்பந்தமாய் வாய் நிறையச் சிரிப்புடன் வரவேற்றார்.

'திண்ணையில கிடந்தவனுக்கு திடுக்னு வந்துச்சாம் கல்யாணம்'ங்கிற மாதிரி, திடீர் ஹீரோ அவதாரம் எப்படி முனீஸ்' என்றோம்.

''ஆஸ்பத்திரியிலெல்லாம் 'மெடிகல் மிராக்கிள்’னு ஒரு வார்த்தை கேட்டிருப்பீங்கல்ல, அதே மாதிரி இது சீரியல் மிராக்கிள்'னு வச்சுக்கோங்கண்ணே. 80 எபிசோடைக் கடந்திடுச்சு. இன்னும் என்னாலயே நம்ப முடியலை. 'திடுக்'னு வந்துச்சாம் கல்யாணம்னு சொன்னீங்களே, அதுதான் கதையே. கல்யாணம் முடிக்க தயாரா இருக்கிறார் தர்மதுரை (சீரியலில் கேரக்டர் பெயர்). ஆனா, ஒரு பொண்ணு அமைய மாட்டேங்குது. எல்லாப் புள்ளைகளும் ஆளுக்கொரு காரணத்தைச் சொல்லி நம்மளை ரிஜெக்ட் பண்ணிட்டே இருக்காங்க. ரியாலிட்டி ஷோவா இருந்தாலாச்சும் ஆர்யா மாதிரி 'என்னைக் கட்டிக்க விரும்புறவங்க வாரிகளா'ன்னு கேட்கலாம். இது சீரியல்ணே. சட்டுபுட்டுனு முடிஞ்சுட்டா எப்படி? இழு இழுன்னு இழுத்துதான் கல்யாணம் முடிப்பாய்ங்க. அதுகூட எனக்கு கல்யாணம் நடக்குமாங்கிறது டைரக்டருக்குத்தான் தெரியும். கல்யாணம் நடக்கணும்னு அந்த முனீஸ்வரன்கிட்டதான் வேண்டிட்டிருக்கேன். நடந்தா, அநேகமா ஆர்யா கல்யாணம் நடக்கறப்பதான் நடக்கும்னு நினைக்கேன். ஹீரோவா நடிச்ச முதல் சீரியல்லயே ஹீரோயின் இல்லாட்டி எப்படி? வரலாறு கலர்ஃபுல்லா இருக்காதில்லையா’’ எனச் சிரிக்கிறார்.

ஆனாலும் கேப்ல, அதாவது சீரியல் பிரேக்ல ஹீரோயினோட லந்து, அலப்பறையை ஆரம்பிச்சிருப்பீங்கல்ல என்றோம்.

’’காதைக் கொடுங்கண்ணே. இதுவரைக்கும் 'ஹாய்', 'பை’ மட்டுமே போயிட்டிருக்கு. காரணம் லாங்குவேஜ். பெங்களூரு புள்ள அவங்க. கன்னடத்துலயும் இங்கிலீஷ்லயும்தான் பேசுறாங்க. இங்கிட்டுத் தமிழைத் தாண்டி ஒண்ணும் தெரியாது. காலேஜ்லாம் படிச்சிருக்காங்க; அரைகுறை ஆங்கிலம் பேசி அசிங்கப்படணுமாடா'னு என்னைய நானே கேட்டுப்பார்த்தேன். அதான், காலையில ஒரு 'ஹாய்'யும் சாயங்காலம் ஒரு 'பை'யும் போதும்னு நிறுத்திக்குவேன். மீறி, அவங்களா ஏதாச்சும் பேச வர்றாங்கன்னு தெரிஞ்சாலே, அந்த இடத்தை விட்டு உடனே எஸ்கேப் ஆகிடுவேன். ஆனா, என்னைப் பார்க்கிறப்பல்லாம் ஒரு சிரிப்பு சிரிப்பாங்க பாருங்க, அந்தச் சிரிப்புக்கு நோ நாலெட்ஜ். ஸாரிண்ணே லாங்குவேஜ்’’ என்கிறார்.

'இந்த சீரியலை நீங்கதான் தயாரிக்கறதா வெளியில பேசிக்கிட்டாங்க, கேள்விப்பட்டீங்களா' என்று கேட்டோம்.

’’வடிவேலு அண்ணன் ஒரு படத்துல சொல்வாரு, 'எப்பப் பாரு விளையாட்டுத்தனந்தான்'னு! அதுதான் நிஜம். இன்னைக்கு எல்லாம் கேலியாப் போச்சு. அதனால, என்ன வேண்ணாலும் பேசலாம். எங்கிட்டயும் கேட்டாங்க. உடனே கெக்கபெக்கேன்னு சிரிச்சுட்டு விட்டுட்டேன். நல்ல வேளை, தயாரிப்பாளர் காதுல இது விழலை. விழுந்தா, 'ஏண்டா இப்படித்தான் வெளியில சொல்லிட்டுத் திரியறியா'ன்னு என்னை வெளியில அனுப்பியிருப்பார்.

இதுமட்டுமில்ல, இன்னொரு குரூப், இந்தக் கதையை என்னோட நிஜக் கதைன்னு கிளப்பிவிட்டுடுச்சு. அதையும் இல்லைன்னு புரியவைக்கிறதுக்குள்ள தாவு தீர்ந்துடுச்சு’’ என்றவர், பேசிக்கொண்டிருந்தபோதே கிளம்ப ஆயத்தமானார். திரும்பினால், நம் எதிரில் தொடரின் ஹீரோயின் தேஜஸ்வினி.

’’பி.காம் முடிச்சுட்டு பெங்களூர்ல நாலஞ்சு சீரியல் பண்ணிட்டேன். தமிழ்ல இது ஃபர்ஸ்ட். தமிழ்ல இப்ப 50 வேர்ட்ஸ் படிச்சுட்டேன். 'குயிக்'கா பேசக் கத்துப்பேன். ஹீரோகிட்ட கத்துக்கலாம்னு பக்கத்துல போனா ஓடறார். எதுக்கு என்னைப் பார்த்து பயப்படணும்’’ என்கிறார்.

தேஜஸ்வினிக்கு மொழிப் பிரச்னை இருப்பதால், இடைவேளை அரட்டைகளில்  அவ்வளவாக அவர் கலந்துகொள்வதில்லையாம். 'தமிழ் சரளமாகப் பேசுவது எப்படி' என்கிற புத்தகம் ஒன்றை வாங்கி வைத்திருக்கிறவர், ’’ஹீரோ கூட பேச முடியலை. பட், அவர் ஒரு இன்னோசென்ட்னு மட்டும்  தெரியுது. அவர் கண்ணைப்  பார்த்து இதைத் தெரிஞ்சுகிட்டேன்’’ என்கிறார் தேஜஸ்வினி.

தன்னுடைய சீன் முடிந்து வந்து உட்கார்ந்த 'விஜய்' யிடம் பேச்சுக்கொடுத்தோம்.

’’காமெடி பண்ணிட்டிருந்தவரை ஹீரோ ஆக்கிட்டு, ஹீரோவா நடிச்சிட்டிருந்த என்னை வில்லனாக்கிட்டாங்க. இதுவரைக்கும் நெகட்டிவ் ரோல் பண்ணியதே இல்லை. ஆனா, பண்ணணும்கிற ஆசை இருந்திச்சு. இப்பதான் அதுக்கான நேரம் வந்திருக்கு. எந்நேரமும் சுத்தி நாலஞ்சு ரௌடிகளோட இருக்கிறது நல்லாத்தான் இருக்கு'' என்கிறார், புது வில்லன் விஜய்.

’'அரவிந்த்சாமிகூட ஹீரோவா இருந்துட்டுதான் இப்ப வில்லனா வந்து கலக்கிட்டிருக்கார்'’ என இவரை உசுப்பேற்றி உற்சாகப் படுத்தியிருக்கிறாராம் இவரது காதல் மனைவி சிவரஞ்சனி.

’'இவரு அரவிந்த்சாமியா? அவரு கேட்டா கோபிசுக்கப் போறார்’' என்றபடி மறுபடியும் ஸ்பாட்டுக்கு வந்தார் முனீஸ்ராஜா. கூடவே தொடரின் இயக்குநர் உள்ளிட்ட மொத்த டீமும். மதிய உணவு இடைவேளை நேரம்.

'சீரியல்ல பொண்ணு அமையுமா இல்லையாங்கிறது கிடக்கட்டும், நிஜத்துல நீங்க பொண்ணு பார்க்கப் போன அனுபவம் இருக்கா' என முனீஸ்ராஜாவிடம் கேட்டோம்.

’’அவரைக் கேட்டா, 'நம்ம யாரையும் தேடிப்போறதில்லைனோ, எனக்கு இன்னும் ஓட்டுப் போடுற வயசே வரலைனோதான் சொல்வார். நடந்ததை நாங்க சொல்றோம்’' எனக் குறுக்கிட்டார்கள் ரம்யாவும் நிவேதிதாவும்.

’'காமெடியா நடிச்சிட்டிருந்த சமயம், ஒரு பொண்ணைப் பார்க்கப் போயிருக்கார். அந்தப் பொண்ணு சீரியல் பார்க்கிறதே இல்லையாம். அதனால, இவரை நேர்ல பார்த்தப்ப ஒண்ணும் சொல்லலை. அவங்க வீட்டுல போட்டோ வாங்கிக்கிட்டு 'அப்புறம் சொல்லி விடறோம்'னு சொல்லியிருக்காங்க. அந்தப் பொண்ணு, தன்னோட காலேஜ் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட போய், ‘இவருதான் மாப்பிள்ளை'னு போட்டோவைக் காட்டியிருக்கு. அந்த ஃப்ரெண்ட்ஸெல்லாம் சிரிச்சுட்டாங்களாம். இவர் காமெடி நடிகர். காலைக்கூட கெந்திக் கெந்திதான் நடப்பாருனு ஏகத்துக்கு கலாய்ச்சிருக்காங்க. 'அன்னைக்கு நல்லாதானே நடந்தார் ; எதுக்கும் இனியொரு முறை வரச்சொல்லலாம்'னு பொண்ணு வீட்டுக்காரங்க இவரைக் கூப்பிட்டிருக்காங்க. 'சம்மதம்னா சொல்லுங்க'னு கேட்டிருக்கார். 'டி.வி-யில நடிக்கிறீங்கன்னு பொண்ணு கொஞ்சம்...’னு இழுத்திருக்காங்க. 'பிறகு எதுக்கு? நடந்துகாட்டக் கூப்பிடுறீங்களா, வைங்க போனை'னு திட்டிட்டு போனை வச்சிருக்கார், இல்லையான்னு கேளுங்க'' என்கிறார்கள் இருவரும்.

''ஏம்ப்பா விஜய், நீ சீரியல்ல  ஜோடி சேர்ந்து அதே பொண்ணைக் கல்யாணம் கட்டிக்கிட்டவந்தானே! முனீஸுக்கு நாலு டிப்ஸ் எடுத்து விடுறது' என்றார் ராஜன். 

''மாமா, சீரியல்ல நான் மதிக்கிற என்னோட மாமா . அந்த மாமா பார்க்கிற வேலையாத் தெரியலையே இது' எனக் கடுப்பானார் முனீஸ். 

ஜெயமணியிடம் பேசினோம்.

''முனீஸ்ராஜாவுக்கு மளிகைக் கடைப் பையன் கேரக்டர். அதனால, நல்லா சாப்பிட்டுட்டு கொஞ்சம் குண்டா இருந்தா தேவலைனு டைரக்டர் சொன்னார். அடுத்த நாளே ஆரம்பிச்சு, 10 நாள்ல எடையைக் கூட்டிட்டார். அவங்க அண்ணன்கூட இந்த வயசுல எடை அதிகமாகக் கூடாதுடானு சொல்லியிருக்கார். அதைக் கண்டுக்கலை. அந்தளவுக்கு வேலைக்கு மரியாதை தந்துட்டு வர்றார். பிரேக்ல மட்டுமில்ல மொத்த நேரமும் யூனிட்டைக் கலகலப்பா வச்சிருக்கிறது அந்தத் தம்பிதான். அவரோட முதல் சீரியல்ல நானும்கூட நடிச்சவன்கிற முறையில சொல்றேன், இது அவருக்கு நல்ல ஒரு வளர்ச்சி. யாராவது சீரியஸா கலாய்ச்சாக்கூட 'உங்களால அடுத்தவங்களைப் புண்படுத்த மட்டும்தான தெரியும், என்னை மாதிரி சிரிக்க வைங்களேன், பார்ப்போம்'னு சொல்லிட்டுப் போயிட்டே இருப்பார். சீரியலைப் பார்த்துட்டு, அவங்க வீட்டுல இருந்துதான் எங்கிட்டப் பேசினாங்க. கதையில் வரறது மாதிரியே என் புள்ளைக்கும் கல்யாணம் ஆகலையேங்கிற ஏக்கம் இருக்கா'ன்னு கேட்டு அவங்க அம்மா வருத்தப்படுவாங்க. அது நடக்கற காலம் நடந்திடும்னு சொல்வேன்’’ என்கிறார் ஜெயமணி.

கருவாட்டுக் குழம்பு, முட்டையுடன் மதியச் சாப்பாடு முடிந்ததும், கொறிக்க கடலை மிட்டாய் கொடுக்கப்பட்டது. 'ரவுடீஸ் எல்லாம் ரெடியாகுங்க; ஒரு அட்டாக் இருக்கு' எனத் தன்னுடன் இருந்த அடியாட்களைத் தயார்படுத்தினார் விஜய்.

அடியாட்களில் ஒருவராக இருந்த 'சண்டியர்' ரமேஷிடம் பேச்சுக் கொடுத்தபோது, ’’சினிமா, சீரியல்கள்ல அடியாள் கேரக்டருக்குனே நேந்து விடப்பட்டவங்க நாங்க. எங்களுக்கும் மெயின் வில்லனா நடிக்க ஆசையிருக்கு. அதெல்லாம் நடக்குமா பாஸ்? எங்க காலம் இப்படியேதான் போகும். ஷூட்டிங் இருந்தா ஒரு நாளைக்கு ஐந்நூறோ சமயத்துல ஆயிரமோ கிடைக்குது’’ என்கிறார். 'சண்டியர்'ங்கிற அடைமொழி எப்படி வந்தது என்றால், ’’மீசை, முழியைப் பார்த்துட்டு மத்தவங்க வச்சுவிட்டுட்டாங்க; பேஸிக்கா நான் குழந்தை மாதிரி பாஸூ’’ என்கிறார்.

பிற்பகல் ஷூட்டிங்கிற்கு யூனிட் தயாராகிக்கொண்டிருக்க, இயக்குநர் ராமச்சந்திரனிடம், சீரியலில் அடுத்த சில நாள்களில் நடக்க இருக்கும் சில திருப்பங்கள்குறித்துக் கேட்டோம்.

அடுத்து என்ன ட்விஸ்ட்?

''பொண்ணு அமையாத ஹீரோ தர்மதுரையும் (முனீஸ் ராஜா) ராசியில்லாத பொண்ணு என முத்திரை குத்தப்பட்ட ஹீரோயின் மகாலக்ஷ்மியும் (தேஜஸ்வினி) சந்திக்கிறாங்க. தர்மதுரைக்கு மகா மேல லவ். ஆனா மகா, அது வெறும் ஃப்ரெண்ட்ஷிப்னுதான் நினைக்கிறாங்க. அதனால, இடையில இன்னொருத்தர் தேவைப்பட, வில்லன் அறிமுகமாகிறார். வில்லன் ஹீரோயின் மனசைக் கவர்ந்திட, வில்லனுக்கும் ஹீரோயினுக்கும் நிச்சயதார்த்தமே நடந்திடுச்சு. இதுவரை நடந்தது இதுதான். வில்லன் மோசமானவன்னு தெரிஞ்சுக்கிட்ட தர்மதுரை, கல்யாணத்துல இருந்து ஹீரோயினைக் காப்பாத்த நினைக்கிறார். ஹீரோயினோ ஹீரோவை தப்பா நினைக்கிறார். வில்லனுக்கும் ஹீரோயினுக்கும் கல்யாணம் நடக்குமா? அல்லது ஹீரோ இந்தக் கல்யாணத்தை நிறுத்திடுவாரா? ஹீரோவும் ஹீரோயினும் சேருவாங்களாங்கிறதெல்லாம் இனிமேதான் தெரியும். உடனடியா ஒரு ட்விஸ்ட்னா, ஹீரோயினுக்கும் வில்லனுக்கும் நிச்சயதார்த்தம் முடிஞ்சிட்ட சூழல்ல, வில்லன் அவசரப்பட்டு ஒரு ராங் ரூட்டைத் தேர்ந்தெடுக்கிறார். நாலஞ்சு நாள்ல அது நடக்கும். கதையில அது பெரிய திருப்பமா இருக்கும்''என்கிறார் இயக்குநர்.

அடுத்த வாரம் வேறொரு ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்திப்போம்...