Published:Updated:

`ப்ளீஸ் எனக்காகச் சேர்ந்து வாழுங்க..!’ - `தாடி' பாலாஜி மனைவியிடம் உருகிய சிம்பு #VikatanExclusive

அய்யனார் ராஜன்
`ப்ளீஸ் எனக்காகச் சேர்ந்து வாழுங்க..!’ - `தாடி' பாலாஜி மனைவியிடம் உருகிய சிம்பு #VikatanExclusive
`ப்ளீஸ் எனக்காகச் சேர்ந்து வாழுங்க..!’ - `தாடி' பாலாஜி மனைவியிடம் உருகிய சிம்பு #VikatanExclusive

டிவி ரியாலிட்டி ஷோவில் `தாடி' பாலாஜியின் மனைவி நித்யா வெடித்து அழுதபோதே வீட்டுக்குள் கணவன் மனைவிக்கிடையே பிரச்னை எனத் தெரிந்தது. `இல்லை, இது சேனல் ரேட்டிங்குக்காக' என முதலில் மறுத்தார் பாலாஜி. திடீரென ஒரு நாள் பாலாஜி தன்னைக் கொடுமைப்படுத்துவதாகப் போலீஸில் புகார் அளித்தார் நித்யா; வழக்கும் பதியப்பட்டது. தொடர்ந்து மனைவி குறித்து சில புகார்களை வாசித்தார் பாலாஜி. இந்த விவகாரத்தில் லேட்டஸ்ட் அப்டேட்டாக, பாலாஜிக்கும் அவரின் மனைவிக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டைக் களைந்து, அந்தக் குடும்பத்தைச் சேர்க்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. விவகாரத்தில் தானாகவே முன்வந்து அந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் சிம்பு.

சிம்பு பேசியது குறித்து, ``திடீர்னு ஒருநாள் ஒரு நம்பர்லயிருந்து போன் வந்தது. `நான் சிம்பு பேசறேன் சிஸ்டர். பாலாஜி விஷயமா கொஞ்சம் பேசலாமா'ன்னு கேட்டாங்க. சிம்பு சார் வாய்ஸ்தான். ஆனா, மிமிக்ரியில யார் வேணாலும் பேசலாமே... அதுவும்போக பாலாஜி இதுக்கு முன்னாடி பலபேரை விட்டு இப்படிப் பேச வச்சிருக்கார். அதனால, `சிம்பு பேசறேன்'னு வம்பு பேசாதீங்க; போலீஸ்ல புகார் பண்ணிடுவேன்'னு சொல்லிட்டு, போனைக் கட் பண்ணிட்டேன். மறுபடியும் கால் வந்திச்சு. `நானேதான், நம்புங்க சிஸ்டர்’னு சொன்னதும், `அப்ப வீடியோ கால் வாங்க'னு சொன்னேன். `சரி'னு வீடியோ கால்ல வந்தார்.

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பேசினார். ஆரம்பத்துலயிருந்து எங்க விவகாரத்தைக் கவனிச்சிட்டே வந்திருக்கார். 'வீடு'னு இருந்தா பிரச்னை இருக்காதா', 'நாம கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போகலாம்', 'நீங்க உங்க பொண்ணோட டிவி-யில வந்ததைப் பார்த்தபோது மனசுக்கு கஷ்டமா இருந்தது. அந்தக் குழந்தை முகத்துக்காகப் பார்க்கக் கூடாதா'ங்கிற மாதிரி நிறைய பேசினார். கூடவே, நான் பேசின எல்லாவற்றையும் பொறுமையாக் கேட்டார். கடைசியா, 'உங்க குழந்தைக்காகவும் அதே நேரம் எனக்காகவும் இந்த ஒரு முறை பாலாஜியை மன்னிச்சு, சேர்ந்து வாழுங்க'னு கேட்டுக்கிட்டார்.

`என்னைப் பற்றி வெளியில அவதூறா நிறைய பேசிட்டார்; அதுக்கெல்லாம் திறந்த மனதோட மன்னிப்புக் கேட்பாரா'னு நான் கேட்டேன். அதுக்குப் 'பேசறேன்மா'ன்னார். அதேபோல, `பிரச்னை தொடங்கினப்ப டி.ராஜேந்தர் சார்தான் `ஜோடி' ஷோவுல ஜட்ஜா இருந்தார். அவர் என்னையும் அவரையும் கேரவனுக்குள்ள கூப்பிட்டு ரெண்டு மணி நேரம் பேசினார். அப்ப எல்லாத்துக்கும் தலையாட்டிட்டு, வெளியில வந்ததும் பழைய குணத்தைக் காண்பிச்சார் பாலாஜி'ன்னு சொன்னேன்.

அதுக்குச் சிரிச்சிகிட்டே, `அப்பா பரமசிவன், நான் அவரோட கோபக்கார மகனான முருகன்னு நினைச்சுக்கோங்க. என் பேச்சை நிச்சயம் கேட்பார் பாலாஜி. ஒருவேளை இந்த முறை ஒழுங்கா நடக்காட்டி, அப்புறம், நானே உங்களுக்கு சப்போர்ட்டா நிற்கிறேன்'ன்னார்.

பெரிய ஸ்டார் அவர். இந்த விவகாரத்துல இன்வால்வ் ஆகணும்னு என்ன அவசியம். இத்தனைக்கும் பாலாஜி சொல்லி பேசியிருப்பார்னு நான் நம்பலை. ஏன்னா, சிம்பு சார் படம் ஒண்ணுலகூட பாலாஜி நடிச்சதில்லை. `கலக்கப்போவது யாரு' ஷோவுல சிம்பு சார் கெஸ்டா போயிருக்கார்... அவ்ளோதான். அதனால, அவர் கேட்டுக்கிட்டும் என்னால உடனடியா சாதகமான பதிலைச் சொல்ல முடியலையேனு நினைக்கிறப்ப, கொஞ்சம் வருத்தமாத்தான் இருந்திச்சு'' என்கிறார் நித்யா.

பாலாஜி குடும்பம் இணையுமா சிம்பு முயற்சி பலிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.