Published:Updated:

" 'தாலி' மேட்டர் என்ன ஆகப்போகுது தெரியுமா?!" - 'நிறம் மாறாத பூக்கள்' ஷூட்டிங்ல மீட்டிங் - பகுதி 4

அய்யனார் ராஜன்

நிறம் மாறாத பூக்கள் தொடர் ஷூட்டிங்கில் அரட்டை

" 'தாலி' மேட்டர் என்ன ஆகப்போகுது தெரியுமா?!" - 'நிறம் மாறாத பூக்கள்' ஷூட்டிங்ல மீட்டிங் - பகுதி 4
" 'தாலி' மேட்டர் என்ன ஆகப்போகுது தெரியுமா?!" - 'நிறம் மாறாத பூக்கள்' ஷூட்டிங்ல மீட்டிங் - பகுதி 4

கூகுளே திசை காட்டத் திணறியதால், வழி நெடுக விசாரித்தபடி, சென்னை திருவேற்காட்டை அடுத்துள்ள பெரிய கோளடி கிராமத்தைக் கண்டுபிடித்து, ஊருக்குள் நாம் நுழைந்தபோது, சூரியன் நடு வானத்துக்கு வந்திருந்தது. 'தெக்கடைசியில ஒரேயொரு பெரிய வீடு இருக்கும். அங்கதான் ஷூட்டிங் நடக்குது' எனக் கை காட்டினார்கள், கிராம மக்கள். அது 'நிறம் மாறாத பூக்கள்' தொடரின் ஷூட்டிங் ஸ்பாட். ஷூட்டிங்ல மீட்டிங் பகுதிக்காகச் சென்றிருந்தோம்.

நடிகை நீலிமா ராணி மையமாக அமர்ந்திருக்க, 'நாளைக்கு கிழக்கு கடற்கரைச் சாலையில் ஷூட்டிங். பனையூர் போலீஸ்ல பெர்மிஷனுக்கு அப்ளை பண்னோம். அதை ஃபாலோ செய்யணும்' என உதவியாளர் அவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார். 'அடுத்த ஷெட்யூல் ப்ளான் பண்ணீட்டிங்களா? ஆர்ட்டிஸ்ட், லொகேஷன் ஃபைனல் ஆகிடுச்சா?, டைரக்டர்கிட்ட கன்ஃபார்ம் பண்ணீட்டீங்களா?.. - இப்படி அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

'சீரியல் தயாரிப்பு அனுபவம் எப்படி இருக்கிறது?' என்றோம்.

''பரபரப்பா இருக்கு. கொஞ்சம் எக்ஸ்ட்ரா வேலை. ஆனா, பழகிட்டேன். சப்போர்ட்டா கணவரும் நல்ல டீமும் இருக்கிறதால எதுவும் சிரமமா தெரியலை. நம்மளோட வேலை, லாபம் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் மக்களுக்குப் பிடிச்ச நல்லவொரு சீரியலைத் தரணும்கிறது முக்கியமான நோக்கம். அதை நோக்கி சரியா பயணிச்சிட்டிருக்கோம்னு நம்புறேன்' என்றவர், 'ஷூட் போயிட்டிருக்கு, பார்க்கலாம்' என நம்மை முதல் தளத்துக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு இரண்டு ஹீரோயின்களில் ஒருவரான விஷ்ணுப்ரியாவுக்குக் காட்சியை விளக்கிக் கொண்டிருந்தார் இயக்குநர் நீராவிப் பாண்டியன்,

'எங்க ஹீரோ முரளி, முருகக் கடவுள் மாதிரி. வள்ளி, தெய்வானை மாதிரி ரெண்டு ஹீரோயின் இருக்காங்க. ஒருத்தர் பெங்களூர்ல இருந்தும் இன்னொருத்தர் ஹைதராபாத்ல இருந்து வந்திருக்காங்க. இவங்ககிட்ட இருந்து தமிழ்ல டயலாக்கை வாங்குறதுக்குள்ள எங்க அசிஸ்டன்ட் டைரக்டர்கள் டயர்டு ஆகிப் போயிடுறாங்க. நீங்க எப்படிப் பேசுவீங்களோ...' என்றார்.

'நான் வேணும்னா எங்க அண்ணிகளுக்கு ட்ரான்ஸ்லேட்டரா இருக்கட்டுமா' என வாலண்டியராக வந்து சிக்கினார், கீதாஞ்சலி. ஹீரோ முரளியின் தங்கை. 'நாதஸ்வரம்' தொடரில் 'மகா' கேரக்டரில் அறிமுகமாகி கவனம் பெற்றவர். முதல் முறையாக பகல்நேர சீரியலில் நடிக்கிறார்.

`அண்ணிகளிடம் பிறகு பேசலாம்; முதல்ல உங்க மேட்டரைப் பேசலாம். இந்த சீரியல்ல முதல் எபிசோடுல இருந்து நடிக்கிறீங்க. நூறு எபிசோடு கடந்தும் இன்னும் ஒருநாள்கூட கிளிசரின் பயன்படுத்தியதில்லைனு சொல்றாங்களே, உண்மையா?' என்றோம்.

``ஆமா சார். எனக்கே ஆச்சர்யமாதான் இருக்கு. முதன் முதலா நான் அறிமுகமான 'நாதஸ்வர'த்துல முதல்ல லவ் ஃபெயிலியர் ஆகும். அதுக்குக் கொஞ்சநாள் அழுதுட்டிருப்பேன். பிறகு சரியில்லாத புருஷன் அமைஞ்சிடுவான். அதோட பாதிப்புனு கொஞ்ச காலம் அழுதேன். இப்படி முக்கால்வாசி நாள் அந்த சீரியல்ல அழுகாச்சி சீனாவே போச்சு. ஒருவழியா அந்தத் தொடர் முடிஞ்சுதா, அடுத்து 'வாணி ராணி'யில கமிட் ஆனேன். அங்க போன பிறகு 'நாதஸ்வர'மே தேவலைனு தோணுச்சு. அந்தளவுக்கு அழுகை சீன். ரெண்டையும் முடிச்சுட்டு இங்க வந்தா, ரொம்பவே வித்தியாசமா இருக்கு. இதுவரை கிளிசரினை என் கண்ணுலேயே காட்டலை. எனக்கே அதை மிஸ்பண்ற மாதிரி ஒரு ஃபீலிங் வந்திடுச்சுன்னா பாருங்க' என்றவரிடம், லஞ்ச் பிரேக் அரட்டைகள் குறித்துக் கேட்டோம்.

``முரளியும் நானும் நிறைய டப்ஸ்மாஷ் பண்ணுவோம். எங்க டைரக்டர் சார் பார்க்குறதுக்குக் கொஞ்சம் டெரரா தெரிவார். பேசறப்ப கோபமாப் பேசற மாதிரியும் தெரியும். ஆனா, கடைசியில அது காமெடியில போய் முடியும். அதனால அவரு எங்களைக் கலாய்க்கிறதும், நாங்க அவரைக் கலாய்க்கிறதுமா ஏரியாவே ஜாலியாப் போகும். 'தாட்சாயினி' மேடம்தான் 'டைரக்டர்'ங்கிற மரியாதை வேண்டமா'னு அப்பப்ப செல்லமா கண்டிப்பாங்க. அவங்க யாருனு சொல்லலையே, 'அண்ணாமலை'யில ரஜினி சார் மகளா நடிச்சிருப்பாங்களே, அவங்களேதான். இந்த சீரியல்ல என்னோட அம்மாவா நடிச்சிருக்காங்க. ரஜினி சார், மீனா மேம்கூட நடிச்ச அனுபவங்களை ஷேர் பண்ணினாங்க'' என்கிறார்.

இரண்டு ஹீரோயின்களில் ஒருவரான விஷ்ணுப்ரியாவிடம் பேசினோம்.

``தெலுங்குல சீரியல் பண்ணிட்டிருக்கேன். தமிழ் சீரியல்ல நடிக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. அந்த ஆசை இப்ப நிறைவேறிடுச்சு. அதேபோல கன்னியாகுமரியைப் பார்க்கணும்னும் ஆசையா இருந்திச்சு. இந்த சீரியல் அதையும் நிறைவேத்திடுச்சு. ஆரம்பத்துல அந்த ஊர் பக்கத்துலதான் ஷூட்டிங் நடந்துச்சு'' என இவர் பேசிக்கொண்டிருந்தபோதே குறுக்கிடுகிறார், தொடரின் ஹீரோ முரளி ஆர்.கே..

`இவங்களை (இன்னொரு ஹீரோயின் நிஷ்மாவைக் காட்டி) கேட்டா, 'எனக்கு சென்னையைப் பார்க்க ஆசையா இருந்தது, அது நிறைவேறிடுச்சு'னு சொல்வாங்க. அடடா என்ன இது? ரெண்டு பேரும் தமிழ் தெரியாம சென்னையில வந்து இறங்கி திருதிருனு முழிச்ச அனுபவம், ஷூட்டிங் ஸ்பாட்டுல டைரக்டர்கிட்ட திட்டு வாங்கினது.. இப்படி இன்ட்ரஸ்டிங்கா எடுத்து விடுவீங்களா, அதை விட்டுட்டு கன்னியாகுமரியில ஷூட்டிங் நடந்திச்சு, வள்ளுவர் சிலையைப் பார்த்தேன்'னு என்னம்மா இப்படிப் பேசறீங்களேம்மா.' என முரளி நிறுத்த, தொடர்ந்தார் விஷ்ணுப்ரியா..

``ஆக்சுவலா எனக்கு தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில ஒரு ரவுண்ட் வரணும்கிறதுதான் ஆசை. அதுவும் சிவகார்த்திகேயன் ஜோடியா நடிக்கணும். அவரும் டெலிவிஷன்ல இருந்து வந்தவர்தானாமே?' என்றார்.

'அடிச்சா மொட்டை, வெச்சா குடுமி'னு சொல்வாங்களே, இதுதான் ப்ரோ... இந்தப் பூனையும் பால் குடிக்குமாங்கிற மாதிரி முகத்தை வெச்சுகிட்டுப் பேசுவாங்க. 'அட பரவால்லம்மா'ன்னதும், சிவகார்த்திகேயன் வேணுமாம்! ஏன் தல தளபதியோட ஜோடி சேர ஆசை இல்லையா' - கலாய்க்கிறார் முரளி.

``விஷ்ணுப்ரியாவும் நிஷ்மாவும் செட்டில் செம ஜாலி பொண்ணுங்க, இருவரும் பரஸ்பரம் அறிமுகமானதே இந்தத் தொடரில்தான். கதைப்படி இருவருமே ஹீரோவைக் காதலிக்கிறார்கள். ஆனால் பிரேக்கில் இருவரும் அவ்வளவு திக் ஃப்ரெண்ட்ஸ்" என்கிறது, யூனிட்.

நிஷ்மாவிடம் பேசினோம்.

``இங்க ஃபேமஸான எங்க ஊரு அண்ணியாரைப் பார்த்தே எனக்கு தமிழ் சீரியல்மேல ஆசை உண்டாச்சு. இப்ப சீரியலுக்குள்ள வந்தபிறகு எங்க புரொடியூசரைப் பார்த்து அவங்களைப்போல ஃபீல்டுல மேல வளரணும்கிற ஆவல் வந்திருக்கு. சைல்ட் ஆர்ட்டிஸ்டா இருந்து டி.வி, சினிமா ரெண்டுலேயுமே டிராவல் பண்ணினபடி அடுத்தகட்டத்துக்கு உயர்ந்திருக்கிற அவங்கதான் என்னை ஆச்சர்யப்படுத்துறாங்க. என்னோட ரோல் மாடலாகவும் அவங்களை நினைக்கறேன்'' என்கிறார், நிஷ்மா.

`இங்க இருக்கிற எல்லாருக்குமே பாசிட்டிவான ரோல்கள் என்கிற மாதிரி தெரிகிறதே, சீரியலில் வில்லிகள் இல்லையா?' - சந்தேகத்தைக் கேட்டோம்.

``இப்ப ஒரு ட்ரெண்ட் இருக்கு. டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட்னாலே தனியா வில்லினு ஒருத்தவங்க இருக்கமாட்டாங்க. தனியா ஒரு ஆள் எதுக்கு? போற போக்குல ரெண்டு ஹீரோயின்ல ஒருத்தர் வில்லியாகிடப் போறாங்க' என்ற கீதாஞ்சலி, 'அதனால, யாராச்சும் டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட்னா கொஞ்சம் உஷாராதான் இருக்கணும்' எனக் கமென்ட் அடிக்க, அந்த இடம் முழுக்கச் சிரிப்புச் சத்தம்.

`டைரக்டர், புரொடியூசர் யார் இருந்தாலும் கவலை இல்லை. இப்படித்தான் எங்க யூனிட் பழகிட்டிருக்கு' என்றபடி அங்கு வந்த நீலிமா ராணி,

''மூணு சீரியல்ல நடிச்சிட்டிருக்கேன். படங்களும் போயிட்டிருக்கு. இந்த வேலைகளுக்கிடையே இந்த சீரியலும் எந்தப் பிரச்னையும் இல்லாமப் போயிட்டிருக்குன்னா, யூனிட்டை அதுபோக்குல விட்டதுதான் காரணம். நடிச்சுட்டுப் போயிட்டிருந்த வரைக்கும் ஷூட்டிங் பேக் பண்ணியாச்சுனா நம்ம பாட்டுக்குக் கிளம்பிடலாம். இப்ப அப்படியில்லை. கதையில தினம் தினம் விருந்து வெச்சுகிட்டே இருந்தாதான், சீரியல் மக்கள் மனசுல நிற்கும். அதை என்னனு கவனிக்கணும். இந்தமாதிரிப் பல விஷயங்கள் இருக்கு'' என்றார்.

தாட்சாயினியிடம் பேசியபோது, 'சில ஆர்ட்டிஸ்டுகள் பகல் நேரம் ஒளிபரப்பாகிற சீரியல்கள்ல நடிக்கணும்னா தயங்குறாங்க. எதுக்குத் தயங்கணும்? பகல்நேர சீரியல்களைப் பார்க்குறவங்க நமக்கு நிரந்தரமான ஆடியன்ஸ்னு நினைச்சா, அந்தத் தயக்கம் போயிடும். இதைத்தான் புதுசா வர்ற ஆர்ட்டிஸ்ட்கள்கிட்ட நான் சொல்லிட்டிருக்கேன்' என்றார்.

இரண்டு மணி நேரம் நமக்காக ஷூட்டிங்கை நிறுத்தி வைத்திருந்த இயக்குநர் நீராவிப் பாண்டியனிடம் தொடரில் அடுத்து நடக்க இருக்கும் பரபரப்பான எபிசோடுகள் குறித்துக் கேட்டோம்.

ஹீரோ முரளி முதல்ல முட்டத்துல இருக்கிறப்ப விஷ்ணுப்ரியாவைக் காதலிக்கிறார். அப்ப அவருக்கு ஒரு ஆக்சிடென்ட். அதன் விளைவால் பழைய நினைவுகள் மறந்து போகும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். அதே நிலையோடு சென்னை வந்துட, அங்கு நிஷ்மாவைச் சந்திக்க, பழைய நினைவுகள் இல்லாததால அவரையும் காதலிக்கிறார். காதலிச்சவனைக் காணோம்னு சென்னைக்குத் தேடி வர்ற விஷ்ணுப்ரியா மறுபடியும் முரளியைச் சந்திக்கிறாங்க. ஒரு இக்கட்டான சூழல்ல முரளி விஷ்ணுப்ரியாவுக்குத் தாலி கட்டிட, அந்தத் தாலியோடவே ஹீரோவோட வீட்டுக்குள்ளே வந்துடுறாங்க, விஷ்ணுப்ரியா. இதுவரை இப்படிப் போயிட்டிருக்கு. அந்தத் தாலி மேட்டர் வீட்டுல எல்லாருக்கும் தெரியப் போறதுதான் அடுத்த திருப்பம். அதுக்குப் பிறகு என்னெவெல்லாம் நடக்கும்கிறதைத் தொடர்ந்து பாருங்க' என்கிறார், நீராவிப் பாண்டியன்.