Published:Updated:

“யாரையும் புண்படுத்த விரும்பலை..!" ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ ஆர்யா! ஃபைனலில் நடந்தது என்ன?

அய்யனார் ராஜன்

`எங்க வீட்டு மாப்பிள்ளை' இறுதி நாள் ஷூட்டிங்கில் என்ன நடந்தது?

“யாரையும் புண்படுத்த விரும்பலை..!"  ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ ஆர்யா! ஃபைனலில் நடந்தது என்ன?
“யாரையும் புண்படுத்த விரும்பலை..!" ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ ஆர்யா! ஃபைனலில் நடந்தது என்ன?

கடந்த பிப்ரவரியில் தமிழில் ஒளிபரப்பைத் தொடங்கிய `கலர்ஸ் தமிழ்' சேனல். அதில் அமர்க்களமாக அறிமுகப்படுத்தப்பட்ட ஷோ, `எங்க வீட்டு மாப்பிள்ளை. நிகழ்ச்சியின் மூலம் நடிகர் ஆர்யா திருமணம் செய்துகொள்வார் என அறிவித்தார்கள். `இந்த ஷோவில் கலந்து கொண்டு, ஆர்யாவைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறவர்கள், தங்கள் விவரங்களைப் பதிவுசெய்ய பிரத்யேகமாக வெப்சைட் உருவாக்கப்பட்டது. ஒரு லட்சம் அழைப்புகள் வந்தன. ஏழாயிரம் பேர் பதிவு செய்தார்கள். பலகட்டப் பரிசீலனைக்குப் பிறகு 16 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அந்தப் பதினாறு பேரும் ஷோவில் கலந்துகொள்ள, மொத்தம் 41 எபிசோடுகளாக ஒளிபரப்பாகின. ஆரம்ப எபிசோடுகள் ஜெய்ப்பூர் அரண்மனைகளில் ஷூட் செய்யப்பட்டன. போட்டியாளர் ஆர்யாவிடம் மனம் விட்டுப் பேசினார்கள், அந்தப் பெண்களிடம் ஆர்யாவும் தன் கடந்த காலம் குறித்து, தான் கடந்து வந்த பாதை குறித்து... என எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டார். சில பெண்கள் ஆர்யாவை `வாடா போடா' எனச் செல்லமாக அழைத்துப் பேசினார்கள். சிலர் கொஞ்சினார்கள். அபர்ணதி எலிமினேஷன் ஆனபோது கெஞ்சினார். பதினாறு பேரில் முதல்கட்ட எலிமினேஷனில் 11 பேர் வெளியேற, மீதமுள்ள ஐந்து பேரில் யாரை ஆர்யா கரம் பிடிக்கப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எகிறியது.

அந்த ஐந்து பேரின் வீடுகளுக்கும் `ஹோம் விசிட்' போனார், ஆர்யா. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியை எதிர்த்த சில மகளிர் அமைப்புகள் இந்த ஹோம் விசிட்டின் போது நேரடியாக ஸ்பாட்டுக்குச் சென்று ஆர்யாவையும் நிகழ்ச்சியையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கும்பகோணம் மற்றும் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் ஷூட்டிங் நடத்தவே சிரமப்பட்டது யூனிட். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட சுசானாவின் உறவினர்களைச் சந்திக்கச் சென்றபோது, யாழ்ப்பாணம் நூலகம், எல்.டி.டி.இ மற்றும் இலங்கை ராணுவத்துக்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த இடங்களில் படப்பிடிப்பை நடத்தினார்கள்.

ஹோம் விசிட் முடிந்ததும், ஐந்து பேரில் இரண்டு பேர் எலிமினேட் ஆனார்கள். கடைசியில் சுசானா, சீதாலக்ஷ்மி, அகதா மூவரும் இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள... அதில், தான் மணக்கப் போகிறவரை அறிவிப்பார் ஆர்யா என்றார்கள்.

இதற்கிடையில் நிகழ்ச்சியின் இயக்குநர் பிரகாஷும் `ஷோ அப்டேட்ஸ்' குறித்து நம்மிடம் பேசியபோது, `ஷோ முடிவில் ஆர்யா கல்யாணம் நடக்குமா?' என்கிற கேள்விக்கு எந்தவோர் உறுதியான பதிலையும் தரவில்லை.

இந்த நிலையில், இன்று (17/04/2018) ஒளிபரப்பாக உள்ள கிராண்ட் ஃபினாலே எபிசோடுகான ஷூட்டிங் சில நாள்களுக்கு முன் நடந்தது. அப்போது, கடைசி நிமிடத்தில் யாரும் எதிர்பாராத முடிவை எடுத்த ஆர்யா, சேனல் உட்பட அனைவருக்கும் அதிர்ச்சி தந்திருக்கிறார். அந்த முடிவு, இதுதான்..

``என்னோட வாழ்க்கையை முடிவு செய்றதா அறிவிக்கப்பட்ட இந்த ஷோவுல, இவ்ளோ எபிசோடுகள் டெலிகாஸ்ட் ஆனதுல இருந்து என்னால டிசைட் பண்ண முடியலை. எனக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுது. அதுபோக, இந்த ஷோவுக்கு வந்த எல்லாருமே என்னைப் பிடிச்சு வந்தாங்க. என்னோட மனம் விட்டுப் பேசினாங்க. நானும் அவங்ககிட்ட உண்மையாகவே நடந்துக்கிட்டேன். ஸோ, அவங்க யாரையுமே நான் ஹர்ட் பண்ண விரும்பலை. அதனால, என்னோட மேரேஜ் பத்திக் கொஞ்சம் யோசிச்சு, கூடிய சீக்கிரமே சொல்லிடுறேன்!"