Published:Updated:

''எதுக்கு என் படத்துல நடிக்கலைனு கே.எஸ். ரவிக்குமார் கேட்டார்!" - பாவனா

கு.ஆனந்தராஜ்

``படிச்சிருந்தா என்னவாகியிருப்பேன்னு தெரியலை. அதேநேரம், படிக்காததால மோசமான நிலைக்கும் போயிடலை. படிப்புக்கும், திறமைக்கும் சம்பந்தம் இல்லைனு நம்புற ஆட்கள்ல நானும் ஒருத்தி."

''எதுக்கு என் படத்துல நடிக்கலைனு கே.எஸ். ரவிக்குமார் கேட்டார்!" - பாவனா
''எதுக்கு என் படத்துல நடிக்கலைனு கே.எஸ். ரவிக்குமார் கேட்டார்!" - பாவனா

``தமிழ்ல பெரிய இடைவெளி விழுந்திடுச்சு. நல்ல ரோலுக்காகத் தொடர்ந்து வெயிட் பண்ணிட்டு இருக்கேன். சீக்கிரமே தமிழ்ல ரீ-என்ட்ரி கொடுப்பேன்னு நம்புறேன்" எனப் புன்னகையுடன் பேசுகிறார் நடிகை பாவனா. குழந்தை நட்சத்திரம், கேரக்டர் ரோல்களில் நடித்து சினிமாவில் புகழ்பெற்றவர், தற்போது தெலுங்கு சின்னத்திரையில் பிஸி.

``எப்படி இருக்கீங்க? என்ன பண்றீங்க?" 

``நல்லா இருக்கேன். ரெண்டாவது குழந்தை பிறந்ததும் சின்ன பிரேக் எடுத்தேன். அடுத்து, சரியான வாய்ப்புகள் அமையலை. அதனால சில வருஷமா தமிழ்ல இடைவெளி ஏற்பட்டுடுச்சு. அதேசமயம் தெலுங்கில் சீரியல்கள்ல தொடர்ந்து நடிச்சுகிட்டு இருக்கேன். தொகுப்பாளராகவும் வொர்க் பண்ணிட்டு இருக்கேன்."

``குழந்தை நட்சத்திரமா நடிச்ச அனுபவம் பற்றி..."

``என் நாலு வயசுல, `குட்ரா'ங்கிற தெலுங்கு படத்தில் நடிக்க ஆரம்பிச்சேன். அதில் நான் அர்ஜுன் சார் பொண்ணு. அப்புறம் `கிழக்கு வாசல்', `தெய்வ வாக்கு' படங்கள்ல குழந்தைப் பருவ ரேவதியா நடிச்சேன். அடுத்தடுத்து `பாட்டு வாத்தியார்', `தாய்நாடு' உள்ளிட்ட நிறைய படங்கள்ல நடிச்சேன். `தேவர் மகன்' படத்தில் நாசர் சார் பொண்ணா நடிச்சேன். படத்தில் என் போர்ஷன் காட்சியை நிறையவே கட் பண்ணிட்டாங்க. கமல்ஹாசன் சார் இயக்கின `மகாநதி' படம், அப்புறம் தெலுங்குலயும் சோபன் பாபு, சிரஞ்சீவி உள்ளிட்ட பல பெரிய ஸ்டார்களுடன் பல படங்கள்ல நடிச்சேன்."

``அப்போ ஸ்கூல், காலேஜ் படிப்பெல்லாம் பாதிக்கலையா?"

``அட போங்க. நான் ஸ்கூலே முழுசா முடிக்கலை. காலேஜ் பக்கம் போனதே இல்லை. நான்காம் வகுப்பு எக்ஸாம் முடிச்சதுமே, நான் சரியா வர்றதில்லைனு ஸ்கூலைவிட்டு என்னை நிறுத்திட்டாங்க. என் பூர்வீகம், ஆந்திரா. அடுத்தடுத்து வாய்ப்புகள் வர சென்னைக்கே வந்துட்டோம். பிஸியா நடிச்சுகிட்டே, கரஸ்ல பத்தாவது படிச்சேன். அப்புறம் படிப்புக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தமாகிடுச்சு. நான் ஓர் உண்மை சொல்லட்டா? தமிழ், தெலுங்கு, இங்கிலீஸ்னு மூணு மொழியிலயும் சூப்பரா பேசுவேன். ஆனா, அதையெல்லாம் எழுத்துக்கூட்டித்தான் படிக்கத் தெரியும். அதை மத்தவங்களுக்குத் தெரியாம மேனேஜ் பண்ணிடுவேன். அப்படியிருந்தும் இப்போவரை வெளிநாடுகளுக்குப் போய் டான்ஸ் பர்ஃபார்மன்ஸ் பண்ணிட்டு இருக்கேன். படிச்சிருந்தா என்னவாகியிருப்பேன்னு தெரியலை. படிக்காததால மோசமான நிலைக்கும் போயிடலை. படிப்புக்கும், திறமைக்கும் சம்பந்தம் இல்லைனு நம்புற ஆட்கள்ல நானும் ஒருத்தி."

`` `மின்சார கண்ணா' படத்தில் விஜய் உடன் நடித்த அனுபவம்..."

``இன்னொரு சீக்ரெட் சொல்றேன். `படையப்பா' படத்தில் ரஜினிகாந்த் சாருக்கு ரெண்டு பொண்ணுங்க. அதில், ஒரு பொண்ணா நடிக்கும் வாய்ப்பு முதலில் எனக்கு வந்துச்சு. நானும் ஒப்புக்கிட்டேன். ஆனா, உரிய நேரத்துல அந்தப் படக்குழு சார்பில் எந்த அழைப்பும் வரலைனு வேற படங்கள்ல நடிச்சுட்டு இருந்தேன். அதனால அந்த கேரக்டர்ல என்னால நடிக்க முடியலை. ஒருமுறை கே.எஸ்.ரவிக்குமார் சார் என்னைக் கூப்பிட்டிருந்தார். அப்போ, ` `படையப்பா' படத்துல வாய்ப்புக் கொடுத்தும் ஏன் நடிக்க ஒத்துக்கலை?'னு கேட்டார். `நான் ரெடியா இருந்தேன். ஆனா, முறையா எனக்கு எந்த அழைப்பும் வரலை. என் மேல எந்தத் தப்பும் இல்லை சார்'னு சொன்னேன். `அப்போ ஏதாச்சும் குளறுபடிகள் நடந்திருக்கும்'னு அவர் சொன்னார். பிறகுதான், `மின்சார கண்ணா' படத்தில் விஜய் சாரின் தங்கச்சியா நடிக்க வெச்சார். நடிச்ச அனுபவமே இல்லாம, கலகலப்பா ஒரு நிகழ்ச்சியில பர்ஃபார்ம் பண்ணின மாதிரி அந்தப் படத்தில் நடிச்சு முடிச்சேன்." 

`` `மானாட மயிலாட' நிகழ்ச்சியில் போட்டியாளர் அனுபவம் பற்றி..." 

``சின்ன வயசுல கொஞ்ச நாள் டான்ஸ் கத்துக்கிட்டேன். பிறகு எந்த டான்ஸ் அனுபவமும் இல்லை. நடிகர் ராஜ்காந்த், சஞ்சீவ் இருவரும் என் ஃப்ரெண்ட்ஸ். அவங்க மூலமாதான், `மானாட மயிலாட' நிகழ்ச்சியின் சீசன் 1-ல் கலந்துக்கிட்டேன். அப்போதான் கஷ்டப்பட்டு டான்ஸ் கத்துக்கிட்டேன். சில எபிசோடுல ரிஜக்ட் ஆகிடுவோம்னு நினைச்சேன். ஆனா, எப்படியோ ஃபைனல்ல மூணாவது இடம் பிடிச்சேன். தொடர்ந்து தெலுங்கு சேனல்களின் டான்ஸ் நிகழ்ச்சிகள்ல இப்போவரை ஆடிட்டு இருக்கேன். இப்போ என்னையும் டான்ஸையும் தவிர்க்க முடியாது."

``தமிழ்ல எப்போ கம்பேக் கொடுக்கப் போறீங்க?"

``சினிமாவுல நிறைய நடிச்சுட்டேன். ஒருகட்டத்தில் சீரியல்ல என்ட்ரி ஆனேன். சன் டிவி `மேகலா', `உறவுகள்' நல்ல அடையாளம் கொடுத்துச்சு. மறுபடியும் பெரிய பேனர் சீரியல்ல நடிக்க ஆசை." 

``ஃபேமிலி பற்றி..."

``கணவர் விஜய் கிருஷ்ணா, சீரியல் மற்றும் விளம்பரப் பட இயக்குநர். எங்களுக்கு காயத்ரி, சரயுனு ரெண்டு பொண்ணுங்க. ஃபேமிலி லைஃப் சூப்பரா போயிட்டிருக்கு."