Published:Updated:

``அப்போ ஹன்சிகா ஃப்ரெண்ட்... இப்போ தமிழ் சீரியல் ஹீரோயின்!" - `ரோஜா’ பிரியங்கா

கு.ஆனந்தராஜ்

`பிறருக்கு உதவுறது, ஃப்ரெண்ட்லியான மற்றும் குறும்புத்தனம் நிறைஞ்ச குணம், ரோஜாவினுடையது. அந்தக் குணமும் என் குணமும் கிட்டத்தட்ட ஒண்ணுதான். இப்போ, என்னைவிட ரோஜாதான் எல்லோரையும் இம்ரஸ் பண்ணுகிறாள்."

``அப்போ ஹன்சிகா ஃப்ரெண்ட்... இப்போ தமிழ் சீரியல் ஹீரோயின்!" - `ரோஜா’ பிரியங்கா
``அப்போ ஹன்சிகா ஃப்ரெண்ட்... இப்போ தமிழ் சீரியல் ஹீரோயின்!" - `ரோஜா’ பிரியங்கா


 

"தமிழ் கொஞ்சம் கொஞ்சம்தான் தெரியும். தெலுங்கு, ஆங்கிலம், தமிழ் என மூணும் கலந்து பேசுவேன். ஏதாச்சும் புரியலைன்னா மேனேஜ் பண்ணிக்கோங்க" எனக் கொஞ்சும் தமிழில் புன்னகையுடன் பேசுகிறார் பிரியங்கா. சன் டிவி `ரோஜா' சீரியலின் நாயகி.

"உங்க ஆக்டிங் பயணம் எப்படித் தொடங்கிச்சு?"

"என் பூர்வீகம், ஹைதராபாத். சின்ன வயசுலயிருந்தே டான்ஸ்தான் என் எவர் டைம் ஆக்டிவிட்டி. நிறைய புரோகிராம்களில் கலந்துப்பேன். எட்டாவது படிச்சுகிட்டிருந்தபோது, `அண்டாரி பந்துவாயா' என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயின் பத்மபிரியாவுக்கு தங்கச்சியா நடிச்சேன். அந்தப் படத்தில் ஆக்டிங், டான்ஸ்னு கலக்கினேன். அடுத்தடுத்து நிறைய சினிமா வாய்ப்புகள் வந்துச்சு." 

"இதனால் படிப்பு பாதிக்கலையா?"

"ஸ்கூல் படிக்கிறப்போ ரொம்ப நல்லா படிச்சுகிட்டிருந்தேன். காலேஜ் படிக்கிறப்போ ஆவரேஜ் ஸ்டூடன்ட் ஆகிட்டேன். ரெகுலர்ல பி.காம் முடிச்சேன்.  நடிப்புக்கு சின்ன பிரேக் கொடுத்துட்டு, டிப்ளோமா இன் இன்டீரியர் டிசைனிங் கோர்ஸ் படிச்சேன். அப்புறம், முழுநேர நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டேன்."

"தங்கச்சி ரோலில் அதிகம் நடிக்கக் காரணம் என்ன?"

"தெலுங்கு சினிமாவில் அறிமுகமானதிலிருந்து இப்போ வரை சிஸ்டர் ரோல்தான் அதிகம் வருது. நாகார்ஜூனா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பலருடன் தங்கச்சியா நடிச்சிருக்கேன். 15 சீரியல்களில் நடிச்சதில் ஒரு சீரியலில் ஹீரோயின். மற்றவற்றில் தங்கச்சி ரோல்தான். தங்கச்சி ரோல்னாலே பலருக்கும் என் ஞாபகம்தான் வருது. `சின்னப் பொன்னி, சின்னப் பொண்ணு, குட்டிப் பொண்ணு' எனப் பலரும் செல்லமா கூப்பிடுவாங்க. அது எனக்குப் பிடிக்கும். ஆனாலும், சிஸ்டர் இமேஜை உடைச்சு, ஹீரோயினா நடிக்கவும் அதிக ஆசை இருக்கு."

" 'ரோஜா' சீரியல் மூலமாகத் தமிழில் என்ட்ரியான அனுபவம் பற்றி..." 

(சட்டென பதில் வருகிறது) "நோ நோ. ஆல்ரெடி தமிழ்ல நடிச்சிருக்கேன். 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தில் ஹன்சிகாவின் ஃப்ரெண்ட் ரோல். அப்புறம் தமிழ்ல பெரிய ரோல்ல நடிக்க ரொம்பவே ஆசைப்பட்டேன். ஆனா, கிடைக்கலை. சில மாதத்துக்கு முன்னாடி, 'ரோஜா' சீரியல் ஆடிஷன்ல கலந்துக்கிட்டேன். சீக்கிரமே என்னை செலக்ட் பண்ணிட்டாங்க. தமிழில் நடிக்கும் ஆசையும் நிறைவேறியிருக்கு. சீரியல் ஆரம்பிச்சு ரெண்டு மாசம்தான் ஆகுது. அதுக்குள்ளே செம ரீச். சக ஆர்டிஸ்ட் எல்லோரும் குடும்ப உறவுகள் மாதிரி ஆகிட்டாங்க. ஷூட்டிங்ல ஃப்ரீ டைம் கிடைச்சா, மத்தவங்களுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுப்பேன். அப்போ அந்த இடமே கலகலப்பா இருக்கும். லாரன்ஸ் மாஸ்டரின் டான்ஸுக்கு நான் பெரிய ரசிகை. அவரின் 'காஞ்சனா' 3 படத்தில் நானும் நடிக்கிறேன்."

"தமிழில் டயலாக் பேச சிரமமா இருக்கா?"

"நிறைய நீளமான டயலாக் இருக்கு. அதனால் கொஞ்சம் சிரமம் இருக்கும். என் டயலாக்கைக் கேட்டு, தெலுங்கு மற்றும் இங்கிலீஸ்ல எழுதிக்கிட்டு அதைத் தமிழில் பேசிடுவேன். என் டீம் மேட்ஸோடு பேசும்போதும், மத்தவங்க கேள்விக்குத் தமிழில் பதில் சொல்லவும் சிரமப்படறேன். அதைவிடப் பெரிய ரிஸ்க் ஒண்ணு இருக்கு. சென்னையில் அவுட்டிங் போகணும்ன்னா, பெரும்பாலும் ஆட்டோ இல்லைன்னா கேப்லதான் போவேன். அப்போ டிரைவர்கிட்ட தமிழில் பேசறதுதான் சவாலே. அதனால், சீக்கிரமே எல்லோர்கிட்டேயும் சரளமா தமிழ்ப் பேசறதுதான் என் பெரிய இலக்கு."

"ரீல் 'ரோஜா'வுக்கும் நிஜ பிரியங்காவுக்குமான வேறுபாடு...''

"பிறருக்கு உதவுறது, ஃப்ரெண்ட்லியான மற்றும் குறும்புத்தனம் நிறைஞ்ச குணம், ரோஜாவினுடையது. அந்தக் குணமும் என் குணமும் கிட்டத்தட்ட ஒண்ணுதான். இப்போ, என்னைவிட ரோஜாதான் எல்லோரையும் இம்ரஸ் பண்ணுகிறாள்."