Published:Updated:

"அடிக்கடி மேக்கப் போடுவோம்... அதனால, எங்களைக் கிண்டல் பண்ணுவாங்க!" 'நந்தினி' ஸ்ரேயா அன்சான்

கு.ஆனந்தராஜ்

``ஷூட்டிங் இல்லாத நேரத்தில் நல்லா சாப்பிட்டு தூங்குவேன். எந்தப் பிரச்னைக்கும் பெரிசா ஃபீல் பண்ண மாட்டேன். எப்பவும் நிம்மதியாவும் ஹேப்பியாவும் இருக்கேன்."

"அடிக்கடி மேக்கப் போடுவோம்... அதனால, எங்களைக் கிண்டல் பண்ணுவாங்க!" 'நந்தினி' ஸ்ரேயா அன்சான்
"அடிக்கடி மேக்கப் போடுவோம்... அதனால, எங்களைக் கிண்டல் பண்ணுவாங்க!" 'நந்தினி' ஸ்ரேயா அன்சான்

``சென்னை சூப்பரா இருக்குது. தமிழ் மக்களும் நிறைய அன்பு காட்டறாங்க. தமிழ் சீரியல்ல நடிக்கிற உணர்வே ரொம்ப நல்லா இருக்குது" என உற்சாகமாகப் பேசுகிறார், ஸ்ரேயா அன்சான். சன் டி.வி 'நந்தினி' சீரியலில் நடித்துவருபவர்.

``உங்க ஆக்டிங் பயணம் எப்படித் தொடங்கியது?"

``என் பூர்வீகம், மங்களூரு. இப்போ பெங்களூரில் வசிக்கிறேன். நான் டான்ஸர். பி.காம்., ஃபைனல் இயர் படிச்சுட்டிருந்தபோது, ஆக்டிங் வாய்ப்புகள் வந்துச்சு. அதுக்கு முன்னாடி நடிக்கும் எண்ணம் இல்லை. கன்னடத்தின் 'அரமனே' சீரியல் கேரக்டரை கேட்டதுமே பிடிச்சுப்போனதால், அதில் ஹீரோயினா நடிச்சேன். ஒருகட்டத்தில் ஆக்டிங் ரொம்பவே பிடிச்சுப்போச்சு. அடுத்து, 'ஒந்து மொட்டெயா கதே' என்ற கன்னட படத்தில் நடிச்சேன். துளு மொழி படத்திலும் ஹீரோயினா நடிச்சிருக்கேன்."

`` `நந்தினி' சீரியல்ல எப்படி என்ட்ரி ஆனீங்க?"

`` 'நந்தினி' நாலு மொழியில் ஒளிபரப்பாகுது. கன்னடத்திலும் ரொம்ப ஃபேமஸா ஓடுது. நான்கூட அந்த சீரியலை ரெகுலரா பார்ப்பேன். கதையில் மூணாவதாக, காயத்ரி என்கிற ஒரு ஹீரோயின் கேரக்டர் அறிமுகமாச்சு. உதயா சேனல்ல ஒளிபரப்பாகும் என்னுடைய ஒரு சீரியலைப் பார்த்துதான் காயத்ரி கேரக்டருக்கு என்னை செலக்ட் பண்ணினாங்க. எனக்கு ஆடிஷன் எதுவும் வைக்கலை. ஆரம்பத்தில் தமிழில் நடிக்க உதறலா இருந்துச்சு. ஏன்னா, 'வணக்கம்; நன்றி' வார்த்தைகளைத் தவிர சுத்தமா தமிழ்த் தெரியாது. 'அதெல்லாம் ஒரு பிரச்னை இல்லை. கத்துக்கொடுக்கறோம்'னு டைரக்டர் மற்றும் டீம் மேட்ஸ் பலரும் சொன்னதுபோலவே செய்தாங்க. நானும் ஓரளவுக்குத் தமிழ் கத்துக்கிட்டேன்." 

``நித்யா ராம் உடனான நட்பு பற்றி..."

``நித்யாவும் கன்னட நடிகைதான். அதனால், அவங்களைப் பற்றி முன்னாடியே தெரிஞ்சிருந்தாலும் பழக்கமில்லை. 'நந்தினி' சீரியல்ல நடிக்க வந்துதான் நட்பு அறிமுகமாச்சு. அவங்க என்னைவிட பெட்டரா தமிழ்ப் பேசுவாங்க. அதனால், டயலாக் பேசறதிலிருந்து நிறைய விஷயங்களில் ஹெல்ப் பண்ணினாங்க. கதையில் நித்யா எனக்கு அக்கா. நிஜத்தில் நாங்க க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்."

``ஷூட்டிங் ஸ்பாட்டில் கலகலப்பான நிகழ்வுகள் நடக்குமா?"

``நிச்சயமா நடக்கும். எங்க சீரியலில் பல மொழிகள் பேசும் நிறைய ஆர்டிஸ்ட்டுகள் நடிக்கிறோம். அதனால் பேசிக்கும்போதே நிறைய கலகலப்பு இருக்கும். மதியம் லன்ச் டைம்ல கேலி, கிண்டல் நிறைய நடக்கும். நான், நித்யா ராம், மாளவிகா உள்பட பெண் ஆர்டிஸ்ட்டுகள் அடிக்கடி மேக்கப் போடுவோம். அதை, ஆண் ஆர்டிஸ்ட்டுகள் கிண்டல் பண்ணுவாங்க. நாங்க அவங்களைப் பதிலுக்குக் கிண்டல் பண்ணுவோம்."

``சென்னை செட் ஆகிடுச்சா?"

``சின்ன வயசுல டான்ஸ் நிகழ்ச்சிக்காக சிலமுறை சென்னைக்கு வந்திருக்கேன். இப்போ அதிக நாள்கள் சென்னையில் இருக்கேன். பெங்களூரில் வெயில் கம்மி. சென்னையில் அதிகமா இருக்கிறதால் அடிக்கடி டயர்டு ஆகிடுவேன். அதுவும் சீக்கிரமே பழகிடும்னு நினைக்கிறேன். ஷூட்டிங் இல்லாத நேரத்தில், டீம் மேட்ஸ் அவுட்டிங் போவோம். சென்னையில் சினிமா பார்க்கிறதும், ஷாப்பிங் பண்றதும் ஸ்பெஷல் மெமரீஸா இருக்கும்."

``உங்களை கண்ணழகி என சுந்தர்.சி சொன்னப்போ எப்படி ஃபீல் பண்ணீங்க?''

``சமீபத்தில், 'நந்தினி குடும்ப விழா' நிகழ்ச்சி சன் டி.வி-யில் ஒளிபரப்பாச்சு. அதில், சீரியலின் தயாரிப்பாளர் சுந்தர்.சி சார் கலந்துகிட்டு, நிறைய ஆர்டிஸ்ட் பற்றிப் பேசினார். அப்போ, 'இவங்க கண்கள் அழகா இருக்கும். கண்ணழகி'னு என்னைப் பாராட்டினார். இன்ப அதிர்ச்சியுடன் சந்தோஷப்பட்டேன்."

``நடிப்பைத் தவிர்த்து உங்ககிட்ட இருக்கும் ஆக்டிவிட்டீஸ்.."

``அப்படி எதுவும் இல்லை. ஷூட்டிங் இல்லாத நேரத்தில் நல்லா சாப்பிட்டு தூங்குவேன். எந்தப் பிரச்னைக்கும் பெரிசா ஃபீல் பண்ண மாட்டேன். எப்பவும் நிம்மதியாவும் ஹேப்பியாவும் இருக்கேன். என் பெட் நாய்கூட அடிக்கடி விளையாடுவேன். மங்களூரு பீச்சுக்கு அடிக்கடிப் போவேன். இதுதான் என் லைஃப். இப்போ ஒரு கன்னடம் மற்றும் துளு படங்களில் நடிச்சுட்டிருக்கேன்."