Published:Updated:

``என் நாலு பசங்க பச்சைமிளகாய் சாப்பிடுறதைப் பார்த்து கண் கலங்கிட்டேன்!" - பிரவீனா

கு.ஆனந்தராஜ்

``தமிழ் மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருத்தியா எனக்கு உயர்வான இடம் கொடுத்திருக்காங்க. நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்குது."

``என் நாலு பசங்க பச்சைமிளகாய் சாப்பிடுறதைப் பார்த்து கண் கலங்கிட்டேன்!" - பிரவீனா
``என் நாலு பசங்க பச்சைமிளகாய் சாப்பிடுறதைப் பார்த்து கண் கலங்கிட்டேன்!" - பிரவீனா


 

``உமாவாக எல்லோரின் மனசிலும் இடம்பிடிச்சிருக்கேன். தமிழ் மக்கள், தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக எனக்கு உயர்ந்த இடத்தைக் கொடுத்திருக்காங்க. நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு" எனப் புன்னகையுடன் பேசுகிறார், நடிகை பிரவீனா. சன் டிவி 'பிரியமானவள்' சீரியலின் கதை நாயகி. 

`` `பிரியமானவள்' ஆக்டிங் பயணம் எப்படிப் போயிட்டிருக்கு?"

``ரொம்ப சிறப்பா போயிட்டிருக்கு. 70 படங்களுக்கு மேலே நடிச்சுட்டேன். அதில், 50 படங்களுக்கும் மேலே ஹீரோயின். நாலு வருஷத்துக்கு முன்னாடி. ஃபேமிலிக்கு நேரம் ஒதுக்க, நடிப்புக்கு பிரேக் கொடுக்க நினைச்சேன். வந்த சினிமா வாய்ப்புகளை மறுத்தேன். அந்த நேரம்தான், இந்த சீரியல் வாய்ப்பு வந்துச்சு. உமா எல்லோரும் கொண்டாடும் ஒரு கேரக்டர். எனக்கும் அந்த கேரக்டர் ரொம்ப பிடிச்சுப்போனதால் நடிக்க சம்மதிச்சேன். ஆரம்பத்தில், தமிழ் சரியா தெரியாமல் சிரமம் இருந்துச்சு. இப்போ, நல்லா தமிழ்ப் பேசுறேன். சீரியலும் 1000 எபிசோடுகளைக் கடந்து வெற்றிகரமா ஒளிப்பரப்பாகிட்டிருக்கு."

``எல்லோருக்கும் பிடிக்கும் உமாவை, உங்களுக்கு எவ்வளவுப் பிடிக்கும்?"

(சிறிது நேர யோசனைக்குப் பிறகு பதில் வருகிறது) ``எனக்கும் ரொம்பப் பிடிக்கும். சீரியல் தொடக்கத்தில், உமாவின் மனசுல நிறைய சந்தோஷம் இருக்கும். குடும்பத்தையும் மகிழ்ச்சியுடன் பார்த்துப்பேன். கதை நகர நகர, குடும்பத்தில் எல்லோருக்கும் பிரச்னை. அதனால், குடும்பத்தில் சந்தோஷம் குறைஞ்சுடும். வசதியான நிலையிலிருந்து, ஏழ்மைக்கு வந்திடுவோம். அயர்ன் கடை ஆரம்பிச்சு, மறுபடியும் வளர்ந்து வர்றோம். இப்படி வாழ்க்கையின் ஏற்ற இறங்கங்களை ஒருசேரப் பார்த்து, எப்போதும் நேர்மையான வழியிலேயே எதிர்கொண்டு வரும் உமாவை யாருக்குத்தான் பிடிக்காது. என் நிஜ கேரக்டருடன் உமா கேரக்டர் 60 சதவிகிதம் பொருந்தும்."

``சீரியலில் வரும் உங்க நான்கு பசங்கள் பற்றி..."

``கதையில் என் மேல் உயிரையே வெச்சிருப்பாங்க. சீரியலில்தான் நான் அம்மா. நிஜத்தில், அக்கா மாதிரி. 'சேச்சி; அக்கா'னு அன்போடு கூப்பிடுவாங்க. அவங்களைப் பாராட்டும் அதேவேளையில், ஏதாச்சும் தப்பு பண்ணினாலும் உரிமையோடு கண்டிப்பேன். சமீபத்தில், `பிரியமானவள் குடும்ப விழா' நடந்துச்சு. அதில், பசங்க நால்வரும் பச்சைமிளகாய் சாப்பிடும் ஒரு கேம் ரவுண்ட் இருந்துச்சு. அதைப் பார்த்து எனக்கு ரொம்ப கஷ்டமாகி கண் கலங்கிட்டேன். அப்போ, 'அம்மாவுக்கும் பச்சைமிளகாய் கொடுக்கலாமா?'னு ஆங்கர் விளையாட்டா கேட்டார். உடனே, 'அம்மாவை கஷ்டப்படுத்த வேண்டாம். நாங்களே சாப்பிடுறோம்'னு சொன்னாங்க. அந்த அன்பில் ரொம்பவே நெகிழ்ந்துட்டேன்."

``சீரியல் டீமில் யார் அதிகம் குறும்பு பண்ணுவாங்க?"

(சிரிப்பவர்) ``அப்பாதான் (சீரியலில் இவருக்குக் கணவராக நடிக்கும் சுபலேகா சுதாகரை அப்படித்தான் அழைக்கிறார்). சீரியஸான சீனில், எல்லோரும் ஃபீல் பண்ணி நடிச்சுட்டிருப்போம். உடனே, 'நான் ஒரு காமெடி சொல்லிடறேன். சிரிச்சுட்டு அப்புறம் ஆக்டிங்கை கன்டினியூ பண்ணுங்க'னு காமெடி சொல்வார். எல்லோரும் சிரிப்போம். மறுபடியும் ஃபீல் பண்ணி நடிக்க நேரமாகும். ஷாட் இல்லாத நேரத்தில், குழந்தை மாதிரி சத்தம் போட்டு எதையாவதுப் பேசிட்டிருப்பார்; காமெடி சொல்வார். எனக்குச் சத்தம் போட்டுப் பேசினால் பிடிக்காது. ஆனால், என் காதுகிட்ட வந்து சத்தம் போடுவார். இப்படி நிறைய குறும்புகள் செய்வார். சீரியலில் அவர் என் கணவர். நிஜத்தில் நான் பெரிசா மதிக்கும் என் அண்ணன்; நண்பர், அப்பா."

``உங்க டீமில் அடிக்கடி கொண்டாட்டங்கள் நடக்கும்னு கேள்விப்பட்டோம். அது என்ன?"

``எங்க டீமில் ஆர்டிஸ்ட் டு டெக்னீஷியன்ஸ் வரை எல்லோரின் பிறந்தநாளையும் கொண்டாடுவோம். என் பிறந்தநாளைக் கொண்டாடின தருணங்கள், ஸ்வீட் மெமரீஸ். என் பிறந்த நாளான கடந்த ஏப்ரல் 11-ம் தேதி, டைரக்டர் சர்ப்ரைஸா எனக்கு பொக்கே கொடுத்தார். அப்பா கேக் ஆர்டர் பண்ணி, கட் பண்ண வெச்சார். அவர்தான், எல்லோரின் பிறந்தநாளையும் நோட் பண்ணி வெச்சிருப்பார். எல்லோருக்கும் தன் செலவில் கேக் ஸ்பான்ஸர் பண்ணுவார்."

``இனி தொடர்ந்து நடிப்பீங்களா?"

``தமிழ்த் தவிர, மலையாளத்தில் ஒரு சீரியலில் ஹீரோயினா நடிக்கிறேன். செலக்டிவா சில படங்களில் நடிக்கிறேன். பிசினஸூம் பண்றேன். இதையெல்லாம்விட, ஃபேமிலிக்கு அதிக நேரம் செலவிடறேன். 'சாமி 2' படத்தின் தொடக்க காட்சிகளில் நடிச்சிருக்கேன். நல்ல கேரக்டர் மற்றும் டீம் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன். மாதத்தில் 10 நாள் சென்னையில் இருக்கேன். இங்கே சீரியல் டீமை தவிர, ஃப்ரெண்ட்ஸ் யாருமில்லை. ஷூட்டிங் முடிஞ்சதும் உடனே கேரளாவுக்குக் கிளம்பிடுவேன்."