Published:Updated:

விஜய் அவார்ட்ஸ் 2018... வந்தவர்கள் யார்... வின்னர்கள் யார்...?! முழு விவரம்

ப.தினேஷ்குமார்
அய்யனார் ராஜன்

10-வது விஜய் அவார்ட்ஸ் விழா ஹைலைட்ஸ்

விஜய் அவார்ட்ஸ் 2018... வந்தவர்கள் யார்... வின்னர்கள் யார்...?! முழு விவரம்
விஜய் அவார்ட்ஸ் 2018... வந்தவர்கள் யார்... வின்னர்கள் யார்...?! முழு விவரம்

இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடந்த 10-வது 'விஜய் அவார்ட்ஸ்' நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் இங்கே...

* வித்தியாசமான கவுனில் வந்திருந்தார் டிடி. அவரது உடையைப் பார்த்த கோபிநாத், 'ஏம்மா ஸ்டேஜைக் கூட்டிப் பெருக்கப்போறியா?' எனக் கலாய்க்க, 'நான் ஸ்வச் பாரத் அம்பாசிடராக்கும்!' எனப் பதிலுக்கு லந்து தந்தார் டிடி. பாய், தலையணையுடன் மேடைக்கு வந்த மா.கா.பா. ஆனந்த், 'விடியிற வரை விடமாட்டாங்க'னு அனுபவிச்ச சிவகார்த்திகேயன் சொல்லியிருக்காப்ல... அதான் இந்த ஏற்பாடு' என்றார்.

* விருது கமிட்டியின் உறுப்பினர்களில் இயக்குநர் கே.பாக்யராஜ், நடிகை ராதா, யூகிசேது மூவரும் வந்திருந்தனர். இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், கே.எஸ்.ரவிக்குமார் இருவரும் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. 'விருதுகளைத் தேர்வு செய்தப்போ எங்களுக்குள் கருத்து வேறுபாடு வந்துச்சு. அப்போ எங்களுக்குள்ளேயே ஓட்டெடுப்பு வெச்சு செலக்ட் பண்ணினோம்' என அனுபவத்தைப் பேசினார் பாக்யராஜ். யூகிசேது பேசியபோது, 'நேஷனல் அவார்டு'ன்னா ஓடாத படங்களுக்குத் தரப்படுவது' எனப் பேச ஒரு நிமிடம் ஜெர்க் ஆனது அரங்கம்.

* நடிகர் சிவக்குமாருக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கப்பட்டது. தனது அந்தக் காலத்துக் கதாநாயகிகளான அம்பிகா, ராதா, ரேவதி, ரூபிணி ஆகியோரிடமிருந்து அந்த விருதைப் பெற்றுக்கொண்டார், சிவக்குமார். அவரின் குடும்பத்தில் மற்ற அனைவரும் விழாவுக்கு வந்திருந்தனர். சூர்யா - ஜோதிகா மட்டும் மிஸ்ஸிங். கார்த்தி நடிக்கும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் டீஸர் விழா மேடையில் வெளியிடப்பட்டது.

* ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 'காற்று வெளியிடை' படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்தது. 'ஃபேவரைட் சாங்' விருது அவரது இசையில் உருவான 'ஆளப்போறான் தமிழ'னுக்கு வழங்கப்பட்டது. சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதை அனிருத்துக்கு (வேலைக்காரன்) வழங்கினார், ரஹ்மான். 'இதுவரையிலான பணி அனுபவத்தில் உங்களை டார்ச்சர் செய்த இயக்குநர் யார்?' என ஏ.ஆர். ரஹ்மானிடம் எஸ்.ஜே.சூர்யா கேட்க, 'டார்ச்சர் செய்கிறவர்னு தெரிஞ்சா, நான் கமிட் ஆகாமலேயே எஸ்கேப் ஆகிடுவேன்' என்றார், ஆஸ்கார் நாயகன். எஸ்.ஜே.சூர்யாவுக்கு சிறந்த வில்லனுக்கான விருது கிடைத்தது.

* சிறந்த நடிகையாக விருது கமிட்டியும், மக்களும் ஒருசேரத் தேர்ந்தெடுக்க, நயன்தாராவுக்கு இரண்டு விருதுகள். 'கோகோ'வில் நயனிடம் யோகிபாபு 'லவ்'வைச் சொல்லும் 'கல்யாண வயசு வந்திடுச்சுடி' பாடலை அனிருத் மேடையில் பாடியபோது, அந்தக் காட்சி ஆடியோ விஷுவலாகத் திரையிடப்பட, விழுந்து விழுந்து சிரித்து ரசித்தார் நயன். யோகி பாபு ஹேர் ஸ்டைல் தனக்கு ரொம்பவே பிடித்ததாகவும் சொன்னார், நயன்தாரா.  

* 'விக்ரம் வேதா' படம் சிறந்த நடிகருக்கான விருதை விஜய் சேதுபதிக்குப் பெற்றுத் தந்தது. 'ஒரு கதை சொல்லட்டா சார்' வசனத்தை நீங்க இப்போ பேசியே ஆகணும்' என கோபிநாத் வேண்டுகோள் வைக்க, விஜய் சேதுபதியும் தனது ஸ்டைலில் பேச கைதட்டல்களால் அரங்கம் அதிர்ந்தது. சிறந்த இயக்குநர் மற்றும் திரைக்கதைக்கான விருதும் 'விக்ரம் வேதா'வுக்கே கிடைத்தன.

* 'என்டர்டெய்னர் ஆஃப் தி இயர்' விருதுக்குத் தேர்வானவர், தனுஷ். வேட்டி சட்டை முறுக்கு மீசையில் வந்திருந்தார். அனிருத்தின் வேண்டுகோளை ஏற்று மேடையேறி 'ஊதுங்கடா சங்கு' பாடிவிட்டு இறங்கியவரை, ரசிகர் ஒருவர் மறித்து அடம்பிடித்து செல்ஃபி எடுக்க, சில நிமிடங்கள் அந்த இடம் பரபரப்பானது. மேற்படி ரசிகரை விழா ஏற்பாட்டாளர்கள் அலேக்காகத் தூக்கிச் சென்றனர். துல்கரிடம் விருது வாங்கிய தனுஷின் பேச்சு 'காலா' பக்கமும் திரும்பியது. 'ஒருத்தன் பத்து பேரை எதிர்த்தா அவன் வீரன்; பத்து பேர் சேர்ந்து ஒருத்தனை எதிர்த்தா அவன் தலைவன். இன்னைக்குத் தமிழ்நாட்டு நிலைமையை பார்க்கிறவங்களுக்கு நான் சொல்றதுக்கு அர்த்தம் புரியும்!' எனப் பேசிவிட்டு இறங்கினார். 'மாமனாருக்குப் பதில் மருமகன் பன்ச்' எனக் கமென்ட்டுகள் காதில் விழுந்தன.

* ஃபேவரைட் ஹீரோவாக விஜய் தேர்வாகியிருந்தார். விஜய் நிகழ்ச்சிக்கு வராததால், அவரது வீட்டுக்குச் சென்று விருதைத் தர திட்டமிட்டிருக்கின்றனர். விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

* 'சங்கிலி புங்கிலி கதவத் தொற' படத்துக்காக சிறந்த காமெடி நடிகர் விருதைப் பெற்றார், நடிகர் சூரி. 'கடைக்குட்டி சிங்கத்துல சாயிஷாகூட டான்ஸ் ஆடினீங்களாமே!' என அவரிடம் கேட்க, 'இவர்கூட ஆடினா எனக்கு டான்ஸே மறந்துடும்னு சொல்லிடுச்சு அந்தப் புள்ள. இனிமே எந்த டைரக்டராச்சும் இப்படியெல்லாம் யோசிப்பீங்க' என்றார்.

* சிறந்த இயக்குநருக்கான விருதை வழங்க வந்த இயக்குநர் பாலா கோபிநாத்தைப் பார்த்து, 'உங்களுக்குச் சமூகத்துல ஒரு நல்லபேர் இருக்கு; இந்த மாதிரி ஜிகினா வெச்ச கோட்லாம் இனிமே போடாதீங்க' என்றார்.

* விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி எதற்காக முந்தைய வாரம் ரத்து செய்யப்பட்டதோ, அந்த விஷயத்தைத் தொட்டார் பார்த்திபன். 'பெஸ்ட் ஷூட்டர்' அவார்டுகூட இங்கே தந்திருக்கலாம். அந்த விருதைத் தர தூத்துக்குடி மக்களைக் கூட்டி வந்திருக்கணும்' என்ற அவரது பேச்சு அரங்கத்தின் கவனத்தை அதிகமாய் ஈர்த்தது.