Published:Updated:

உதவி இயக்குநர்களை அடித்த `ராஜா ராணி' சஞ்சீவ், பப்லு! சீரியல் ஷூட்டிங்கில் என்ன நடக்கிறது?

அய்யனார் ராஜன்

உதவி இயக்குநர்களைத் தாக்கியதாக `ராஜா ராணி' தொடர் ஹீரோ சஞ்சீவ், `வாணி ராணி' பப்லு மீது புகார்

உதவி இயக்குநர்களை அடித்த `ராஜா ராணி' சஞ்சீவ், பப்லு! சீரியல் ஷூட்டிங்கில் என்ன நடக்கிறது?
உதவி இயக்குநர்களை அடித்த `ராஜா ராணி' சஞ்சீவ், பப்லு! சீரியல் ஷூட்டிங்கில் என்ன நடக்கிறது?

பெரும் கொந்தளிப்பில் இருக்கிறது, தமிழ் தொலைக்காட்சி சீரியல்களின் உதவி இயக்குநர்கள் வட்டாரம். ஏன், எதற்கு?

`` `ராஜா ராணி' சீரியலின் ஹீரோ சஞ்சீவ் உதவி இயக்குநர் ஒருவரைத் தாக்கியிருக்கிறார்; `வாணி ராணி' சீரியலில் நடிக்கும் பப்லு என்கிற பிருதிவிராஜ் ஓர் உதவி இயக்குநரை அடிச்சிருக்கார். நாங்க விஷயத்தைப் பெருசு படுத்த விரும்பலை. அதேநேரம் இப்படி நடப்பதை வெளியில் சொல்லியே ஆகணும். இல்லைனா, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாப் போகும்!' என்கிறார்கள், உதவி இயக்குநர்கள் தரப்பிலிருந்து நம்மைத் தொடர்பு கொண்ட, பெயர் குறிப்பிட விரும்பாத சிலர்.

`வாணி ராணி' ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எப்பவுமே லேட்டா வர்றது பப்லுவோட வழக்கம். யூனிட்டுக்கு இது பெரிய பிரச்னையாவே இருந்துச்சு. பிரச்னை நடந்த அன்னைக்கு சீனியர் உதவி இயக்குநர் அழகு, பப்லுகிட்ட லேட்டா வர்றது பத்திக் குறிப்பிட்டு யூனிட்டோட வருத்தத்தைச் சொல்லியிருக்கார். அப்போ ரெண்டுபேருக்கும் இடையில வாக்குவாதம் நடந்திருக்கு. கடுப்பான அழகு, சீரியல் தயாரிப்பு நிறுவனத்துக்குத் தகவல் தந்துட்டார். தயாரிப்பு தரப்பு பப்லுவைக் கூப்பிட்டு என்ன சொன்னாங்களோ தெரியலை, பப்லு வம்படியா அழகுகிட்டப் போய் சத்தம் போட்டுக் கத்தியிருக்கார். பதிலுக்கு அழகும் வாக்குவாதம் செய்ய, ஒருகட்டத்துல அது கைகலப்புல முடிஞ்சிருக்கு. பப்லு, உதவி இயக்குநர் அழகை அடிச்சிருக்கார். பப்லு ஷூட்டிங் ஸ்பாட்ல இப்படிப் பண்றது இது முதல் தடவை இல்லை. இதுக்கு முன்னாடியும் சிலர்கிட்ட இப்படி நடந்திருக்கார்னு தெரியுது. இப்போதான் ஒவ்வொண்ணா வெளியில வருது!" என்ற இவர்களின் புகாரைத் தொடர்ந்து, நடிகர் பப்லுவிடம் பேசினோம். 

``முதல்ல `அப்படி ஒரு சம்பவமே நடக்கலைங்க'னு சொன்னா என்ன பண்ணுவீங்க?' எனக் கேட்டவர், ஒரு கட்டத்தில் `முடிஞ்சுபோன சம்பவத்தை மறுபடியும் ஏன் பெருசுபடுத்துறாங்கன்னே தெரியலை. இண்டஸ்ட்ரியில எனக்கு மரியாதை ரொம்ப முக்கியம். அதுக்குப் பங்கம் வந்தா, நான் சும்மா இருக்கமாட்டேன். அப்படி ஒரு சம்பவம் நடந்தது. ஏதோ ஒரு சூழ்நிலையில அடிச்சுட்டேன். பெரிய பஞ்சாயத்து ஆகி, பிறகு மன்னிப்பும் கேட்டாச்சே... அதோட விடலாமே?

அந்தச் சம்பவத்துக்கு முற்றுப்புள்ளி வெச்சபிறகும் வெளியில இதைப் பத்திப் பேசுறது நல்லா இல்லை. அதுமட்டுமல்லாம, இப்போ எனக்கு தினம் தினம் கொலை மிரட்டல் வேற விடுறாங்க. நான் எத்தனையோ உதவி இயக்குநர்களுக்குப் பல உதவிகள் செஞ்சிருக்கேன். யாராச்சும் வெளியில இதைப்பத்தி ஒரு வார்த்தையாச்சும் பேசியிருக்காங்களா. `அடிச்சிட்டான்'னு மட்டும் பொங்குறாங்களே, என்னங்க நியாயம்?!' என்கிறார்.

இதேமாதிரி ஒரு சம்பவம் `ராஜா ராணி' தொடரின் ஷூட்டிங் ஸ்பாட்டிலும் நடந்திருக்கிறது. ஹீரோ சஞ்சீவுக்கும் சம்பந்தப்பட்ட அந்த உதவி இயக்குநருக்கும் எந்தப் பிரச்னையுமே இல்லையாம். `தொடரின் ஹீரோயின் ஆல்யா மானஸாவுக்கும் (செம்பா) அந்த உதவி இயக்குநருக்கும்தான் ஏதோ வாக்குவாதம். இடையில் செம்பாவுக்கு ஆதரவாகப் பேசி, தேவையில்லாமல் தலையிட்டு அந்த உதவி இயக்குநரைத் தாக்கி தள்ளிவிட்டிருக்கிறார், சஞ்சீவ்' என்கிறார்கள்.

சஞ்சீவிடம் இதுகுறித்துக் கேட்டதுக்கு, `யார் உங்களுக்கு இப்படியொரு வதந்தியைக் கொடுத்தது? அவங்ககிட்ட புரூஃப் இருக்கானு முதல்ல கேளுங்க!' என்கிறார். 

ஏற்கெனவே ஒருமுறை சொன்னதுதான், சீரியல்களின் ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் நடக்கிற விஷயங்களைத் திரட்டினாலே எக்கச்சக்க எபிசோடுகள் எடுக்கலாம். ரேட்டிங் தாறுமாறாகக் கிடைக்கும்.