Published:Updated:

``சிலம்பம் சுத்துற வேலுநாச்சிக்குக் காதல் காட்சிகளும் காத்திருக்கு!" - ஷூட்டிங்ல மீட்டிங் பகுதி 9

அய்யனார் ராஜன்

வேலுநாச்சி தொடரின் ஷூட்டிங் ஸ்பாட் அரட்டை

``சிலம்பம் சுத்துற வேலுநாச்சிக்குக் காதல் காட்சிகளும் காத்திருக்கு!" - ஷூட்டிங்ல மீட்டிங் பகுதி 9
``சிலம்பம் சுத்துற வேலுநாச்சிக்குக் காதல் காட்சிகளும் காத்திருக்கு!" - ஷூட்டிங்ல மீட்டிங் பகுதி 9

பச்சைப் பசேல் வயல்வெளி, அதன் வரப்புகளில் பாய்ந்தோடும் தண்ணீர், அமைதி தவழும் தெரு என ரம்மியமாகக் காட்சியளிக்கிறது குத்தம்பாக்கம் கிராமம். சென்னைப் பூந்தமல்லிக்குப் பக்கத்தில் இருக்கிறது. `கலர்ஸ் தமிழ்’ சேனலில் ஒளிபரப்பாகும் `வேலுநாச்சி’ தொடரின் ஷூட்டிங் இங்குதான் நடந்து வருகிறது. `ஷூட்டிங்ல மீட்டிங்’ போட நாம் அங்கு சென்று இறங்கிய நேரம், யூனிட்டில் ஏதோவொரு சலசலப்பு.

``ஒரு அரசியல் கட்சித் தலைவர் பேரைச் சொல்லிட்டு தினமும் சிலர் வந்து பணம் கேட்கிறாங்க. அதான், இந்த ஏரியா முக்கியஸ்தர் ஒருத்தரோட கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டுபோனோம். மாமூல் கேட்டு வந்தவங்களை அவர் எச்சரிச்சுட்டு போறார்" என்றார், படப்பிடிப்புத் தளத்தின் மேலாளர்.

``பாரம்பர்ய விளையாட்டான சிலம்பம் பற்றிய கதைங்கிறதால, நேட்டிவிட்டியோட இருக்கணும்னு இப்படியொரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து ஷூட்டிங் பண்றோம். ஆனா இங்கேயும் இந்தமாதிரி சில இடைஞ்சல்கள் வருது. கிராமங்கள் எல்லாம் இப்போ மாறிடுச்சு சார்’ எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொடரின் இயக்குநர் பிரபு சங்கர், ``எங்க ஹீரோயின் வேலுநாச்சி (ஆங்கர் சித்ரா) அந்தப் பக்கமா சிலம்பம் சுத்திக்கிட்டு இருக்காங்க. தொடருக்காகச் சிலம்பம் கத்துக்கிட்டவங்க, இப்போ பிரேக் கிடைக்கிறப்போ எல்லாம் சுத்த ஆரம்பிச்சுட்டாங்க. போங்க போய் பாருங்க’ என அனுப்பினார். 

மாட்டுத் தொழுவம் ஒன்றின் அருகே பழனியாண்டவரும் (தொடரில் சித்ராவின் தாத்தாவாக வருகிற இவர், `மெட்ராஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ஜெயராவ்.) சித்ராவும் சிலம்பம் சுற்றிக்கொண்டிருந்தார்கள்.

``பிரேக் கிடைச்சா பின்னி எடுத்துடறீங்களாமே... சிலம்பத்தோட ரொம்ப நெருக்கமாயிட்டீங்களோ?" என்றோம். 

``இந்த சீரியலுக்கு என்னைக் கேட்டு வந்தவங்க, `தைரியமான பொண்ணைத் தேடினோம். நீங்க பொருத்தமா இருப்பீங்கனு தோணுச்சு'னு சொன்னாங்க. `பார்ரா’னு எனக்கு அது ஆச்சர்யமா இருந்தது. `வேலுநாச்சி’ங்கிற பேரை உச்சரிக்கிறப்பவே கம்பீரமா இருக்கு. எங்க அப்பா, போலீஸ். அதனால, ஏற்கெனவே கொஞ்சம் தில்லாதான் திரிவேன். `சந்தனக் கடத்தல் வீரப்பன் மகளைக்கூட மீட் பண்ணியிருக்கேன்னா பார்த்துக்கோங்க. ஏற்கெனவே பாக்ஸிங் கத்துக்கிட்ட எனக்கு, சிலம்பம் மாதிரி பாரம்பர்ய தற்காப்புக் கலைகளைக் கத்துக்கணும்னு ஆசை. இந்த சீரியல் வாய்ப்பு அதுக்கும் தீனி போடுறமாதிரி இருந்ததுனால, ஓகே சொல்லிட்டேன். யூனிட்கிட்ட நான் கேட்ட முதல் கேள்வியே, `நிஜமாவே எனக்குச் சிலம்பம் கத்துத் தருவீங்களா?ங்கிறதுதான். சீரியல் தொடங்கி 100-வது எபிசோடை நெருங்கிக்கிட்டு இருக்கோம். இப்போ, கல் வீசுனாகூட தடுக்குற அளவுக்குச் சிலம்பத்துல தேறிட்டேன்!" என்ற சித்ராவிடம், ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சலசலப்பு குறித்துக் கேட்டோம்.

``வெள்ளந்தி கிராம மக்களையும் காலம் மாத்திட்டிருக்கு. பள்ளிக்கூடம், ஹாஸ்பிடல் இல்லாத கிராமத்துலகூட டாஸ்மாக் இருக்கே! சின்னப் பசங்ககூட குடிக்கு அடிமையாகி வழிதவறிப் போறாங்க. ஷூட்டிங் போறப்போ வர்றப்போ என்னை வழி மறிச்சு கேலி, கிண்டல் பண்ணியிருக்காங்க. ஒருநாள் இதே ஸ்பாட்ல சில பசங்க வந்து `அந்த' மாதிரி லந்து கொடுத்தாங்க. கையில சிலம்பத்தை எடுத்தும், `என்ன வேணும் தம்பிகளா’னு கேட்டேன். அமைதியா போயிட்டாங்க. ஷூட்டிங் முடியறதுக்குள்ள யார் மண்டையை உடைக்கப் போறேனோ, தெரியலை!" எனச் சிரிக்கிறார்.

சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சுற்றியே அனைத்து சீரியல்களுக்கான ஷூட்டிங் நடைபெற்றுக்கொண்டிருக்க, கிராமத்துக் கலை என்பதாலேயே ஆரம்பத்தில் பொள்ளாச்சி பகுதியில் ஷூட்டிங் நடத்திவிட்டு, தற்போது இங்கு வந்திருக்கிறார்கள் `வேலு நாச்சி’ குழுவினர். பத்துப் பதினைந்து பேர் ஆங்காங்கே அமரக்கூடிய ஒரு வீடே ஸ்பாட். கேரவன் போன்ற வசதிகளெல்லாம் கிடையாது. யூனிட் சாப்பாடை மிஸ் செய்துவிட்டால், சிங்கிள் டீ சாப்பிட பதினைந்து கிலோ மீட்டர் கடக்க வேண்டும்.

`பழனியாண்டவர்’ ஜெயராவிடம் பேசினோம்.

``இந்த சீரியல் பார்க்கிற பெண் பிள்ளைகளுக்குச் சிலம்பம் கத்துக்கணும்ங்கிற ஆசை வரும். அந்தக் கோணத்துல கதை போகுது. மெட்ராஸ்ல வளர்ந்த பொண்ணு, இது என்னத்த சிலம்பம் சுத்தப்போகுதுனு நினைச்சேன். இப்போ கம்பைப் பிடிச்சு நின்னாலே ஆம்பளைக்கே ஒரு பயம் வருதுனா பாருங்க!" எனச் சித்ராவின் சிலம்பத் திறமையை மெச்சிப் பாராட்டியவருக்கு காட்சிகள் தயாராக, நகர்ந்தார்.

சீரியல் என்றால் ஹீரோயினுக்கு வில்லிதான் இருப்பார்கள். அதிலும், பெரும்பாலான சீரியல்களில் ஹீரோயின்களைவிட வில்லிகள்தாம்  ஸ்கோர் செய்வார்கள். `வேலுநாச்சி’யைப் பொறுத்தவரை ஹீரோயின் சித்ராவுக்கு வில்லி கிடையாது. வில்லிக்குப் பதிலாக வில்லன். வில்லன் வல்லரசாக வருகிறார், `கத்தி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கும் சீனிவாசன். அவரிடம் பேசினோம்.

``சீரியல்னா நடிகைகளோட டாமினேஷன் அதிகமா இருக்கும்னு தெரியும். ஆனாலும், சிலம்பாட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில சிலம்ப மாஸ்டர்களுக்கு முக்கியத்துவம் இருக்கும்கிறதால, இந்த சீரியல்ல நடிக்க சம்மதிச்சேன். ஷூட்டிங் எக்ஸ்பீரியன்ஸ் செமயா இருக்கு. ஆடு, மாடு, கோழி, வயக்காடுனு இந்தக் கிராமத்துக்குத் தினமும் வந்துட்டுப்போறது ரொம்பவே பிடிச்சிருக்கு. `கலர்ஸ் தமிழ்’ புது சேனல்ங்கிறதாலேயும், கிராமம் சார்ந்த கலைகளைச் சொல்லப்போறதுனால, சீரியல் சரியா போகுமானும் சந்தேகம் இருந்தது. ஆனா, இந்தத் தொடர் எல்லா தரப்பு மக்கள்கிட்டேயும்... குறிப்பா பெண்கள் மத்தியில நல்லா ரீச் ஆகியிருக்கு!" என்கிறார், சீனிவாசன்.

மதிய உணவு இடைவேளையில் அந்த வீட்டுத் திண்ணைகளில் ஓய்வெடுக்கின்றனர், சில நட்சத்திரங்கள். ஷூட்டிங் ஸ்பாட்டின் பின்புறம் உள்ள வயல்வெளிக்குச் சென்று, வயலுக்குள் மக்கள் வேலை பார்ப்பதை வேடிக்கை பார்க்கிறார்கள் சிலர். சித்ரா பழனியாண்டவரின் மனைவியாக வரும் அன்புமொழியுடன் சேர்ந்து டப்ஸ்மாஷ் பண்ணவும் செய்கிறார்.

``சிலம்பம் மட்டுமல்ல தம்பி, சித்ரா சிலம்பம் கத்துக்கிட்டது மாதிரியே நான்கூட மாடு குளிப்பாட்டுறது, சாணி அள்ளுறது, பல்லாங்குழி ஆடுறது, தாயம் ஆடுறதுனு இங்கே வந்தபிறகு நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன்" என்கிறார், அன்புமொழி.

சூரியன் மேற்கில் நகரத் தொடங்கிய மாலைப் பொழுது. பஞ்சாயத்துப் பள்ளி விட்டு வீடுகளுக்குப் புத்தகப் பையுடன் போய்க்கொண்டிருந்த எல்லாக் குழந்தைகளும் ஷூட்டிங் ஸ்பாட்டைக் கடக்கும்போது புன்னகையோடு நகர்கிறார்கள். சில வாண்டுகள் ``அக்கா உங்ககூட போட்டோ எடுக்கலாமா?" எனக் கேட்க, சந்தோஷமாக அவர்களுடன் தன் மொபைலில் செல்ஃபி எடுத்துக்கொள்கிறார், சித்ரா.

சீரியலின் இயக்குநர் பிரபு சங்கரிடம் பேசினோம்.

``பாப்பம்பட்டி கிராமத்துல இருக்கிற சிலம்பக்கூடத்தோட பெரிய ஆசான், பழனியாண்டவர். அவருக்கு வயசானதால அந்த இடத்துக்கு வல்லரசைக் கொண்டு வர்றார். பொறுப்பு கிடைச்சதும் வல்லரசு குணம் மாறி கெட்டவன் ஆயிடுறார். அதனால, வல்லரசுகிட்ட இருந்து பழையபடி சிலம்பக்கூடத்தை மீட்க ஆள் தேடுறார் பழனியாண்டவர். அவரோட மகனும் சிலம்பத்துல வல்லவன். ஆனா, அவருக்கு ஆட்டத்தின்போது கால்ல அடிபட, தொடர்ந்து அவரால ஆட முடியாம போயிடுது. பேத்தி வேலுநாச்சியை அந்த இடத்துக்குக் கொண்டுவர நினைக்கிறார். ஆனா, `பொண்ணு இவ... வந்து என்ன செய்யப்போறாளாம்?' எனக் கேலி பேசுறாங்க. நடக்க முடியாத அப்பா, வல்லரசால ஏமாற்றப்பட்ட தாத்தா... இவங்க ரெண்டுபேரோட பேரைக் காப்பாத்த களமிறங்குற வேலுநாச்சிக்குச் சிலம்பம் பயிற்சி தர யாரும் முன்வர மாட்டேங்கிறாங்க. இதுவரைக்கும் கதை இவ்ளோதான் நகர்ந்திருக்கு" என்றவரிடம், சீரியலின் அடுத்த சில திருப்பங்கள் குறித்துக் கேட்டேம். 

``சிலம்பக்கூடத்துக்குத் தலைவராகணும்னா ஒரு பந்தயம் வைக்கலாம்னு சொல்றார், வில்லன் வல்லரசு. அதாவது, அவரைப் போட்டியில ஜெயிக்கணும். வேலுநாச்சிக்கோ சிலம்பம் கத்துத்தரவே யாரும் முன்வராத சூழல்ல இந்தப் போட்டி எப்படி நடக்கும், வேலுநாச்சி சிலம்பப் பயிற்சி எடுப்பாங்களாங்கிற கேள்விகளுக்கான விடை அடுத்த சில நாள்கள்ல தெரியும். கூடவே சித்ராவுக்குக் காதல் காட்சிகள்லாம்கூட காத்திருக்கு!" என்கிறார், இயக்குநர்.

``கிராமத்துக் காதல்னா, வயல்காட்டைச் சுத்தி டூயட்டா?" என்றோம், சித்ராவிடம்.

``லவ், ரொமான்ஸ்லாம் இருக்குனு நானும் கேள்விப்பட்டேன். ஆனா, டூயட் இருக்குமானு தெரியலை. ஏன்னா, என்னைக் காதலிக்கிறவரோட வீட்டுல நான் சிலம்பம் கத்துக்கிறதை எதிர்ப்பாங்களாம். அதனால, காதலனோட சுத்துறது அல்லது கம்பு சுத்துறது... ஏதாவது ஒண்ணு க்ளிக் ஆகும்கிற நிலை வரும்னு நினைக்கிறேன், பார்க்கலாம்" என்கிறார். 

மாலை நேரத்துத் தேநீரை உறிஞ்சிவிட்டு, அடுத்த காட்சிகளுக்குத் தயாரானது யூனிட். `வேலுநாச்சி’ குடும்பத்தாருக்கும் குத்தம்பாக்கம் கிராமத்துக்கும் விடைகொடுத்துக் கிளம்பினோம்.

அடுத்த வாரம் வேறொரு மீட்டிங் பாயின்ட்டில் சந்திக்கலாம்.