Published:Updated:

"வராத கோபத்தை வா வானா... நான் என்ன பண்றது? 'ராஜா ராணி' செம்பா!" - ஷூட்டிங்ல மீட்டிங் - பகுதி 11

அய்யனார் ராஜன்

`ராஜா ராணி' சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் அரட்டை

"வராத கோபத்தை வா வானா... நான் என்ன பண்றது?  'ராஜா ராணி' செம்பா!" - ஷூட்டிங்ல மீட்டிங் - பகுதி 11
"வராத கோபத்தை வா வானா... நான் என்ன பண்றது? 'ராஜா ராணி' செம்பா!" - ஷூட்டிங்ல மீட்டிங் - பகுதி 11

ஹீரோயின் செம்பா (ஆல்யா மானஸா) சீரியலில் புது வில்லியாக என்ட்ரியாகி இருக்கிற ஹீரோ கார்த்திக்கின் (சஞ்சீவ்) முன்னாள் காதலி திவ்யா (அன்ஷு ரெட்டி), `மைனர்’ அமுதன் (கோவை பாபு), வில்லன் சஞ்சய் (சுபர்ணன்), வடிவு (ஷப்னம்) என விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேதான் அன்று ஆர்ட்டிஸ்டுகள் இருந்தார்கள். `ஆனாலும், செம்பாவும் திவ்யாவும் நேருக்குநேர் சந்திக்கிறக் காட்சிகள் இருக்கு; வெகுளிப் பெண்ணான செம்பாவின் குணாதிசயங்கள் மாறப்போகுதுனு வேற சொல்றாங்க’ என ஒரு சோர்ஸ் ஸ்பாட்டில் நுழைந்ததுமே சொன்னது.

யெஸ், ஷூட்டிங்ல மீட்டிங்காக நாம் சென்றிருந்த அந்த இடம் விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான `ராஜா ராணி' ஷூட்டிங் ஸ்பாட். மதிய உணவை முடித்துவிட்டு எல்லோரும் கடலை மிட்டாய் கடித்துக்கொண்டிருந்தார்கள்.

தொடரின் இயக்குநர் பிரவீன் பென்னட்டும் ஹீரோ கார்த்திக்கின் அண்ணனாக நடிக்கும் அமுதனும் நம்மை வரவேற்க, அமுதனை ஓரங்கட்டினோம். விக்ரம் நடித்த `காதல் சடுகுடு’ படத்தில் `மைனர்’ குஞ்சு கேரக்டரில் வந்து பெண்ணை மானபங்கப்படுத்த, `மைனர் குஞ்சைச் சுட்டுட்டேன்’ என விவேக் துப்பாக்கியால் சுட்டு ஓடவிடுவாரே அவரேதான். ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர் உட்பட எல்லோருமே `மைனர்’ என்றே இவரை அழைக்கிறார்கள்.

``நிறைய படங்கள்ல நடிச்சிருக்கேன் சார். ஆனா, இந்த ஓர் அடைமொழியைப் பிடிச்சுக்கிட்டு விடமாட்டேங்கிறாங்க. அந்த கேரக்டர் எனக்கு ரீச் தந்ததை மறுக்கலை. ஆனா, முந்தாநாள் பிறந்த பொடிப்பையன்கூட அந்தப் பேரைச் சொல்லி கலாய்க்கிறப்போ சிலநேரம் தலையைப் பிய்ச்சுக்கலாம்போல இருக்கு. டிவியில நடிக்கத் தொடங்கிட்டா சீரியல் கேரக்டர் பேரு ரீச் ஆகி, இதை மக்கள் மறந்துடுவாங்கனு பார்த்தா, இங்கே வந்த பிறகும் அந்த அடைமொழி மாறமாட்டேங்குது. முதல்ல சிலர் `மைனர் குஞ்சு’னு முழு அடைமொழியையும் சொல்லியே கூப்பிட்டதோட, மலையாளம், தெலுங்குல இருந்து வந்திருக்கிற நடிகைகளுக்கு `பேருக்கு என்ன அர்த்தம்’னு விளக்கம் வேற கொடுத்தாங்களா...  `மைனர்'னு மட்டுமாச்சும் கூப்பிட்டுக்கோங்கப்பா’னு கெஞ்சிக்கூத்தாடி, இப்போ `மைனர்’ ஆயிட்டேன்." என்கிறார்.

`பெயரிலேயே இவ்வளவு பிரச்னையா...' உச் கொட்டினோம். தொடர்ந்தார்.

``சீரியல் தொடங்கி ஒரு வருடம் ஓடிடுச்சு. சமீபத்துல அந்த நாளை கொண்டாடினோம். அதுக்கு ரெண்டுநாள் கழிச்சு செம்பா பிறந்தநாளும் வந்துச்சு. அதனால, ரெண்டையும் சேர்த்துக் கொண்டாடினோம். பர்த்டே பேபி செம்பாவுக்குத்தான் ஒரே பரிசு மழை’ என்றவர், சீரியல்ல எனக்குப் பொண்டாட்டிக்குப் பயப்படுகிற கேரக்டர். அதை வெச்சு என் மனைவி அர்ச்சனாவா நடிக்கிற ஸ்ரீதேவியைத்தான் இப்போ எல்லோரும் ஓட்டிக்கிட்டு இருக்காங்க" என்றார்.

`உங்களைத்தானே கலாய்க்கணும், ஏன் அவங்களை?' – காரணமும் சொன்னார்.

``அந்தப் பொண்ணுக்குச் சமீபத்துலதான் கல்யாணம் நடந்துச்சு. நாய் பூனைனு வளர்க்கிற அவங்களுக்கு, அதுங்களை போட்டோ எடுக்கிறதையே தொழிலாக் கொண்ட ஒருத்தர் கணவராக் கிடைச்சிருக்கார். கல்யாணம் முடிஞ்ச அடுத்த வாரமே ஷூட்டிங் வந்துட்டாங்க. `பகல் முழுக்க இங்கே புருஷனை அதட்டி, அடக்கித் திட்டி, வேலை வாங்கி நடிக்கிறீங்க, வீட்டுக்குப்போன பிறகும் இதே தோரணை வந்துடாம’னு சொல்லியே அவங்களை எல்லோரும் லந்து செய்றாங்க."

``கூட நடிக்கிற நடிகைக்கு என்னெல்லாம் பிடிக்கும்னு மைனர் எப்படி மோப்பம் பிடிச்சு வெச்சிருக்கார் பாருங்க" என்றபடி குறுக்கிட்டார், சஞ்சய். வடிவுத் தம்பியாக நடிக்கிற இவர், தொடரின் உதவி இயக்குநரும்கூட. `டபுள் ரோல் எப்படி?’ என்றோம்.

``சினிமா இயக்குநர் ஆகணும்ங்கிறது என் கனவு. இப்போதைக்கு சீரியல் டைரக்‌ஷன்லதான் சான்ஸ் கிடைச்சிருக்கு. அதுவும் பென்னட் சார்கிட்ட வேலை பார்க்கிறது, ஜாலியான அனுபவம். ஒரே நேரத்துல ரெண்டு சீரியல்... அதுவும் பிரைம் டைம்ல எடுத்திட்டிருந்தாலும், ஜாலியா வேலை வாங்குறார். அதனால, அவர் வழியிலேயே போகலாமேனு உதவி இயக்குநராச் சேர்ந்துட்டேன். கோர் ஆர்ட்டிஸ்ட்ல சிலர் வெச்சுச் செய்றாங்க. ரெண்டுநாள் கூடவே நடிச்சுட்டு, மூணாவது நாள் சீன் ரெடினு போனா, `அட இரு மாப்ள, போகலாம்’னு ஊர்க்கதை பேசக் கூப்பிடுவாங்க. அவங்களை சமாளிக்கிறது ரொம்பச் சிரமமா இருக்கும்" என்கிறார்.

அர்ச்சனா வடிவு (ஷப்னம்) கூட்டணியின் வில்லத்தனங்களை ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறதென்றால் மிகையில்லை. அர்ச்சனா திருமணமான புதுப்பொண்ணு என்றால், ஷப்னம் நிச்சயம் செய்யப்பட்டு திருமணத்துக்குத் தயாராய் இருக்கும் புதுப்பெண்.

‘ஷூட்டிங் ஸ்பாட்லேயே நீங்கதான் ரொம்ப சேட்டையாமா?' – கேள்விப்பட்டதைக் கேட்டோம்.

``யாரெல்லாம் இப்படிச் சொன்னாங்க. லிஸ்ட் கொடுங்க, அவங்க ஒவ்வொருத்தரும் என்னென்ன சேட்டைல்லாம் செஞ்சிருக்காங்கனு பட்டியல் தர்றேன். `செம்பா’வோட அப்பாவித்தனமான நடிப்பை அப்பப்போ இமிடேட் பண்ணிக் காட்டுவேன். திவ்யா தமிழ்ப் பேசுற ஸ்டைலைப் பார்த்தா நான் மட்டுமல்ல, யூனிட்டே வெடிச்சுச் சிரிக்கும். அமுதனோ `மைனர்’ங்கிற அந்தப் பட்டப் பேரை அழுத்திச் சொன்னா, அதைச் சேட்டைங்கிறார். யாராவது இன்னைக்கு இந்தந்த சேட்டைகளெல்லாம் பண்ணணும்னு கிளம்பி வருவாங்களா, எல்லாம் ஃப்ளோவுல வர்றது, ஒண்ணும் பண்ணமுடியாது’ என்றபடி ஷாட் கிளம்பியவரைத் தடுத்து, `எப்போ மேரேஜ்?' என்றோம். மொபைலைக் காதுக்குக் கொண்டுபோனவர், அப்படியே நகர்ந்தார்.

சமயத்தில் இதே கேள்வியைக் கேட்டே ஷப்னம் வாயை அடைக்கிறதாம் யூனிட்டும். `ஆனா, புத்திசாலித்தனமான பொண்ணுங்க. சீரியல் வாய்ப்புகள் கை நழுவிடக் கூடாதுனே கல்யாணத்தைத் தள்ளிப்போட்டுட்டு வருது. மாப்பிள்ளை வீட்டுல சீக்கிரம் முடிக்கச் சொல்லிக் கேட்டுக்கிட்டேதான் இருக்காங்களாம்’ என இவரைப் புகழவும் செய்கிறார்கள்.

மதியத்துக்குப் பிந்தைய ஷூட்டிங் தொடங்கியது. சுவாரஸ்யம் என்னவெனில், அடுத்த அரை நாள் முழுக்கச் செம்பாவுக்கு மட்டுமே ஷூட்டிங். அதற்காகப் பிரத்யேகப் பயிற்சியே தந்தார்களாம். அப்படி என்ன ஸ்பெஷல் சீன் என்பதைச் செம்பாவிடம் கேட்கலாம். அதற்கு முன் திவ்யாவிடம் பேசினோம்.

``வணக்கம், நல்லா இருக்கா, சாப்பிட்டுச்சா, ஓகே... இந்த நாலு வார்த்தைதாம் தமிழ்ல எனக்குத் தெரியும். ('ஓகே'யும் தமிழ் வார்த்தையாம்!)" என்றவரிடம், சிரமப்பட்டுப் பேசினோம்.

``தெலுங்கு சீரியல்ல நடிச்சுக்கிட்டு இருந்த எனக்குத் தமிழ்ல இது முதல் சீரியல். இப்போதான் என்னோட டிராக் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கு. சீக்கிரத்துலயே தமிழ் சீரியல் டாப் வில்லிகள் லிஸ்ட்ல இடம் பிடிக்கணும். அதுக்கு முன்னாடி தமிழ் கத்துக்கணும்" என்கிறார்.

தொடர்ச்சியாகப் போய்க்கொண்டிருந்த ஷூட்டிங்கிற்குச் சின்னதாக இடைவெளி விட, அவித்த கடலையைச் சுவைத்துக்கொண்டே நம்மிடம் பேசத் தயாராகி வந்தார், செம்பா.

முதல்ல பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து...

``பொதுவாப் பிறந்தநாள் அன்னைக்கு நான் லீவு எடுத்துட்டு ஃபேமிலியோட எங்கேயாவது வெளியில போயிடுவேன். இந்த ஆண்டும் அப்படித்தான். யூனிட்ல கொண்டாடின செலிப்ரேஷன் எல்லோரும் என்மேல வெச்சிருந்த அன்பைக் காட்டுச்சு." என்றவரிடம், `ஹீரோ கார்த்திக் அன்னைக்கு முழுக்க அதாவது, 24 மணி நேரத்தைக் குறிக்கிற விதமா 24 பரிசு தந்தாராமே... நிஜமா?' என்றோம்.

``பரிசு தந்தார். எத்தனைங்கிற கணக்கெல்லாம் அவசியமா? இந்த சோஷியல் மீடியா வந்தபிறகு என்னென்ன நியூஸ்லாம் வருது. பிக் பாஸ் வீட்டுக்குப் போறேன்னு ஒரு செய்தி. டைரக்டரே எங்கிட்ட வந்து, `அப்படியாம்மா’னு கேட்கிறார். அதுக்காக சோஷியல் மீடியாவை நான் குற்றம் சொல்லலை. என்னைப் பிரபலமாக்கியதுல அதுக்கும் நிறைய பங்கு இருக்கு. எனக்கு ஃபேன் பேஜ்லாம் இருக்கே!’ என்றவர், பிரேக் விட்டால் மொபைலும் கையுமாகி விடுகிறார்.

கிஃப்ட் கணக்கு அவசியமா என்றது போலவே, மானஸ் உடனான தன் காதல் குறித்துப் பேசுவதையும் தவிர்த்தார். (இன்ஸ்டாகிராமில் ஆல்யா மானஸ் இருவரும் இணைந்திருந்த படங்களை சமீபத்தில் நீக்கினார் என்பது நினைவிருக்கலாம்.)

`பிரத்யேகப் பயிற்சினு ஏதோ சொன்னாங்களே’ எனக் கேட்டோம்.

``அதுவா, ஒரு வருடமா எல்லாத்துக்கும் தலையாட்டிக்கிட்டு, அப்பாவியா அதிர்ந்து பேசாம இருந்த பொண்ணுகிட்ட திடீர்னு போய் அடி உதை முறைனு சொன்னா, அதெல்லாம் உடனே வந்துடுமா? ’இப்படி முறைங்கனு லேசா முறைச்சும் காமிச்சார் டைரக்டர். ஆனா, எனக்கு முறைக்க வரவேமாட்டேங்குது. `டேக்’ வாங்கிட்டே இருக்க, கடைசியில அவரே சீரியஸா என்னை முறைக்கிற அளவுக்குப் போயிடுச்சு. `வாழ்க்கையில இதுவரைக்கும் கோபப்பட்டதே இல்லையா’, `ஒருத்தரைக்கூட கைநீட்டி அடிச்சதில்லையா’னு `பாட்ஷா’வுல ரஜினி சார்கிட்ட கேட்கிறமாதிரி எல்லாம்கூட கேட்டுப் பார்த்துட்டாங்க. எதுவும் வொர்க் அவுட் ஆகலை. அதனால, இப்போ டிரெய்னிங் கொடுக்குறாங்க. அதாவது, ரௌத்திரம் பழகப் பயிற்சி" எனச் சிரிக்கிறார்.

`எதற்காக இந்தப் பயிற்சி?’ என்றால், `எனக்கு எதுவும் தெரியாது’ எனச் சமாளிக்கிறார்.

சீரியலின் இயக்குநர் பிரவீன் பென்னட்டிடமே பேசினோம்.

``மெகா தொடர்னா, கலகலப்பா இருக்கணும்கிறது என் விருப்பம். அதுல காதலையும் கலந்து தந்தா, நல்லா இருக்கும்னு தோணுது. அதே பாணியில போறதுதான் `ராஜா ராணி’யோட ரீச்சுக்குக் காரணமா இருக்கும்னு நினைக்கிறேன். நான் இயக்குற இன்னொரு சீரியலான `சரவணன் மீனாட்சி'யும் இதே டைப்லதான் போய்க்கிட்டு இருக்கு. ஷூட்டிங் ஸ்பாட்டைப் பொறுத்தவரை எனக்கு இறுக்கமானதா இருக்கக் கூடாது. அப்பப்போ அவுட்டோர் ஷூட்டிங் ஏற்பாட்டை ஒரு புத்துணர்ச்சிக்காகப் பண்றோம். சமீபத்துல ஏற்காடு போயிட்டு வந்தோம். `கேம்ப் ஃபயர்’ கொண்டாட்டமெல்லாம் ஜாலியா இருந்தது" என்றவரிடம், சீரியலின் போக்கு, அடுத்த திருப்பங்கள் குறித்துக் கேட்டோம்.

``ராஜசேகர் - லக்ஷ்மி வீட்டுக்கு வேலைக்காரியாக வருகிறார், செம்பா. ஒரு கட்டத்தில் ராஜசேகரின் இளைய மகனான கார்த்திக் செம்பாவைக் கல்யாணம் முடிக்கவேண்டிய சூழல். கார்த்திக் ஏற்கெனவே திவ்யாவைக் காதலித்தவர். வேலைக்காரியாக வந்தவள், வீட்டு மருமகளானது நாத்தனார்கள் அர்ச்சனா, வடிவுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் செம்பாவைத் துரத்த துடிக்கிறார்கள். எல்லாச் சிரமங்களையும் மீறி, வீட்டில் செம்பா நல்ல பெயர் எடுக்கிறார். அவருக்கான டார்ச்சர் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஓராண்டு இப்படியே போக, இப்போது கதையில் அடுத்தகட்ட நகர்வு. அதாவது, கார்த்திக்கின் முன்னாள் காதலி திவ்யா மறுபடியும் அந்த வீட்டுக்குள் வருகிறாள். இந்தமுறை வீட்டில் அத்தனை பேரிடமும் நல்ல பெயர் வாங்கி, அப்படியே கார்த்திக்கிடமிருந்தும் செம்பாவைப் பிரிக்க முயற்சி செய்கிறார். இந்த முயற்சியைத் தடுத்த நிறுத்த அப்பாவிப் பெண் செம்பா என்ன செய்யப்போகிறார்? என்பதை இனிவரும் நாள்களில் பார்க்கலாம்.

பொதுவா விஜய் டிவி சீரியல்கள்ல கொடூர வில்லத்தனங்கள் இருக்காது. யதார்த்தத்தைக் காட்டுகிறோம். அதேபோல கதையும் ரசிகர்களின் மன ஓட்டத்தோடு ஒன்றியதாகவே இருக்கும். செம்பா எடுக்கிற முடிவும் கிட்டத்தட்ட அப்படிப்பட்டதாவே இருக்கும்" என்கிறார், பிரவீன் பென்னட்.

அடுத்த வாரம் வேறொரு ஷூட்டிங் மீட்டிங் ஏரியாவில் சந்திக்கலாம்.