Published:Updated:

`` `மாயா’ சீரியல்ல கிட்டத்தட்ட மெயின் ஹீரோ நான்!’’ - மனோபாலா

வே.கிருஷ்ணவேணி

'மாயா' சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறார், நடிகர் மனோபாலா. திரைப்படம் டூ சீரியல் அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

`` `மாயா’ சீரியல்ல கிட்டத்தட்ட மெயின் ஹீரோ நான்!’’ - மனோபாலா
`` `மாயா’ சீரியல்ல கிட்டத்தட்ட மெயின் ஹீரோ நான்!’’ - மனோபாலா

ன் டிவி-யில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் சீரியல், 'மாயா'. இந்த சீரியலின் தயாரிப்பாளர் சுந்தர்.சி, பல மாறுபட்ட, நகைச்சுவைப் படங்களை அளித்தவர். தற்போது அதேபோல நகைச்சுவை கலந்த சீரியலை உருவாக்கியிருக்கிறார். ஏற்கெனவே ஒளிபரப்பாகிவரும் `நந்தினி' சீரியல் ஹிட் லிஸ்டில் இருக்க... இப்போது இந்த சீரியலில் களமிறங்கியிருக்கிறார். `மாயா' சீரியலுக்கான புரொமோஷனில் கவனம் ஈர்த்தவர் நடிகர் மனோபாலா. அவரிடம் பேசினேன். 

`` `மாயா’ சீரியல் பற்றி?’’

``இந்தச் சீரியல் கிட்டத்தட்ட ஹாரர் மூவி மாதிரிதான். 2,000 வருடத்துக்கு முன்பு உள்ள விஷயத்தை, இப்போ இருக்கிற சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி மாற்றியிருக்கிறார் சுந்தர் சி. இந்தச் சீரியலுக்காக என்னை அழைக்கும்போது, 'அன்பே வா' நாகேஷ் ரோல் போன்றது உங்களுடைய ரோல்னு சொல்லித்தான் கூப்பிட்டாங்க. எனக்கும் வித்தியாசமான கதை என்பதால் ரொம்பப் பிடிச்சிருந்தது. ஓகே சொல்லிட்டேன்."

`` 'மாயா' சீரியல் நான்கு மொழிகளில் ஒளிபரப்பாகிறதாமே?"

"ஆமாம். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் ஒளிபரப்பாகிறது. கேரளா, ஆந்திரானு இந்தப் புரொமோஷனைப் பார்த்துட்டு எப்போ டெலிகாஸ்ட் பண்ணப்போறீங்கனு கேட்கிறாங்க. அந்த வகையில எனக்குப் பெருமையா இருக்கு. ஆரம்பத்தில் இந்தச் சீரியலுக்கான ஷூட்டிங்கை ஊட்டியில் எடுத்தாங்க. அதற்குப் பிறகு சென்னை போன்ற இடங்களில் எடுத்துக்கிட்டு இருக்காங்க."  

"இந்த சீரியலில் நீங்கள் நடித்திருக்கும் கேரக்டர் பற்றி?"

"கிட்டத்தட்ட மெயின் ஹீரோ மாதிரியே இருக்கும். ஹீரோவுக்கு கொடுக்கிற அத்தனை முக்கியத்துவமும் என் கேரக்டருக்கு இருக்கு. கதைப்படி, காட்டுக்குள் இருக்கும் ஒரு பெரிய பங்களாவில் நிர்வாகியாக இருப்பேன். கூடவே என் மனைவியும் இருப்பாங்க. அப்படி வாழ்ந்துக்கிட்டு இருக்கும்போது, ஒருநாள் இரவு அறிமுகம் இல்லாத மூன்று பேர் வந்து அந்தப் பங்களாவில் தங்குவாங்க. அவங்களுக்கு நான் சர்வீஸ் பண்ற மாதிரி கேரக்டர். அடுத்தடுத்து கதை நகரும்."

"சீரியலுக்குப் போனவங்களுக்கு சினிமா வாய்ப்பு குறையுறது உண்மையா?" 

"இதுக்கு முன்னாடி 'சினிமா வாழ்க்கையை இழந்த பிறகுதான் சீரியலுக்குப் போவாங்க' என்கிற நிலை இருந்தது. இப்போ அப்படி இல்ல. இன்னும்  பழசையே யோசிச்சுக்கிட்டு இருந்தா கண்டிப்பா சினிமாக்காரன் வேஸ்ட்டுதான். பிரகாஷ் ராஜ் போன்ற பல முன்னணி நடிகர்கள் இப்போது 'வெப் சீரிஸ்'ல கவனம் செலுத்துறாங்க. நானும் இப்போ 'வெப் சீரிஸ்' தயாரித்துக்கொண்டிருக்கிறேன். படம் கிடைக்காமல் நான் சீரியலுக்கு வரலை."  

"இந்த சீரியலில் பெரும்பாலும் சீரியல் நடிகர்கள் நடிக்கவில்லையாமே?"

"ஆமா. சுந்தர் சி சார் ஸ்கிரிப்ட்டில் ஏற்கெனவே 'நந்தினி' சீரியல் போய்க்கிட்டு இருக்கு. அதில் முழுக்க முழுக்க சீரியல் முகங்கள்தான் இருக்காங்க. அதற்காகத்தான் இதில் சிங்கமுத்து, எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி என சினிமா முகங்களை நடிக்க வைத்திருக்கிறார். அதற்காக சினிமாவில் நடித்துவிட்டு சீரியலுக்கு வந்துவிட்டால் வாய்ப்பு கிடைக்காமல் எல்லாம் போகாது. டெல்லி கணேஷ் அவர்கள் நிறைய சீரியல்களில் நடித்தார். அவருக்கு 'இரும்புத் திரை' படத்தில் வாய்ப்பு வந்து அருமையா நடிச்சிருக்காரே! அதனால, இனிமே, சினிமாவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவுக்கு சீரியலுக்கும் முக்கியத்துவமும் மவுசும் இருக்கும் என்பது என் கருத்து. இந்த இரண்டுக்குமான பாகுபாட்டைப் பார்த்துட்டு வீட்டுல உட்கார்ந்திருந்தா... வீட்டுலேயே உட்கார்ந்திருக்க வேண்டியதுதான்." 

"தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் பற்றி?"

"சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சீமராஜா', கார்த்தி நடிக்கும் `கடைக்குட்டி சிங்கம்' போன்ற படங்களில் நடிச்சிருக்கேன். அடுத்து சூர்யா படத்தில் நடிக்கிறேன். டைரக்டருக்குப் பிடித்த நடிகன் நான். அதனாலதான் இத்தனை வாய்ப்புகள் வருது. நீண்ட நாள்கள் கழித்து சேரன் அவர்கள் இயக்கவிருக்கும் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறேன். தம்பி ராமையா மகன், எம்.எஸ்.பாஸ்கர்னு பெரிய பட்டாளமே அதில் நடிக்கிறோம்." 

"சுந்தர் சி உங்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கக் காரணம்?"

"முன்பே சொன்ன பதில்தான். நான், இயக்குநர்களுக்குப் பிடித்த நடிகன். வேண்டாம் என்றால் என் முகத்துக்கு நேராகவே சொல்லிடுவாங்க. என்ன... சுந்தர் சி அவர்களுடைய பெரும்பாலான படங்களில் நான் இருக்கிறேன். அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்." 

"சினிமா, சீரியல் இரண்டையும் பேலன்ஸ் பண்ண முடியுதா?" 

"கஷ்டம்தான். அதற்காகத்தான் எனக்கு ஏற்ற மாதிரி தேதிகளை மாற்றிக்கொடுக்கிறார் சுந்தர் சி. படத்தில்கூட அவ்வளவு காமெடி இருக்குமானு தெரியலை. ஆனா, 'மாயா' சீரியலில் எனக்கு வெயிட்டான காமெடி ரோல் கொடுத்திருக்கார்'' என்றபடி ஷூட்டிங்குக்கு ரெடியானார் மனோபாலா.