Published:Updated:

"ஷூட்டிங் ஸ்பாட் பாலிடிக்ஸ் சகிக்காமதான், வெளியேறினேன்!" -'முள்ளும் மலரும்' தேஜஸ்வினி

அய்யனார் ராஜன்

'முள்ளும் மலரும்' தொடரிலிருந்து ஹீரோயின் தேஜஸ்வினி வெளியேறியிருக்கிறார். என்ன காரணம்?!

"ஷூட்டிங் ஸ்பாட் பாலிடிக்ஸ் சகிக்காமதான், வெளியேறினேன்!" -'முள்ளும் மலரும்' தேஜஸ்வினி
"ஷூட்டிங் ஸ்பாட் பாலிடிக்ஸ் சகிக்காமதான், வெளியேறினேன்!" -'முள்ளும் மலரும்' தேஜஸ்வினி

'....... சீரியலில் இருந்து ....... வெளியேறியது ஏன்?' என தினமொரு கட்டுரை தரலாம்போல! அந்தளவுக்கு இப்போது சின்னத்திரை உலகில் தினந்தோறும் யாராவது எந்த சீரியலில் இருந்தாவது வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள். லேட்டஸ்ட்டாக, 'முள்ளும் மலரும்' தொடரில் ஹீரோயின் தேஜஸ்வினி வெளியேறியிருக்கிறார்.

கன்னட சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தவரை காமெடி நடிகர் முனீஸ்ராஜாவுக்கு ஜோடியாக்கி 'முள்ளும் மலரும்' தொடருக்குக் கூட்டி வந்தார்கள். தொடர் பிக்அப் ஆகி 200 எபிசோடுகளைக் கடந்துவிட்ட சூழலில், இப்போது தொடரிலிருந்து ஏன் வெளியேறினாராம் தேஜஸ்வினி?!

"என்னை ஹீரோயின்னு சொல்லிதான் அந்த சீரியலுக்குக் கூட்டி வந்தாங்க. தமிழ் சரியா பேச வராத போதும் டைரக்டர் சொன்னதை உள்வாங்கி என்னால எந்தளவு பெஸ்ட்டா தரமுடியுமோ, அந்தளவுக்கு வொர்க் பண்ணி நடிச்சேன். சீரியல் நல்லாவே போச்சு. அந்த யூனிட், புரொடக்‌ஷன் ஹவுஸ்ல இருக்கிறவங்கனு எல்லோரிடமும் என்னோட ரிலேசன்ஷிப்பும் நல்லாவே இருந்தது. பிரைம் டைம்ல ஒளிபரப்பான இந்த சீரியலுக்கு நல்ல ரேட்டிங்கும் கிடைச்சது.

இப்படிப் போயிட்டிருந்த சூழல்ல ஏன்னு தெரியலை, திடீர்னு 'விஜி'ங்கிற இன்னொரு கேரக்டரை சீரியலுக்குள்ள கொண்டு வந்தாங்க. தர்ஷா நடிச்ச அந்தக் கேரக்டர் முதல்ல நெகட்டிவா காட்டப்பட்டுச்சு. சீரியல்ல இடையில புதுப்புது கேரக்டர் அறிமுகமாவது சகஜம்தானேனு நினைச்சேன். ஆனா, கொஞ்ச நாள் கழிச்சு அந்தக் கேரக்டர் அப்படியே என்னோட டிராக்ல கிராஸ் ஆக, அந்தக் கேரக்டரை பாசிட்டிவா மாத்திட்டு, என் கேரக்டரை நெகட்டிவா மாற்றத் தொடங்கினாங்க. அதாவது, ஹீரோயினா இருந்த நான் வில்லியாக, அந்தப் பொண்ணை ஹீரோயினுக்கு நிகரா கொண்டு வந்தாங்க. இந்தமாதிரி ஒரு ஆள் மாறாட்டத்தை இதுக்கு முன்னாடி எங்கேயாவது கேள்விப்பட்டிருக்கீங்களா? நான் கேள்விப்பட்டதில்லை.

அதனால, என் கேரக்டருக்கு சீரியல்ல பலத்த டேமேஜ். இந்தக் கேரக்டர் மாற்றத்துலேயே எனக்கு உடன்பாடில்லை. நொந்து போனேன். அப்போகூட, அதைப் பெருசா எடுத்துக்காம தொடர்ந்து நடிச்சுக்கிட்டிருந்தேன். ஆனா, கேரக்டர் சேஞ்ச் ஆகத் தொடங்கினதும் ஷூட்டிங் ஸ்பாட்ல என்னோட மரியாதையும் குறையத் தொடங்கியது. அதுவும் அந்தப் பொண்ணு (தர்ஷா) நடந்துக்கிட்ட விதம் என்னை ரொம்பவே வருத்தமடையச் செய்தது. தன்னோட கேரக்டருக்கு வெயிட் கிடைக்க ஆரம்பிச்சுட்டா, யாரை என்ன வேணாலும் பேசலாமா... புரியும்படியா சொல்லணும்னா, ஷூட்டிங் ஸ்பாட்ல அவங்க பண்ண பாலிடிக்ஸ் என்னைப் புண்படுத்தியது. நடக்கிறதை எல்லாம் சகிச்சுக்கிட்டு தொடர்ந்து அங்கே வொர்க் பண்ணணும்கிற அவசியம் எனக்கில்லை. அதனால, 'எனக்குப் பதிலா யாரையாவது நடிக்க வெச்சுக்கோங்க'னு சொல்லிட்டு நானே வெளியேறிட்டேன்!'' என்கிற தேஜஸ்வினி, இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் 'பொண்ணுக்குத் தங்க மனசு' தொடரில் கமிட் ஆகியிருக்கிறார்.

தேஜஸ்வினியை ஹீரோயினாகக் கமிட் செய்த இயக்குநர் ராமச்சந்திரனிடம் கேட்டதற்கு, "தொடர்ல இருந்து நான் வெளியேறியே ஆறு மாசம் ஆகிடுச்சு சார். தேஜஸ்வினி ஏன் வெளியே போனாங்கனு என்னைக் கேட்காதீங்க ப்ளீஸ்!" என்கிறார்.

தர்ஷாவிடம்  இதுபற்றி கருத்துக் கேட்க முயன்றோம். தொடர்ந்து அவரது மொபைல் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருக்கிறது.

"காமெடியன்ல இருந்து ஹீரோவா புரமோஷன் கிடைச்ச முதல் சீரியல். அதுல ஏன் இத்தனை குழப்பம்?" என தொடரின் ஹீரோ முனீஸ்ராஜாவைக் கேட்டால், "அண்ணே இந்த விவகாரத்துல என்னை ஏன் இழுத்து விடுறிங்க... வில்லனை ஹீரோவா பார்க்க ஆசைப்படுறீங்களோ?!" என்கிறார், அப்பாவியாக!

என்று தீரும் இந்தப் பிரச்னைகள்?!