Published:Updated:

"ஆமாவா, இல்லையா... 2018-ல் 'செம்பருத்தி' கார்த்திக் - சபானாவை மிரட்டிய கேள்வி!"

அய்யனார் ராஜன்

'செம்பருத்தி' ஜோடி கார்த்திக் - சபானா 2018-ல் பெற்ற புகழும், சந்தித்த சர்ச்சைகளும் குறித்துப் பேசியிருக்கிறார்கள்.

"ஆமாவா, இல்லையா... 2018-ல் 'செம்பருத்தி' கார்த்திக் - சபானாவை மிரட்டிய கேள்வி!"
"ஆமாவா, இல்லையா... 2018-ல் 'செம்பருத்தி' கார்த்திக் - சபானாவை மிரட்டிய கேள்வி!"

ஜீ தமிழ் சேனலில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகிற சீரியல், 'செம்பருத்தி', வேலைக்காரப் பெண்ணாக ஒரு பெரிய குடும்பத்திற்குள் நுழையும் ஹீரோயின், அந்த வீட்டின் மூத்த மகனை மணந்து அந்த வீட்டின் மருமகள் ஆவதும், அதற்குப் பின் நடக்கும் நிகழ்வுகளுமே இந்த சீரியலின் கதை. ப்ரியா ராமன், 'ஊர்வம்பு' லக்ஷ்மி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வரும் இந்த சீரியலை இயக்கி வருகிறார், சுலைமான். வேலைக்காரப் பெண் மருமகள் ஆவதை அந்த வீட்டில் உள்ள சிலர் கடுமையாக எதிர்க்க, அதை அவர் சமாளித்து நிற்பாரா என்பதையே பல திருப்பங்களுடன் இதுவரை காட்டி வருகிறார்கள்.

2017 இறுதியில் தொடங்கிய இந்த சீரியல், சில எபிசோடுகளிலேயே டாப் கியருக்கு மாறி, அதே வேகத்தைத் தக்க வைத்திருப்பதற்குக் காரணம், கார்த்திக் - சபானா காம்பினேஷன். இருவருக்குமிடையே கெமிஸ்ட்ரி செமயாக வொர்க் அவுட் ஆகிவிட்டதாக சீரியல் ரசிகர்கள் நம்பத் தொடங்கி, வெகு நாள்களாகி விட்டன. விளைவு... கார்த்திக், சபானா இருவரையும் சோஷியல் மீடியாவில் பின்பற்றுகிறவர்களின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரிக்க, அந்தத் தாக்கத்தில் சீரியலும் நல்ல ரேட்டிங் பெற்று, விருதுகளையும் அள்ளிக் கொண்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன் வழங்கப்பட்ட 'ஜீ தமிழ் குடும்ப விருது'களில் சிறந்த ஹீரோயின், வில்லி, ஜோடி... என மூன்று பிரிவுகளில் 'செம்பருத்தி'யே வின்னர்.

ஒளிபரப்பாகிற சேனல் தாண்டி, வெளியிடங்களிலும் விருதுகளை வாங்கி சபானா தனியாகவும் ஸ்கோர் செய்தார். போட்டி சேனலான விஜய் டிவியில் 'பிக் பாஸ் 2' தொடங்கப்பட்டபோதுகூட, பார்வையாளர்களைத் தக்கவைக்க, சனி, ஞாயிறுகளில் ஒளிபரப்பப்பட்ட தொடர்களில், 'செம்பருத்தி' சீரியலும் ஒன்று. சமீபத்தில், ஜீ தமிழ் சேனல், ரேட்டிங்கில் புதிய உச்சத்தை அடைந்ததிலும் இந்த சீரியலுக்கு முக்கியப் பங்கு உள்ளது.

இவ்வளவு உச்சத்துக்குச் சென்றுவிட்டால், சர்ச்சையை டச் பண்ணாமல் கடக்க முடியுமா? இந்த ஜோடியும் எதிர்கொண்டது. டிவியில் ரசித்து ஆதரவு தந்த, தந்து கொண்டிருக்கிற ரசிகர்களே அந்தக் கேள்வியைக் கேட்டார்கள். 'நீங்க ரெண்டுபேரும் நிஜத்துல லவ் பண்றீங்களாமே, ஆமாவா இல்லையா?' என்பதே அந்தக் கேள்வி. "கடந்த ஆண்டு அதிகம் பேர்கிட்ட இருந்து நான் எதிர்கொண்ட கேள்வி இதுதான். "இன்ஸ்டாகிராம்'ல தினமும் கேட்டுக்கிட்டே இருக்காங்க." என்கிறார், சபானா. 

"சரி, பதில் என்ன?" என்றால், காதில் கேட்காதது போலவே கடந்து சென்றுவிட்டார், கார்த்திக். சபானாவோ, "இருக்குனும் சொல்லமாட்டேன், இல்லைனும் சொல்லமாட்டேன்" என ஒரு குழப்பமான, மழுப்பலான பதிலைத் தந்தார்.

தங்களுக்குப் புரியும்படியான பதிலை அல்லது தாங்கள் விரும்பிய பதிலைப் பெற முடியாததால், தொடர்ந்து ரசிகர்கள் இந்தக் கேள்வியைக் கேட்டபடியே இருக்கிறார்கள். கதைப்படி, அடுத்த சில தினங்களில் சீரியலில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. 

"2019-ஆம் ஆண்டிலாவது, 'ஆமா', 'இல்லை' என தெளிவான ஒரு முடிவைச் சொல்வாங்களா?" என்பது சீரியல் ரசிகர்களின் வேண்டுகோள். 

"என்ன சபானா, சொல்லலாமே?!" என்றால், "ஹலோ, யார் பேசுறது..." என மொபைலைக் காதுக்குக் கொண்டு சென்றபடியே, நகர்ந்து செல்கிறார். "உண்மையிலேயே போன் வந்ததா?" என்றெல்லாம் கேட்காதீர்கள். வாய்ப்பு வரும்போது, அவர்களே சொல்வார்கள்!