Published:Updated:

‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்’ பட்டம் ஜெயிக்க என்னலாம் பண்ணனும் தெரியுமா?

விகடன் விமர்சனக்குழு
‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்’ பட்டம் ஜெயிக்க என்னலாம் பண்ணனும் தெரியுமா?
‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்’ பட்டம் ஜெயிக்க என்னலாம் பண்ணனும் தெரியுமா?

14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் நடிப்புத் திறமைக்கு தளம் அமைத்த 'ஜூனியர் சூப்பர் ஸ்டார்' நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் வின்னராக தேர்வாகியுள்ளார் அஷ்வந்த். முதல் ரன்னராக வனீஷாவும், இரண்டாவது ரன்னராக பவித்ராவும் தேர்வாகியுள்ளனர். நிகழ்ச்சியில் வின்னராக தேர்வு செய்யப்பட்ட அஷ்வந்தின் பெற்றோர்கள் அசோக்குமார், அகிலாவிடம் பேசினோம்,

முதலில் அஷ்வந்தின் அப்பா அசோக்குமார் பேசினார்,

''கே.கே.நகரில் உள்ள வாணி வித்யாலயா பள்ளியில் யு.கே.ஜி படித்து வருகிறான். அவனுக்கு, குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே நடிப்பு என்றால் பிடிக்கும். டி.வி யைப் பார்த்து நடிக்கவும், ஆடவும் ஆரம்பித்துவிட்டான். அதைப் பார்த்தப் பிறகுதான் அவனை ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியின் செலக்ஷனுக்கு கூட்டி வந்தோம்.

ஆரம்பத்தில் மழலை மாறாமல் இருந்ததால், பேசக் கஷ்டப்பட்டான். அவன் பேசும் வார்த்தைகளை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. அதற்குப் பிறகான எபிசோடுகளில் நன்றாக பேசக் கற்றுக் கொண்டான். அவனுக்குத் திரைப் பட்டறையில் இருந்து விஜி என்பவர் பாடி லாங்குவேஜை சொல்லிக் கொடுப்பார். ஒவ்வொரு ஸ்கிரிப்டுக்கும் 13, 14 பக்கங்கள் இருக்கும். அதை மனப்பாடம் பண்ணனும். அதற்குப் பிறகு அதை பாடி லாங்குவேஜோடு நடித்துக் காட்ட வேண்டும். இதற்கு நடுவில் பள்ளிக் கூட படிப்பையும் பார்க்கணும். வெள்ளிக்கிழமை முதல் திங்கள் வரை நிகழ்ச்சிக்கான வேலைகள் இருக்கும்.

இறுதி கட்டத்துக்கு வரும்போது அவனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போயிடுச்சு. 'உன்னால பண்ண முடியுமா கண்ணா'னு கேட்டேன். 'அதான் ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்தாச்சுல்லப்பா. பண்றேன்' என பெரியவங்க கணக்காப் பேசினான். அவ்வளவு டெடிகேட்டிவ். அவனோட துறுதுறு நடிப்பு, பேச்சு என ஒவ்வொரு விஷயங்களையும் ரசிச்சுப் பார்த்துட்டு இருப்போம். எங்களுக்கு வளசரவாக்கத்தில் தான் வீடு. இப்போது அவனுக்கு ஐந்து வயது. இன்னும் நிறைய பண்ணனும் என ஆசைப்படுறோம். சினிமாவில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கு. இப்போதைக்கு படிக்கட்டும், நல்ல வாய்ப்பு வரும் போதே ஓ.கே செய்யலாம்னு முடிவு செய்திருக்கோம்.'' என்ற அசோக்குமாரைத் தொடர்ந்து பேசுகிறார் அகிலா,

'ஷூட்டிங் ஸ்பாட்ல எல்லோருக்கும் அவனைப் பிடிக்கும். விளையாட்டும், சேட்டையும் தான் எப்போதும். அர்ச்சனா மேடம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் எல்லாக் குழந்தைகளுக்கும் கிரையான்ஸ், புக்ஸ், டிராயிங் புக்ஸ் மற்றும் படிப்புக்குத் தேவையான பொருட்களை அடிக்கடி கொடுத்துட்டே இருப்பாங்க. எல்லாக் குழந்தைகளையும் சரி சமமாத்தான் நடத்துவாங்க.

இறுதிப் போட்டியில் தேர்வாகிட்டான் என அறிவித்தவுடனே என்னப் பண்றதுனே தெரியல. மனசுக்குள்ள அவ்வளவு சந்தோஷம். நாங்க இறுதிப் போட்டிக்கு வரும் போது, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமதான் வந்தோம். ஒரு வேளை கிடைக்கலனா மனசு கஷ்டமாகிடுமேனு தான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாம இருந்தோம். இப்போ ரொம்ப சந்தோஷம். இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கிட்ட எல்லாக் குழந்தைகளுமே திறமையானவங்கதான். அவங்க எல்லாருமே இன்னும் மேல மேல உயரத்துக்குப் போகணும். அதுதான் எங்கள மாதிரியான பெற்றோர்களுடைய ஆசை.'' என்றார் அகிலா.

-வே. கிருஷ்ணவேணி