Published:Updated:

'ப்ளீஸ்... இந்த ரகசியத்தை வெளில சொல்லிடாதீங்க!’ - ப்ரியமானவள் ப்ரவீணா

விகடன் விமர்சனக்குழு
'ப்ளீஸ்... இந்த ரகசியத்தை வெளில சொல்லிடாதீங்க!’ - ப்ரியமானவள் ப்ரவீணா
'ப்ளீஸ்... இந்த ரகசியத்தை வெளில சொல்லிடாதீங்க!’ - ப்ரியமானவள் ப்ரவீணா

'சேச்சி... நிங்கள் சுந்தரமாயிட்டு இருக்கின்னு...’ எடுத்தவுடனேயே அரைகிலோ ஐஸ் கட்டியை தலையில் தூக்கி வைத்தார் ‘பிரியமானவள்’ உமா, நிஜத்தில் பிரவீணா. மேடமுக்கு ஃபேஸ்புக், ட்விட்டர், பட்டி, தொட்டியெங்கும் ரசிகர்கள்.

சன் டிவி ‘பிரியமானவள்’ தொடரின் ராணி இவர்தான். சீரியலில் அன்பான கணவருக்கு அடக்கமான மனைவி, நான்கு பாசமான மகன்களுக்கும், மருமகள்களுக்கும் ஸ்வீட் மம்மி என்றால், நிஜவாழ்க்கையிலும் ப்ரவீணா ஒற்றை அழகு மகளுக்கு, அன்பைக் கொட்டிக் கொடுக்கும் அம்மா. ஒரு ப்ரேக் நேரத்தில் அவரை சந்தித்தோம்.

’ஒரு சமயத்தில் நீங்க கேரளாவின் செல்ல ஹீரோயின். இப்போ தமிழகத்திலும்... இந்த மாற்றம் எப்படி இருக்கு?’

”ரொம்பவே சந்தோஷமா இருக்கு. மலையாளத்தில் நிறைய படங்கள் பண்ணிட்டேன். கூடவே சீரியல்களும். இருந்தாலும் தமிழுக்கு வர ஒரு தயக்கம் இருந்தது. எத்தனையோ இயக்குநர்கள் கேட்டும் கூட மறுத்துட்டேன். அந்த நேரத்தில்தான் ஒருநாள் ‘பிரியமானவள்’ வாய்ப்பு வந்தது. ஏதோ மறுக்கத் தோணாமல் ஓகே சொல்லிட்டேன். ஆனா, அது என் வாழ்க்கையையே மாத்தற மேஜிக்னு அப்போ தெரியலை. இன்னைக்கு தமிழ்நாட்டில் மட்டுமில்ல, கேரளாவிலும் என்னை ப்ரவீணாங்கறதைவிட ‘உமா’வாத்தான் தெரியுது. இது ‘பிரியமானவள்’ சீரியலும், தமிழக ரசிகர்களும் எனக்கு கொடுத்த லைஃப் டைம் கிஃப்ட்.”

‘சீரியலில் மட்டுமில்லை...நிஜத்திலும் நீங்க அன்பான அம்மா. ஒரு அம்மாவா குழந்தைகளை எப்படி வளர்க்கணும்னு எங்களுக்கும் சொல்லுங்களேன்?’

”என்னோட மகள் கெளரி. அவளுக்கு நான் அன்பான அம்மா மட்டுமில்லை...கண்டிப்பான அம்மாவும் கூட. பெண் குழந்தைகள் தைரியமாவும் இருக்கணும். அதே நேரம், நம்மைச் சுத்தி நடக்கற விஷயங்களைப் புரிஞ்சுக்கற மனப்பக்குவமும், பொறுமையும் கூடவே இருக்கணும். அதை என் பொண்ணுக்கு எப்பவும் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறேன். பெண் குழந்தைகளுக்கு மட்டுமில்லை. இது ஆண் குழந்தைகளோட வளர்ப்புக்கும் பொருந்தும்.” 

‘இவ்ளோ அழகா இருக்கீங்க. அதுக்கு காரணம் கேரளாவா இருந்தாலும்,  உங்களோட அழகுக்கு வேற என்ன பர்சனல் சீக்ரெட்ஸ் இருக்கு?’

’’ஹா...ஹா.. அதொன்னும் சீக்ரெட்ஸ்லாம் கிடையாது. தலைக்கு சுத்தமான தேங்காய் எண்ணெய்தான் இப்பவும் உபயோகிக்கறேன். கண்ட கண்ட காஸ்மெடிக்ஸ் உபயோகிக்க மாட்டேன். சாப்பாட்டில் எதையும் வேண்டாம்னு ஒதுக்கவே மாட்டேன்.  கொஞ்சமா நெய், அளவா தேங்காய் எண்ணெய், காய்கள், பழங்கள் இதுதான் என் க்ளோயிங் ஸ்கின் சீக்ரெட். யார்ட்டையும் சொல்லிடாதீங்க...’’ 

வாழ்க்கைக்கு எது அவசியம் பணமா, புகழா?

’’ரெண்டுமே கிடையாது. வாழ்க்கையோட பயணத்தில் இவை நமக்கு கிடைக்கும் அவ்ளோதான். மத்தபடி உண்மையான அன்பு, மகிழ்ச்சி, குடும்பம், குழந்தைகள்தான் அவசியம்...அத்தியாவசியம். அப்படிப்பட்ட சந்தோஷங்கள், சின்னச் சின்ன சண்டைகள், அன்பு, பிரியம் தான் நம்மை வாழ்க்கைல ஒரு பிடிப்போட வாழ வைக்கும்.’’

எப்படி இப்படி கொஞ்சம் கூட அலட்டலே இல்லாம இருக்கீங்க?

’’அதுக்கு காரணம், நான் வாழ்க்கையில் கடந்து வந்த சுக, துக்கங்கள். எதுவுமே நிரந்தரமில்லை. எல்லாரையும் அனுசரிச்சு, எதிர்காலத்துக்காக சேமிச்சு வைச்சு, வேலையைத் தாண்டி குடும்பம்தான் நமக்கு முக்கியம்ங்கற எண்ணத்துடன், மத்தவங்களை மனுஷங்களா மதிக்கிற குணமும் வாழ்க்கைக்கு ரொம்பவே முக்கியம்.’’

கொஞ்சும் தமிழில் பேசினாலும் உமா நிஜமாகவே அழகான, அன்பான 'பிரியமானவள்’!

-பா.விஜயலட்சுமி