Published:Updated:

அட... டிவி, சினிமா இரண்டிலும் ஜொலிக்கும் இயக்குநர்கள் இவர்கள்?!

விகடன் விமர்சனக்குழு
அட... டிவி, சினிமா இரண்டிலும் ஜொலிக்கும் இயக்குநர்கள் இவர்கள்?!
அட... டிவி, சினிமா இரண்டிலும் ஜொலிக்கும் இயக்குநர்கள் இவர்கள்?!

ரு மெல்லிய கோடு... கோட்டுக்கு இந்தப் பக்கம் சின்னத்திரை எனில், கோட்டுக்கு அந்தப் பக்கம் வெள்ளித்திரை. வெள்ளித்திரையில் அறிமுகமாகி மார்க்கெட் போய்விட்டால் நடிகர்களின் அடுத்த டார்கெட் சின்னத்திரையாகத்தான் இருக்கும். அதுபோல பல நடிகர்களும், இயக்குநர்களும் சின்னத்திரையில் அறிமுகமாகி சினிமாவில் ஜொலிப்பார்கள். அந்த வரிசையில் டிவியிலிருந்து சினிமாவிற்கு சென்ற சில முக்கிய இயக்குநர்கள் லிஸ்ட்.  

திருமுருகன்

சின்னத்திரையில் இவரின் முதல் என்ட்ரி ’மெட்டிஒலி’. ஒரே சீரியலில் உச்சத்தைத் தொட்டவர். ஐந்து சகோதரிகளின் திருமணமும், அவர்களின் வாழ்கையும்தான் சீரியலின் கதை. திருமணமாகி புகுந்தவீடு செல்லும் சகோதரிகளுக்கு நடக்கும் பிரச்னையும், அதனால் ஏற்படும் விபரீதத்தையும் சென்டிமென்டில் அள்ளித் தெளித்திருப்பார். எமோஷனல் சீன்களில் உச்சம் தொட்டவர் திருமுருகன். 2006ல் ‘எம் மகன்’ படத்தின் மூலம் சினிமாவில் தடம் பதித்தார். முதல் படமே நாசர், பரத், கோபிகா என ஃப்ரீ ஹிட்டில் சிக்ஸர் அடித்தார். சீரியல் டச் எதுவுமே இல்லாமல், சினிமாவில் சக்ஸஸ் கொடுத்த இவரது அடுத்த படம், ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’. இவ்விரு படங்களுக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பிய திருமுருகன், தேன் நிலவு, நாதஸ்வரம், குல தெய்வம் என்று சீரியலில் சீரியஸாக இருக்கிறார். 

தாமிரா:

பாலசந்தர், பாரதிராஜா இருவரின் நடிப்பில் வெளியான படம் ரெட்ட சுழி. இப்படத்தை இயக்கிய தாமிரா, முன்னர் சீரியல்களில் திரைக்கதையாசிரியராகவும், இயக்குநராகவும் பணியாற்றியவர். பாலசந்தரின் சின்னத்திரை பட்டறையில் செதுக்கப்பட்டவர். தற்போது தன்னுடைய அடுத்த பட இயக்கத்தில் பிஸியாக இருக்கிறார். 

அந்தோணி

விஜய் டிவியின் ஹிட் நிகழ்ச்சி நீயா நானா. சமூகத்தில் நடக்கும் பிரச்னைகளை பேசும் உணர்ச்சிமிகுந்த டிவி நிகழ்ச்சி. ஆரம்பத்திலிருந்து இன்று வரையிலும் கோபிநாத் தொகுத்து வழங்கிவருகிறார். வாராவாரம் ஞாயிறு 9 மணிக்கு வெளியான இந்நிகழ்ச்சி தற்பொழுது மதியம் 3 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் இயக்குநர் அந்தோணியின் முதல் சினிமா அறிமுகம், கடந்தவருடம் வெளியான “அழகு குட்டிச்செல்லம்”. இப்படத்தினை தயாரித்தவர் அந்தோணி. சினிமாவில் தயாரிப்பும், அதே நேரத்தில் விஜய் டிவியின் நீயா நானாவும் தான் இப்போதைக்கு அந்தோணியின் முழுவேலை.

ராம்பாலா

வயிறு வெடித்துச் சிரிக்கவைத்த அசத்தலான டிவி நிகழ்ச்சி லொல்லு சபா.  பெரிய நடிகரின் படங்களில் தொடங்கி ஹிட் படங்கள் வரையிலும் அடித்து பஞ்சராக்குவது தான் லொல்லுசபா ஸ்டைல். இந்த நிகழ்ச்சி பல இளம் தலைமுறை நடிகர்களை சினிமாவுக்கு அடையாளம் காட்டியது. லொல்லுசபாவின் இயக்குநர் ராம்பாலா சினிமாவில் அறிமுகமான படம் “தில்லுக்குத் துட்டு”. மீண்டும் சந்தானத்துடன் அடுத்த படத்தின் இயக்கத்திற்கு ரெடியாகிவருகிறார் ராம்பாலா. 

சமுத்திரக்கனி: 

சின்னத்திரையிலிருந்து சினிமாவிற்கு வந்து வெற்றி பெற்று, இன்றும் பல்வேறு பரிணாமங்களில் செயல்பட்டுவரும் ஒரே வெற்றி இயக்குநர் சமுத்திரக்கனி. இயக்குநராக மட்டுமின்றி டப்பிங் ஆர்ட்டிஸ்ட், பாடகர், நடிகர் என்று இவரின் கலைப்பணிகளின் லிஸ்ட் எகிறும். 2001ல் ‘பாலசந்தரின் சின்னத்திரை’ பட்டறையிலிருந்து வந்தவர். அன்றைய நேரத்தில்  “மைக்ரோ தொடர்கள்... மைக்ரோ சிந்தனைகள்..” செம ஹிட். இதில் 28வது தொடரான ‘அடியென்னடி அசட்டுப் பெண்ணே’ தான் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான தொடர். ‘இதோ பூபாலம்’, ‘அன்னி’, ‘அரசி’ என்று பல ஹிட்டுகளைக்கொடுத்தவர். சினிமாவில் கால் பதித்த சமுத்திரக்கனி, நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில், அப்பா என்று பல படங்களை இயக்கிவிட்டார். தற்போது இயக்கத்திலும், நடிப்பிலும் சமுத்திரக்கனி பிஸி. 

-முத்து பகவத்-