Published:Updated:

’சாபமாய்த் துரத்தும் கங்கா, பாம்பாய் தகிக்கும் நந்தினி, பேயாய் உலவும் நீலி’ - யார் இவர்கள்?

பா.விஜயலட்சுமி
’சாபமாய்த் துரத்தும் கங்கா, பாம்பாய் தகிக்கும் நந்தினி, பேயாய் உலவும் நீலி’ - யார் இவர்கள்?
’சாபமாய்த் துரத்தும் கங்கா, பாம்பாய் தகிக்கும் நந்தினி, பேயாய் உலவும் நீலி’ - யார் இவர்கள்?

டிவி சீரியல் உலகில் இது பாம்புகள் படையெடுக்கும் காலம். கூடவே கொஞ்சம் கடவுள்களும், பேய்களும் கைகோத்துக் கொண்டுள்ளன. வேற்றுமொழியிலிருந்து டப்பிங் செய்யப்பட்ட நாகினி சீரியல் ஏற்கெனவே டி.ஆர்.பியில் எகிறி அடித்துக் கொண்டிருக்கும் நிலையில், மறுபக்கம் கடும் டஃப் கொடுக்க முடிவெடுத்து ‘மாயமோகினி’யோடு களத்தில் குதித்தது விஜய்.

இந்தக் கடும் போட்டியில் மாயமோகினி மாயமானாலும், ‘நீலி’ என்ற ஒரிஜினல் தமிழ் சீரியலைப் பாம்பின் துணையுடன் அமானுஷ்யக் காட்சிகளுடன் ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளது விஜய் டிவி. சன் டிவியும் தற்போது டப்பிங் சீரியல்களை மறந்துவிட்டு சொந்தத் தயாரிப்பில் அமானுஷ்யங்களின் உலகில் நுழைந்துள்ளது.

ஏற்கனவே விடாது கருப்பு, காத்து கருப்பு, சிவமயம், மர்ம தேசம் என்று இந்த சேனல்கள் எல்லாமே அமானுஷ்யங்களின் ஆக்கிரமிப்பில் கொடிகட்டிப் பறந்தவைதான். நடுவில் கொஞ்சம் டல் அடித்தாலும், மீண்டும் இந்த டி.ஆர்.பி ஃப்ரண்ட்லி உலகினுள் நுழைந்து, பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எல்லாரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நீலி (விஜய் டிவி):

இறந்துபோகும் தாயின் பாசத்திற்காக ஏங்கும் பெண் குழந்தை அபி... குழந்தைக்காக இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் தந்தை...கணவனிடமிருந்து குழந்தையைப் பிரிக்க நினைக்கும் இரண்டாவது மனைவி. இதற்கு நடுவில் சில சித்தர்களால் கெட்ட சக்திகளிடமிருந்து காப்பாற்றப்படும் காலச்சக்கரம் ஒரு பொம்மைக்குள் புகுந்து கொள்கிறது. அது அபியை வந்தடைகிறது. அப்பொம்மைக்கு நீலி என்று பெயரிடுகிறாள் அபி. அதனால், இறந்துபோன திவ்யாவின் ஆத்மாவும் உயிர்பெற்று, நீலியுடன் இணைந்து ஆபத்துகளில் இருந்து அபியைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள்தான் கதை. கூடவே சக்கரத்தைத் தேடும் கும்பல், நல்ல சக்தி, கெட்ட சக்தி என்று கதை அமானுஷ்யமாக நீள்கிறது. ஸ்டார் ஸ்வர்ணாவிலிருந்து ரீமேக் ஆகியிருக்கும் நீலியில், குழந்தைகளுக்குப் பிடித்த பொம்மையும், குழந்தையான அபியும், காலச்சக்கரத்தைக் காக்கும் பாம்பும்  மெயின் என்பதால் ரசிகர்களிடையே சீரியலுக்கு செம க்ரேஸ்.

காக்க காக்க(ராஜ் டிவி):

குறிஞ்சி நிலக் கடவுள் முருகனும், நவபாஷாண லிங்கமும்தான் மெயின் சப்ஜெக்ட் இதில். முருகனின் அறுபடை வீடுகளிலும் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் நவபாஷாண வேல்ப்பகுதிகளும், அதற்கு காவலிருக்கும் கார்த்திகைப் பெண்களும், தன்னுடைய குடும்பக் கடமையாக நவபாஷாண வேலைக் காப்பாற்ற போராடும் இளம்பெண்ணும் என நீள்கிறது இக்கதை. குட்டி முருகனாக நடிக்கும் சிறுவனும், வேல் பகுதிகளைத் தேடும் கார்த்திகாவும் எளிதில் அமானுஷ்ய கதை ரசிகர்களைக் கவர்ந்து விடுகிறார்கள். முருகனுடன் இணைந்த தேடுதலும், சித்த விளையாட்டுகளும், தீய சக்திகளின் சக்ரவியூகமும், அதை உடைக்கப் போராடும் கதாநாயகியின் போராட்டங்களும் இணைந்த ஒரு ஹை-வேல்யூ டிவோஷனல் சீரியல் இது. ’ஞானவேல்...வீரவேல்’ என்று நித்யஸ்ரீயின் குரலில் ஒலிக்கும் பாடலே அதற்குச் சாட்சி.

கங்கா (சன் டிவி):

கங்கம்மா...வஞ்சிக்கப்படும் பெண்ணவள் விடும் சாபத்தால் கன்னிகாபுரம் கிராமத்தில் பெண்களுக்கு திருமணமே நடப்பதில்லை. பெண்களை ஒட்டுமொத்தமாய்த் துரத்தும் அந்த சாபம், அதன் பின்னணி என்ன? பாம்பாய் துரத்தும் கங்கம்மாவின் சாபத்தால் தைரியமாக பெண்களைத் திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கும் ஆண்களும் இறந்துபோவது ஏன்? என்பதுதான் கதை. அபிராமி என்னும் பெயர் கொண்ட ஹீரோயினும் கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர். தான் பிறந்த ஊரின் சாபம் போக்குவாரா அபிராமி என்பது மீதிக்கதை. போகப்போகத்தான் கதையின் திரைகளும், மர்மங்களும் விலகும். அழகான வயல்வெளிகள் நிறைந்த கிராமப்புறமும், கண்களுக்கு குளிர்ச்சியான ஒளிப்பதிவும், அமானுஷ்ய கதைமன்னன் இந்திராசவுந்திரராஜனின் திரைக்கதையும் கங்காவை அமானுஷ்ய சீரியல்களின் டாப் ஹிட் லிஸ்ட்டில் சேர்க்கும் என்பதில் சந்தேகமேயில்லை.   

நந்தினி (சன் டிவி):

நாகினியின் வெற்றியைத் தொடர்ந்து சன் டிவி தன் சொந்த முயற்சியில் களமிறக்கும் சீரியல்தான் நந்தினி. இதிலும் பாம்பும், பேயும், கடவுளும் இடம் பிடித்திருக்கிறது. மிரட்டலான இசை, ஒளிரும் காட்சிகளுடன் ப்ரோமோவே கலக்குகிறது. சீரியல் ஒளிப்பரப்பாக ஆரம்பித்தபிறகுதான் நந்தினி கலக்குவாளா என்பது தெரியவரும். 

மொத்தத்தில் கடவுள்களுக்கும், அமானுஷ்ய சக்திகளுக்கும், பாம்புகளுக்கும் இடையேயான ஹெல்த்தியான ரேஸில் யார் ஜெயிக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

- பா.விஜயலட்சுமி