Published:Updated:

‛புடவை எப்பவும் பெஸ்ட் சாய்ஸ்!’ - ராதிகாவின் ஸ்டைல் சீக்ரெட்

பா.விஜயலட்சுமி
‛புடவை எப்பவும் பெஸ்ட் சாய்ஸ்!’ - ராதிகாவின்  ஸ்டைல் சீக்ரெட்
‛புடவை எப்பவும் பெஸ்ட் சாய்ஸ்!’ - ராதிகாவின் ஸ்டைல் சீக்ரெட்

ஃபேஷன் என்பது எல்லா வயதினருக்கும் பொதுவானது. ஆடைகளும் சரி, அலங்காரமும் சரி வடிவம் மாறலாமே தவிர முழுவதுமாக பெண்களிடமிருந்து மறைந்துவிடுவதில்லை. இளமைப் பருவம் தாண்டி 40 வயதைத் தொட்டுவிட்ட போதும், என்றும் ‘மார்க்கண்டேயனி’களாய் ஜொலிக்கும் பெண்மணிகளும் இருக்கிறார்கள். அவர்களுடைய ஆடைத் தேர்வுதான் அவர்களை அந்த வயதிற்கேற்ற வகையில் அழகாய் ஜொலிக்க வைக்கும் மந்திரம். சினிமாத்துறையில் 80களிலும், 90களிலும் அழகுச் சிலைகளாய் வலம் வந்த நாயகிகள் சிலர், இன்றும் கம்பீரமும், மிடுக்குமாய் வலம் வருகின்றனர். அவர்களில் வைபரண்ட் நாயகியாய் சீரியலிலும் வீறுநடை போடும் ராதிகா சரத்குமாரிடம் ‘இந்த வயதிலும் எப்படி இது சாத்தியம்? அந்த சீக்ரெட் சொல்லுங்கள்’ என்று ஆடைத் தேர்விற்கான டிப்ஸ்களைக் கேட்டோம்.

ஆடைத் தேர்வு:

முதல்ல ஆடை அப்படிங்கறதே நமக்கு உடுத்த வசதியானதா இருக்கணும். உறுத்தலோ, அசெளகரியமோ இல்லாமல் உடுத்த முடியறதுதான் நல்ல ஆடை. அடுத்ததா, நம்முடைய அழகைத் தாண்டி, தன்னம்பிக்கையை அதிகரிக்கற மாதிரியான ஆடைகள்தான் இந்த வயசிலும் நம்மை அற்புதமாக் காட்டும். நம்ம ஊரோட கிளைமேட்க்கு ஏத்த மாதிரி உடைகளைத் தேர்வு செய்ய வேண்டியது அவசியம். வெயில் காலங்களில் உங்க உடல் கொஞ்சமாவது மூச்சுவிடக்கூடிய அளவிலான லைட்டான ஆடைகளை உபயோகிக்க பழகுங்க.

கம்பீரமான லுக்தான் அவசியம்:

நம்மோட குணாதிசயம், வசதி, கம்பீரம் இதையெல்லாம் எடுத்துக்காட்டற மாதிரியான உடைகள்தான் பெஸ்ட். அது புடவையாத்தான் இருக்கணும், மாடர்ன் டிரெஸ்ஸாதான் இருக்கணும்னு அவசியம் இல்லை. பாந்தமான உடைகள் மட்டும்தான் நம்மை அழகாக் காட்டும். 

உடையில் கவனம் செலுத்துங்க:

40 வயதினை நெருங்கும் பெண்கள் உடையில் கவனம் செலுத்த வேண்டியது ரொம்ப அவசியம்; அத்தியாவசியம். அலுவலகம் போகிற பெண்களா இருந்தா, அடிக்கற மாதிரியான கலர்களைக் கண்டிப்பா தவிர்க்கணும். நம்முடைய மரியாதையை குறைக்காத ஆடைகள்தான் அணியறதுக்கு சரியானவை. மத்தவங்களோட கவனத்தை ஈர்க்காத, அதே நேரத்தில் நம்மை கம்பீரமான அழகா காட்டற ஆடைகளையே பெரும்பாலும் தேர்ந்தெடுங்க.

மிட்டாய் பிங்க், மிண்ட் க்ரீன் போன்ற கலர்கள் கேஷூவலுக்கு ஓகே. ஆனா, ஃபார்மல் விழாக்களில் அதைத் தவிர்க்கறது நல்லது. பார்ட்டிக்கெல்லாம் நல்ல பிரைட்டான கலர்கள் உபயோகிக்கலாம். முடிந்தவரை காட்டன் மாதிரியான துணிகள் ரொம்ப ஏற்றவை.

மறக்காதீங்க கேர்ள்ஸ்:

சல்வாரோ, புடவையோ, மாடர்ன் டிரஸ்ஸோ சின்னப் பொண்ணுங்க போடற மாதிரிதான் போடுவேன்னு அடம் பிடிக்காதீங்க. உங்களுக்கு ஏற்ற உடைதான் உங்களுக்கான உடை, அதை மறந்துடாதீங்க. குணம், உடலமைப்பு, தோலின் நிறம், சுற்றுச்சூழல் இது நான்கையும் கருத்தில் வைச்சுக்கிட்டு உங்க உடைகளைத் தேர்ந்தெடுத்தா வயசெல்லாம் பெரிய விஷயமே இல்லைங்க. நீங்க எப்போதும் அழகிதான். 

புடவை பெஸ்ட் சாய்ஸ்:

நம்ம ஊரைப் பொறுத்த வரைக்கும் எந்த வயசுனாலும் அழகுனா அது புடவைதான். சில்க், காட்டன், ஜியார்ஜெட் இப்படி எந்த வகைத் துணியானாலும், பெண்களை அழகாகக் காட்ட புடவையால்தான் முடியும். அது ஒரு தனி அழகுதான். தேவதையா ஜொலிக்க வைக்க ஒரு புடவையால் முடியும். அதனால், முடிந்தவரை புடவையைத் தேர்ந்தெடுங்க.

மொத்தத்தில், 20 வயசோ, 40 வயசோ பெண்கள் எப்பவும் அழகுதான். அதை இன்னும் மெருகேற்ற பாந்தமா உடையணிஞ்சா நீங்களும் ஃப்ரின்சஸ்தான்!

- பா.விஜயலட்சுமி