Published:Updated:

'விடவே விடாது’ - தொடரும் அமானுஷ்ய தொடர்களின் ட்ரெண்ட்!

நா.செந்தில் குமார்
'விடவே விடாது’ - தொடரும் அமானுஷ்ய தொடர்களின் ட்ரெண்ட்!
'விடவே விடாது’ - தொடரும் அமானுஷ்ய தொடர்களின் ட்ரெண்ட்!

பே...என்று ஒரு வார்த்தையைத் தொடங்கினாலே ‘என்ன பேயா?’ என்று பதறும் கேட்டகிரிதான் நாம் அனைவரும். வல்லரசாக சொல்லப்படும் அமெரிக்காவிலும், மன்னராட்சி முறை தொடர்கின்ற இங்கிலாந்திலும் கூட இன்னும் பேய், பிசாசு, பூதம் ஆகியவற்றின் மீதான நம்பிக்கைகள் மீதமிருக்கின்றன. அப்படி எனில் அமானுஷ்யங்களுக்கும், கடவுள் நம்பிக்கைக்கும் பெயர் போன இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டால் அமானுஷ்ய கருத்துகள் அதிகம். அப்படிப்பட்ட நிலையில், டிவி, சினிமாக்காரர்கள் மட்டும் அமானுஷ்ய கதைகளை விட்டு வைப்பார்களா என்ன? பயமிருந்தாலும் மர்மக்கதைகள், அமானுஷ்ய விஷயங்கள் மீது மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தை சரியாகப் புரிந்துகொண்ட இயக்குனர்களால் எடுக்கப்பட்ட, டிவி தொடர்களைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

நிகழ்வுகள்:

கணக்கு வழக்கே இல்லாமல் வீடியோக்கள் கொட்டிக் கிடக்கும் யூ டியூபில் கூட இந்தத் தொடரின் தமிழ்படுத்தப்பட்ட வீடியோக்கள் கிடைக்காது. தூர்தர்ஷன், பொதிகையாய் மாறிய சமயத்தில் டிவி பார்த்த ரசிகக் கண்மணிகளுக்கு மட்டுமே இந்தத் தொடரின் தலைப்பு மேம்போக்காக நினைவிருக்க கூடும். இந்தியில் ‘ஆப் பேட்தி’ என்ற பெயரில் ஒளிப்பரப்பான சீரியலை டப் செய்து வெளியான பேய்ய்ய்ய் தொடர் இது. பழிவாங்கும் ஆத்மாக்கள், திகிலூட்டும் கறுப்பு வெள்ளை பின்புலத்தில் இலைகளற்ற மரமும், அதன்  ஊடே ஒரு பயம்கலந்த பின்னணி இசையுடன் விரியும் தலைப்பே இரவு நேரத்தை, இரண்டு மணிநேரம் கூட்டிக் காட்டும் நமக்கு.

மர்ம தேசம்: 

மர்மத் தொடர்களுக்கும், அமானுஷ்ய சீரியல்களுக்கும் தாய்வீடு என்றால் அது சன் டிவி என்றே சொல்லலாம். அம்மன், ஆத்மா என எல்லாவித அமானுஷ்யங்களையும் தொட்டிருக்கிறது  மர்ம தேசம் அதில் முக்கியமான ஒன்று. மர்ம தேசம் என்ற தலைப்பில், விடாது கருப்பு,  விட்டுவிடு கருப்பா, இயந்திரப் பறவை, எதுவும் நடக்கலாம் என்று கிளைக்கதைகளுடன் ஓடி சக்கைப் போடு போட்ட தொடர் இது. அதிலும் விட்டுவிடு கருப்பா சீரியலின் டைட்டில் பாடலுக்கும், எதுவும் நடக்கலாம் சீரியலில் வந்த கற்பக விருட்சம் என்னும் மரத்திற்கும் அன்று ரசிகர்கள் அதிகம். 

ருத்ரவீணை:

இயக்குனர் நாகா - எழுத்தாளர் இந்திராசெளந்திரராஜன் காம்பினேஷனில் ஒளிப்பரப்பான மற்றொரு சீரியல் இது. தோடிபுரம் என்னும் ஊரும், அந்த ஊரில் ஓயாமல் ஒலிக்கும் ருத்ரவீணையின் நாதமும், அதைப் போற்றிப் பாதுகாக்கும் தேவரடியார்களும், அதன் பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியமும்தான் இந்தத் தொடர். ருத்ரன், நிலவறை, இயற்கையையே மாற்றும் வீணையின் நாதம், நவக்கிரக கிணறு என்று நம்பமுடியாத பல்வேறு அமானுஷ்ய ட்விஸ்டுகளுடன் வெளியாகி ரசிகர்களைக் கட்டிப் போட்டது இத்தொடர்.

சிதம்பர ரகசியம்:

இன்று ‘தெய்மகள்’ சீரியலில் கலக்கும் கிருஷ்ணா (பிரகாஷ்) சோமேஸ்வரனாக நடிப்பைக் கொட்டிய சீரியல் இது. நாடி ஜோதிடம், சிதம்பரம் கோவில் அமைப்பு, சித்தர்கள், எய்ட்ஸுக்கான மருந்து, அகத்தியர் என்று இந்த சீரியலும் மர்மங்களுக்கும், அமானுஷ்யங்களுக்கும் சளைத்ததில்லை. சோமேஸ்வரன் செல்லுமிடமெல்லாம் வரிசையாக நிகழும் மரணம், ‘எல்லாமே கணக்குதான்....எல்லாமே கோடுதான்’ போன்ற டயலாக்குகளுடன் ரசிகர்களை சோபா நுனியில் அமரவைத்த பெருமை ‘சிதம்பர ரகசியம்’ சீரியலுக்கு உண்டு.

காத்து கருப்பு:

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான நிஜ அமானுஷ்ய கதைகளை அடித்தளமாக கொண்டு சித்தரிக்கப்பட்ட கதைகளின் தொகுப்பு. ‘காத்து கருப்பு’ என்றும் சொல்லும் குரலே அடிவயிற்றில் நமக்கு பயப்பந்தினை உருளச் செய்தது இந்தத் தொடரின் வெற்றி. இப்போதும் விஜய் டிவி, மறக்க முடியா இந்தத் தொடரை, அதன் மற்றொரு புதிய சேனல் மூலமாக மறு ஒளிபரப்பு செய்து வருகிறது. 

நம்பினால் நம்புங்கள்:

ஆரஞ்சு நிற லோகோவாக மாறிய ஜீ தமிழ், ஊதா நிற லோகோவுடன் மக்களைச் சென்றடைந்த காலகட்டத்தில் துவங்கப்பட்டு இன்றுவரை புதிய பொலிவுகளுடன் தொடரும் தொடர் இது. உண்மைச் சம்பவங்களும், சித்தர் கதைகளும், அமானுஷ்யம் நிறைந்த ஆலயங்களும், மனிதர்களும்தான் இதன் ஹைலைட். சித்தரிக்கப்பட்ட காட்சிகளுடன், உண்மையான மனிதர்களின் குரலையும் நமக்காக ஒலிக்கச் செய்யும் ஒரு அமானுஷ்ய தொடர் இது.

இவற்றையெல்லாம் தாண்டி ராஜராஜேஸ்வரி, வேலன், ஜென்மம் எக்ஸ் என்று எக்கச்சக்க அமானுஷ்ய தொடர்களை மக்களுக்காக கட்டுக்கடங்காமல் ஒளிபரப்பியுள்ளன சேனல்கள். இந்த அமானுஷ்ய தேடல் இன்று நந்தினி, நீலி, தேவயானி, மகமாயி, கங்கா என்ற லிஸ்ட்டில் வந்து நிற்கிறது.... அதற்கும் சளைக்காமல் பார்க்ககூடிய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதே இந்த கான்செப்டின் வெற்றி.

- பா.விஜயலட்சுமி