Published:Updated:

‛ஒரு முறையாவது பிரகாஷ்ராஜ், தனுஷ் கூட நடிக்கணும்’ - சீரியல் நடிகர் குறிஞ்சி

பா.விஜயலட்சுமி
‛ஒரு முறையாவது பிரகாஷ்ராஜ், தனுஷ் கூட நடிக்கணும்’ - சீரியல் நடிகர் குறிஞ்சி
‛ஒரு முறையாவது பிரகாஷ்ராஜ், தனுஷ் கூட நடிக்கணும்’ - சீரியல் நடிகர் குறிஞ்சி

சின்னத்திரையில் தற்போதைய சூழலில் ‘நாகேஷ்’ யாரென்றால், அது குறிஞ்சிதான். ஒருபக்கம் ‘சின்னப் பாப்பா பெரிய பாப்பா’ தொடரில் அச்சு அசல் காமெடி பீஸ், இன்னொரு பக்கம் ’மரகத வீணை’ தொடரில் கண்களை உருட்டி,மிரட்டி பிச்சு உதறும் வில்லன். காமெடியனாகவும் கேரக்டர் ஆர்டிஸ்டாகவும் கலக்கி வருகிறார் குறிஞ்சி. கேள்விகளுக்குப் பதில் சொல்லும் விதத்திலேயே அவரிடம் ஒரு தனி பாணி மிளிர்வதைப் பேட்டியின்போது உணர முடிந்தது. 

“அதென்ன குறிஞ்சி?”

“என்னோட முழுப்பெயர் குறிஞ்சி நாதன். நான் அம்மா வயிற்றில் பத்து மாசம் தாண்டி, 15 நாள் எக்ஸ்ட்ராவா இருந்தேன்.அந்த நேரத்தில் கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோவிலுக்குப் போன பாட்டியும் பெரியப்பாவும் ‘குழந்தை நல்லபடியா பிறந்தா உன் பெயரேயே வைக்கிறோம்’னு வேண்டிக்கிட்டாங்க. அப்படித்தான் எனக்கு குறிஞ்சிநாதன்னு பெயர் வந்துச்சு.”

“​​​​​​​இப்பவும் உங்களோடது கூட்டுக்குடும்பம்னு கேள்விப்பட்டோம். அப்டியா?”

”ஆமாங்க. நீங்க கேள்விப்பட்டது முழுக்க முழுக்க உண்மை. நான் 100% சென்னைப் பையன். பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னைதான். சென்னையில் எங்களோடது பெரிய வீடு. ஒரே வீட்டில் பெரியப்பா, சித்தப்பா, அவங்க பசங்கனு ஒவ்வொரு போர்ஷனில் இருக்கோம். எங்க போர்ஷனில் அப்பா, அம்மா, நான், என்னோட மனைவி, குழந்தை, அண்ணா, அண்ணி, அவங்க குழந்தைகள்னு கூட்டுக்குடும்பத்துக்குள்ள ஒரு கூட்டுக் குடும்பமா இருக்கோம்.”

“சீரியலுக்கு எப்படி வந்தீங்க?”

“டிவிக்கு வர்றதுக்கு முன்னாடி ஒரு மருத்துவமனையில் படிப்புக்காக சோஷியல் வொர்க்கரா இன்டர்ன் பண்ணிட்டு இருந்தேன். சின்ன வயசில் இருந்தே நடிப்புன்னா ஒரு வெறி. வாழ்க்கையில் முன்னேறணும்ங்கற வெறி. அதேமாதிரி நான் பிரகாஷ்ராஜ், ரகுவரனோட வெறித்தனமான ரசிகன். நடிகைகளில் ராதிகா, ஜோதிகா இவங்க ரெண்டு பேரோட ரசிகன். ரகுவரனுக்கு ஈக்குவலான ஹீரோ யாருனு பார்த்தா சூப்பர் ஸ்டார். அதனால எட்டு வயசுல இருந்து அவரோட குரலை மிமிக்ரி பண்ணுவேன். வளர வளர மிமிக்ரி ஆர்வமும் அதிகரிச்சிருச்சு. அந்தச் சமயத்தில்தான் ஒரு காமெடி ஷோ கிடைச்சது. அதுக்கப்புறம் வரிசையா நிறைய காம்பியரிங் வாய்ப்புகள், தொடர் வாய்ப்புகள் கிடைச்சதும், மத்ததையெல்லாம் தூக்கி ஓரமா போட்டுட்டு டிவி உலகில் பிஸி ஆகிட்டேன்.”

”ஒருபக்கம் வில்லன்...மறுபக்கம் காமெடியன். எப்படி மேனேஜ் ஆகுது?”

”இரண்டு ஜானர்லயும் நடிக்கணும்ங்கிறதுக்காகத்தான் இப்படி டிஃப்ரன்ட்டா நடிச்சுட்டு இருக்கேன். எனக்குப் பிடிச்ச ஸ்டார்ஸே வில்லன்கள்தானே. இன்னொரு விஷயம், மத்த ரோல்ஸ் பண்றதைவிட நெகடிவ்வான வில்லன் கேரக்டரில் நடிக்கறப்போ சீக்கிரமே ரசிகர்களின் மனசில் பதிவோம். அதனால ஈசியாத்தான் இருக்கு. வாழ்க்கையில ஒரு முறையாவது பிரகாஷ்ராஜ், தனுஷ், ராதிகாகூட நடிக்கணும். ஒரு நேஷனல் அவார்ட் வாங்கணும்.”

“போலீஸ் ட்ரெஸ்லாம் போட்டு ஒரு போட்டோ பார்த்தோம். அது எப்போங்க?”

“ஹைய்யோ...நான் போலீஸ் வேலையிலெல்லாம் இல்லைங்க. 'சின்னப் பாப்பா பெரிய பாப்பா' தொடருக்காகப் போட்ட வேஷம் அது. அந்த சீரியலில் நளினியம்மா என்னோட அம்மாவா நடிக்கறாங்க. ஒரு பாட்டிகிட்ட ‘என் புள்ளை பெரிய போலீஸ்’னு பீலா விட்டுடுவாங்க. அதுக்காக நான் போலீஸ் மாதிரி நடிப்பேன். அப்போ போட்ட ட்ரெஸ்தாங்க அது. அப்போவே கழட்டியும் குடுத்துட்டேன்.” 

“எப்பவும் தேசியக்கொடியோட இருப்பீங்களாமே. அதென்ன கதை?”

“எனக்கு தேசப்பற்று கொஞ்சம் ஜாஸ்திங்க. என்னைப் பொறுத்தவரை ஒவ்வொருத்தருமே தங்களோட சட்டையில் தேசியக்கொடியை தினமுமே குத்திக்கணும். அதைப் பார்க்கிறப்போ நமக்கே ‘இந்த நாட்டுக்காக நாம என்ன செய்திருக்கோம்? என்ன செய்யப்போறோம்’னு தோணும். நான் கிட்டத்தட்ட 14 வருஷமா என்னோட சட்டையில் நம்ம தேசியக்கொடியைக் குத்திட்டு இருக்கேன். எல்லாருமே இதைக் கடைப்பிடிச்சா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்” - மகிழ்ச்சியாய் ஆரம்பித்து நெகிழ்ச்சியாய் முடித்தார் குறிஞ்சி. 

- பா.விஜயலட்சுமி