Published:Updated:

செத்தும் வாழ வைக்கும் கறுப்பினத்து தாய் கதை இது #HBO_FILM

நா.செந்தில் குமார்
செத்தும் வாழ வைக்கும் கறுப்பினத்து தாய் கதை இது #HBO_FILM
செத்தும் வாழ வைக்கும் கறுப்பினத்து தாய் கதை இது #HBO_FILM

‘ஹென்ரிட்டா லாக்ஸ்' என்கிற கறுப்பினத்துப் பெண்ணின் பெயர் இந்த உலகம் அழியும் வரை இருக்கப்போகிறது. அவரைப்பற்றிய (HBO) டெலி ஃப்லிமில் தொலைக்காட்சி பிரபலம் ஓப்ராவின் ப்ரே நடித்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்தப்படம் ஏற்படுத்தியுள்ளது. 

யார் அந்த ஹென்ரிட்டா? 

வெர்ஜினியா மாநிலத்தின் அந்தப் பெரும் விவசாயப் பண்ணை வீட்டில் அடிமைகளுக்கான கொட்டிலில் 'வரப்போகும் மனித குலத்திற்குப் பிரசவம் குறித்த பெரும் வரலாற்றை'த் தன் பிள்ளை பதிக்கப்போவதை அறியாமல் அவரைப் பெற்றெடுத்தார் எலிஸா ப்ளசண்ட். ஹென்ரிட்டாவின் தாய். இவர் பிறந்து அடுத்த சில வருடங்களில் தன் பத்தாவது பிரசவத்தின்போது எலிஸா இறந்து போனார். மனைவி இல்லாமல் குழந்தைகளை வளர்க்க முடியாத அவரின் அப்பா, அவர்களை உறவினர்களிடம் பிரித்துக் கொடுத்தார். அதன்படி ஹென்ரிட்டா தாய் வழிப்பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரின் பாட்டி ஒரு விவசாயப் பண்ணை வீட்டில் இரண்டு அடுக்கு பெட்டி போன்ற வீட்டில் வசித்தார். அதில் தன் வருங்காலக் கணவனும், அத்தை மகனுமாகிய 'டேவிட் லாக்ஸ்' உடன் வளரத்துவங்கினார். 

அடிமைகளுக்குப் பெரிய உரிமைகள் எதுவும் கிடைக்காத காலகட்டம். ஹென்ரிட்டாவின் பாட்டிக்கு அந்தப் பண்ணையில் இடம் கிடைத்ததே அதன் வெள்ளை முதலாளியின் தாத்தாவுக்கு அவர் பிறந்தார் என்பதால்தான். அந்தப்பண்ணையின் புகையிலை விவசாயத்தில் கூலியாக, தன் 10 வயதிலிருந்தே ஹென்ரிட்டா வேலை செய்தார். 14 வயதிலேயே ஆண் குழந்தையைப் பெற்ற அவர் அடுத்து சில வருடங்களில் பெண் குழந்தை ஒன்றையும் பெற்றார். பண்ணை முதலாளி ஃப்ரெட் கெரட் இரண்டாம் உலகப்போருக்குச் செல்ல வேண்டியிருந்ததால் ஹென்ரிட்டா-டேவிட் தம்பதிக்கு ஒரு வீடு சொந்தமாக வாங்கும் அளவுக்குப் பணம் கொடுத்து நகரத்தில் உள்ள இரும்புத் தொழிற்சாலை வேலையில் டேவிட்டை சேர்த்து விட்டார். 

அதன் பின்னர் மூன்று குழந்தைகளை ஹென்ரிட்டா பெற்றெடுத்தார். அவரின் கடைசி மகனை அந்த மாநிலத்தில் கறுப்பர்களுக்குச் சிகிச்சையளிக்கும் ஒரே மருத்துவமனையான 'ஜான் ஹாப்கின்ஸ்' மருத்துவமனையில் 1950-ம் ஆண்டு நவம்பரில் பெற்றபோது அவருக்கு வயது 30. பிரசவத்தின் போதே மிக அதிகமான ரத்த இழப்புக்கு ஆளானார். வயிற்றில் ஏதோ முடிச்சு இருப்பதாகவும் சிறிது நாள் கழித்து வந்தால் அதை நீக்கி விடுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியதைக் கேட்டு ‘டிஸ்சார்ஜ்’ ஆனார். அதன் பிறகும் தொடர்ந்த வயிற்று வலியால் மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது அவரைச் சோதித்த போது ‘ஸ்குவாமஸ் செல் கார்சினோமா' என்கிற புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டதாக கருதினர். அதற்கு ஏற்ப சிகிச்சையை அளித்து வந்த நிலையில் அவருக்கு வந்திருப்பது வேறு வகைப் புற்றுநோய் என உறுதியானது. 'அடோன் கார்சினோமா' என்கிற ஒரு உறுப்பில் இருந்து மற்றொரு உறுப்புக்குப் பரவக்கூடிய புற்றுநோய் முற்றிய நிலையில் ஆகஸ்ட் 8-ம் தேதி 1951-ம் ஆண்டு காலமானார் ஹென்ரிட்டா. 

ஹென்ரிட்டா அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரிடம் இருந்து சோதனைக்காகப் புற்றுநோய் செல்கள் தாக்கியிருந்த கர்ப்ப வாய் பகுதியிலிருந்து 'செல் மாதிரிகளையும்' நோய் தாக்காத வயிற்றுப்பகுதியில் இருந்து செல் மாதிரிகளையும் ஹென்ரிட்டாவிடம் தெரிவிக்காமல், அனுமதி பெறாமல் எடுத்திருந்தனர். அது அந்த மருத்துவமனையின் புற்றுநோய் ஆராய்ச்சியாளர் ஜார்ஜ் ஓட்டோ ஜேயிடம் வழங்கப்பட்டது. அந்த மாதிரிகளைக் 'கல்ச்சர்' செய்து சோதனை சாலை பயிற்சிக்கு வைத்திருந்த போதுதான் அவை வழக்கமானவை அல்ல எனத் தெரியவந்தது. மற்ற செல் மாதிரிகள் எல்லாம் சில நாள்களிலேயே உயிரற்றுப் போய்விடும் நிலையில் பல்கிப் பெருகும் ஹென்ரிட்டாவின் கேன்சர் செல்கள் மட்டும் உயிரிழக்காமல் எத்தனைமுறை பிரித்தெடுத்தாலும் அவை உயிருடனே இருந்தன. அதாவது ‘இறவா நிலை’ என்பதை அவரின் செல்கள் அடைந்துவிட்டன. எத்தகைய சோதனையையும் அவை தாங்கின. இதனால் அவரின் மரணத்துக்குப் பிறகும், தனது உதவியாளர் மூலம் பிரேத பரிசோதனையின்போது இன்னும் அதிகமான செல் மாதிரிகளை எடுத்தார் ஜேய்.

ஆராய்ச்சியாளர் ஜேய்,  ‘ஹென்ரிட்டா'வின் மாதிரிகளுக்கு ‘ஹிலா’ என பெயர் வைத்தார். பல்கிப்பெருகும் வேகத்தினால் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் வெகுவாக வளர்ப்பு ஹிலா செல் மாதிரிகள் பரவின. உலகிற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய போலியோ நோய்க்கெதிரான தடுப்பு மருந்தை ஹிலா செல்களில் சோதித்தே கண்டுபிடிக்கப்பட்டது. உலகின் முதல் செல் வளர்ப்பு தொழிற்சாலை ஹிலா செல்களை வளர்ப்பதற்காகவே தொடங்கப்பட்டது. இதுவரை 11,000 மருந்துகளின் காப்புரிமைகள் ஹிலா செல்களில் நடத்திய ஆராய்ச்சியில் இருந்து பெறப்பட்டுள்ளன. 

கடந்த 2013-ம் ஆண்டு இந்தச் செல்லின் 'டி.என்.ஏ' வரைபடத்தை வெளியிட இருப்பதாகத் தகவல் வெளியானதும் ஹென்ரிட்டாவின் குடும்பத்தினரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அதன் பின்னரே இதன் முழுக்கதையும் வெளியே தெரியவந்தது. அந்தக் கருப்பினத்தாய் உலகிற்கே தன் சாவிற்குக் காரணமான செல்களைக் கொடுத்ததன் மூலம் கோடிக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறன.

ஆனால், ஹென்ரிட்டாவிடம் தெரிவிக்காமல் அவரிடம் இருந்து மாதிரிகளை எடுத்தது அவர் கருப்பினப் பெண் என்கிற நிறவெறியால்தான் எனக் கடுமையான விமர்சனங்களும் எழாமல் இல்லை. இதனை அடிப்படையாகக்கொண்டு ரெபெக்கா கோல்ட் என்பவர் எழுதிய புத்தகம் மிகப்பெரிய கவனம் பெற்றது. உலகில் 125 பல்கலைக்கழகங்களில் இந்தப்புத்தகம் பொது வாசிப்புக்காக வைக்கப்பட்டுள்ளது. 

நாம் இன்று அம்மையின்றி, போலியோ இன்றி இன்னும் பல நோய்களை வென்று நலமுடன் வாழ ஹென்ரிட்டாவிடம் இருந்து அவருக்குத் தெரியாமல் எடுக்கப்பட்ட செல் மாதிரிகளே காரணம். பிள்ளைகளைப் பேணி வளர்ப்பவள்தான் தாய் என்றால் அந்தக் கறுப்பின பெண் ஹென்ரிட்டா லாக்ஸ் ஒரு வகையில் நமக்கும் தாய்தான்! 

- வரவனை செந்தில்