Published:Updated:

'வளரமாட்டேங்குதுல... வளர்ந்தா ஏன் வரையுறோம்!' - மெட்ராஸ் சென்ட்ரல் கோபி #VikatanExclusive

ப.சூரியராஜ்
'வளரமாட்டேங்குதுல... வளர்ந்தா ஏன் வரையுறோம்!' - மெட்ராஸ் சென்ட்ரல் கோபி #VikatanExclusive
'வளரமாட்டேங்குதுல... வளர்ந்தா ஏன் வரையுறோம்!' - மெட்ராஸ் சென்ட்ரல் கோபி #VikatanExclusive

கவணில் கல்லை வைத்து எந்தளவிற்கு வலு கொடுத்து இழுக்கிறோமோ, அந்தளவிற்கு அந்தக் கல் நெடுந்தூரம் பாயும். யூ-டியூப்பும் கவண் போல தான், எந்தளவிற்குத் திறமையைக் கொட்டி வீடியோ உருவாக்கிப் பதிவேற்றுகிறோமோ அந்த அளவிற்கு அது மக்களிடையே நம்மைக் கொண்டு போய் சேர்க்கும். இதற்கு சமீபத்திய உதாரணம் 'மெட்ராஸ் சென்ட்ரல்' கோபி அரவிந்த். ஸ்டாலின், சீமான், தமிழிசை, வைகோ என விதவிதமான கெட்-அப்பில் யூ-டியூப்பில் கெத்து காட்டிவரும் கோபியை ஒரு உச்சி வெயில் நேரத்தில் சந்தித்துப் பேசினோம்.

"என் பெயர் கோபி அரவிந்த். சொந்த ஊர் சிவகங்கை. ப்ளஸ் டூவில் வொக்கேஷனல் குரூப் படிச்சுட்டு திருச்சியில் இன்ஜினியரிங் படிச்சு முடிச்சேன். ஆனால், அதை ஏன் படிச்சேன்னு இன்னைக்கு வரைக்கும் எனக்கு காரணம் தெரியல ப்ரோ'' என கலகலப்பாய் ஆரம்பித்தார் கோபி.

உங்களுக்குள்ளே தூங்கிட்டிருந்த கலைஞனை எப்போ எழுப்பி வெளியே நடமாடவிட்டீங்க ப்ரோ?

''நான் காலேஜ்ல சரியா படிக்கமாட்டேன். எல்லா டீச்சர்களும் திட்டிகிட்டே இருப்பாங்க. அவிங்க திட்டுல இருந்து தப்பிக்க கல்ச்சுரஸ் எங்கே நடந்தாலும் கண்டுபிடிச்சு எஸ்கேப் ஆகிடுவேன். அந்த சமயத்தில் தான் என் நண்பர் சுதாகரை சந்திச்சேன். பிறகு, நாங்க இரண்டு பேரும் சேர்ந்தே 'ஸ்கிட்' பண்ண ஆரம்பிச்சோம். டிவியில் காலங்காத்தால தற்காப்புக் கலை சொல்லிக்கொடுக்கும் நிகழ்ச்சி ஒண்ணு ஒளிபரப்பாகுமே, அது தான் நாங்க பண்ண முதல் கான்செப்ட். 'உங்கள் மனைவி உங்களைத் தாக்க வந்தால் தப்பிப்பது எப்படி?'னு ஜாலியா பண்ணோம். அதுக்கு அப்ளாஸ் அள்ளுச்சு. அவ்ளோ நாளும் மனைவியை சமாளிக்க வழியில்லாம எத்தனை பேரு இருந்திருக்காங்க பாருங்க! ’நமக்குள்ளேயும் என்னமோ இருந்திருக்கு பாரேன்’னு சென்னைக்கு கிளம்பி வந்துட்டேன்.''

'மெட்ராஸ் சென்ட்ரல்' சேனலில் இணைந்த கதை?

''மெட்ராஸ் சென்ட்ரல் சேனலில் சேர்றதுக்கு முன் சில டி.வி. ஷோக்களில் நானும் சுதாகரும் சேர்ந்து பெர்ஃபார்ம் பண்ணிட்டு இருந்தோம். அப்போ மெட்ராஸ் சென்ட்ரல் சேனலில் ஸ்க்ரிப்ட் எழுதுவதற்கு ஆள் வேணும்னு கேட்டிருந்தாங்க. இரண்டு பேரும் இன்டர்வ்யூவில் கலந்துகிட்டு தேர்வாகிட்டோம்.''

எல்லா அரசியல்வாதிகளையும் அப்படியே ஸ்க்ரீன்ல கொண்டு வர்றீங்களே...

''சின்ன வயசுலே இருந்தே அரசியல்வாதிகளின் மேனரிஸங்களைக் கவனிப்பேன். கருணாநிதி மைக்கில் நிறைய பேசியதால், அவர் சாதாரணமாப் பேசும்போது கூட மைக்கை பிடிச்சுப் பேசுற மாதிரியே கைய வெச்சுருப்பார். ஸ்டாலின் ஒரு சைடா நின்னு பேசுவார். சீமான் அடிக்கடி இரண்டு கைகளையும் நீட்டிக் கத்துவார். இப்படி ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் ஒவ்வொரு மேனரிஸம் இருக்கு. அவங்க பேசிய வீடியோக்களைப் பார்த்து ப்ராக்டீஸ் பண்ணுவேன். அம்புட்டுதேன்...''

எல்லா வீடியோவிலும் மீசை வரைஞ்சுதான் நடிக்கணுமா? வளர்த்துக்கலாமே...

''வளரமாட்டேங்குதுல்ல... வளர்ந்தா நாங்க ஏன் வரையுறோம். வரைஞ்சதுக்கே புழுதில விட்டு புரட்டிட்டு இருக்காய்ங்க.. போங்க தம்பி.''

ஆமாம் ப்ரோ, எல்லா அரசியல்வாதிகளையும் கலாய்க்குறீங்களே மிரட்டல்கள் எதுவும் வரலியா?

''அப்படி எந்த சம்பவமும் இன்னும் நடக்கலை ப்ரோ...  ஆனாலும், தலைமறைவாதான் திரியுறேன்.''

உங்களுக்கு கிடைத்த சிறந்த பாராட்டுகள்?

''நான் எவ்வளவு தான் தலைமறைவாத் திரிஞ்சாலும், சிலர் என்னை கரெக்டா கண்டுபிடிச்சுப் பாராட்டுவாங்க. எனக்கு யாருனே தெரியாதவங்க பாராட்டும்போது அவ்வளவு சந்தோஷமா இருக்கும். ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு போனபோதும் நிறைய பேர் என்னைப் பாராட்டினாங்க, கூட சேர்ந்து போட்டோ எடுத்துக்குவாங்க. இவ்வளவு ஏன், நேத்து கூட தியேட்டருக்கு 'யாக்கை' படம் பார்க்க போயிருந்தேன். அங்கே இரண்டு பேர் என் கூட சேர்ந்து செல்ஃபி எடுத்துகிட்டாங்க. என்னைப் பாராட்டி சில மீம்ஸ்களையும் பார்த்தேன். ரொம்ப ஹேப்பி ப்ரோ. திரைப்படத் துறையினர் சிலரும் பாராட்டினாங்க.''

சினிமா வாய்ப்புகள் எதுவும் வந்ததா?

''ஹ்ம்ம்... பெருசா ஒண்ணு காத்துகிட்டு இருக்கு. கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க.''

கோபி அரவிந்தின் கனவு...

''எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கும் நடிகன்னு பெயர் வாங்கணும். அது தான் ப்ரோ இந்த கோபி அரவிந்தின் கனவு. அப்புறம் எழுதறப்ப மறக்காம இந்த ‘லியானார்டோ டி காப்ரியோ, நவாசுதீன் சித்திக் மாதிரி’னுலாம் போட்டுக்கோங்க... சரியா?​''

-ப.சூரியராஜ்