Published:Updated:

"பிரேக்கிங் நியூஸ் வாசிச்ச என்னையே நியூஸ் ஆக்கிட்டாங்க..." நியூஸ் ஆங்கர் சரண்யா!

முத்து பகவத்
"பிரேக்கிங் நியூஸ் வாசிச்ச என்னையே நியூஸ் ஆக்கிட்டாங்க..." நியூஸ் ஆங்கர் சரண்யா!
"பிரேக்கிங் நியூஸ் வாசிச்ச என்னையே நியூஸ் ஆக்கிட்டாங்க..." நியூஸ் ஆங்கர் சரண்யா!

நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக 'கலைஞர்', 'ராஜ் மியூசிக்' சேனல்களில் ஆரம்ப காலத்தில் செம ஜாலியாக அறிமுகமானவர் சரண்யா. இப்பொழுது நியூஸ் 18 சேனலின் படு சீரியஸான செய்திவாசிப்பாளர். மீடியா துறையில் எட்டு வருட அனுபவத்துடன் பயணித்துவருகிறார் நியூஸ் ஆங்கர் சரண்யா.

"காலேஜ் படிக்க தொடங்குன முதல் வருஷத்துலயே மீடியாவுக்குள்ள நுழைஞ்சிட்டேன். கலைஞர் டிவி தொடங்கின நேரம் அது. தமிழ் பேசுற பொண்ணா வலைவிரிச்சு தேடிட்டு இருக்கும் போது நான் தான் க்ளிக் ஆனேன். முதல் நாள் ஆடிஷன்லையே, ‘போதும் நிறுத்துங்க’ன்னு சொல்லுற வரைக்கும் பேசிட்டே இருந்தேன். உடனே செலக்ட் பண்ணிட்டாங்க. என்னுடைய முதல் ஷோ கலைஞர் டிவியில் 'சுவையோ சுவை'. அந்த நிகழ்ச்சி இன்னைக்கு வரைக்கும் ஒளிபரப்பாகிட்டு தான் இருக்கு. 

கலைஞர் டிவிக்கு அப்புறம், ராஜ் மியூசிக் சேனலில் புரொடியூசராகவும், ஆங்கராகவும் வேலை செய்ய ஆரம்பிச்சேன். ராஜ் சேனல்ல பிஸியாகிட்டதுனால காலேஜ் போகுறது குறைஞ்சிடுச்சு. ஒரு நாளைக்கு இரண்டு க்ளாஸ் மட்டும் தான் காலேஜ்ல இருப்பேன், மத்த டைம்ல பிஸியான ஆங்கர் நான். 

ஐ.எஃப்.எஸ். (IFS) படிக்கணும்ங்கிறது தான் என்னோட கனவே. மீடியாவுக்குள்ள நுழைஞ்சதுனால ஒழுங்கா கல்லூரியில் படிக்கிற வாய்ப்பே இல்லாம போய்டுச்சு. ஆனாலும் இந்த மீடியா துறை என்னை ரொம்பவே கவர்ந்துடுச்சி. அதுனால ஐ.எஃப்.எஸ். கனவை ஓரங்கட்டிட்டு, மீடியா சயின்ஸ் படிப்பில் மாஸ்டர் டிகிரி முடிச்சேன். அந்த நேரத்துல  'Zee தமிழ்' சேனலில்ல காலை நிகழ்ச்சி பண்ண வாய்ப்பு கிடைச்சது. 

அந்த நேரத்துல படத்துல நடிகையா நடிக்கிறதுக்கான வாய்ப்பும் வந்தது. படத்துல நடிச்சிட்டதுனால, இனிமேல் படம் மட்டும் தான் பண்ணணும். வேற எதுவுமே பண்ணக்கூடாதுனு சில வரைமுறைகளுக்குள்ள என்னால இருக்க முடியலை. காலேஜ், மீடியான்னு ஜாலியாவே இருந்துட்டதுனால எனக்கு சினிமா செட் ஆகலை.  நிறைய தெலுங்குப் படங்களில் நடிக்கிற வாய்ப்பும் வந்தது. ஆனா படம் நடிக்கிறதுல எனக்கு சுத்தமாவே ஆர்வம் வரலை. உடனே மீடியாவுக்கே திரும்பி வந்துட்டேன். 

ஒரே வேலையை தினமும் செய்யுறதுல எனக்கு உடன்பாடே கிடையாது. புதுசா ஏதாவது செய்யலைனா துருப்பிடிச்சி போய்டுவோம்னு நினைக்கிறவள் நான். அதுனால புதுசுபுதுசா ஏதாவது கத்துக்கணும்னு நினைப்பேன். அதற்கான வாய்ப்பா, என் வாழ்க்கையின்  மிகப்பெரிய பிரேக் 'புதிய தலைமுறை' சேனல் செய்தி வாசிப்பாளரா என்னுடைய பயணம் தொடங்கின இடம் இது தான். எனக்கான துறையை அடையாளப்படுத்துன இடமும் புதியதலைமுறை சேனல் தான். 

ஒரு காலத்துல பறை அடிச்சி, ஊர் மக்களுக்கு சேதி சொன்னாங்க... இப்போ மீடியா வழியா நாங்க செய்தி வாசிக்கிறோம் அவ்வளவுதான். மக்களுக்கு செய்தியை கொண்டுபோய் சேர்க்குறதுல நானும் இருக்கேனு நினைக்கவே செம ஹேப்பியா இருக்கு. 

ஏதாவது விபத்து நடந்துருக்கலாம். திடீர்னு அதைப் பிரேக் பண்ணவேண்டியிருக்கும். செய்தியை முதல்ல கேட்கும் போது பதட்டமாக் கூட இருக்கும், அதையெல்லாம் பக்குவமா எடுத்துட்டு நியூஸ் வாசிக்கணும். 

ஒருமுறை நியூஸ் ஆங்கர் பணிக்காக, ஒலிம்பிக் நிகழ்ச்சியை லைவ் பண்றது லண்டன் பறந்தேன். வேறவேற நாடுகளிலிருந்தும் நிருபர்கள் வந்துருந்தாங்க. அவங்களோட கலாச்சாரம் கத்துக்குறதுக்கான நல்ல வாய்ப்பா இருந்துச்சு. 

அப்புறம், ஒருநாள் நியூஸ் வாசிச்சிட்டு இருக்கும் போது சென்னையில் நிலநடுக்கம் வந்தது. யார்னாலுமே பதட்டம் வரத்தானே செய்யும். அந்த நியூஸ்ஸை பிரேக் பண்ணிட்டு இருக்கும் போதே இடமெல்லாம் அதிர ஆரம்பிச்சுடுச்சு. அந்த நிகழ்வையே  மறுபடியும் நியூஸாக்கி நிலநடுக்க அனுபவத்தை சொல்ல சொல்லிட்டாங்க. பிரேக்கிங் நியூஸ் வாசிச்ச என்னையே நியூஸ் ஆக்கிட்டாங்க... இந்தமாதிரியான அனுபவமெல்லாம் வேற எந்த வேலையிலும் கிடைக்காது. 

ஒரு வருட நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இறுதியா நியூஸ் 18 சேனலில் நியூஸ் ஆங்கரா இப்போ இருக்கேன். புதுப்புது இடங்களில் வேலை செய்யும் போது, புது மனிதர்கள், புது அனுபவங்கள் கிடைக்கும். நம்முடைய இடத்தை நிலைநிறுத்திக்கிட்டே இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அதுனால நிதானமான வேலை, ஜாலியான வாழ்க்கைன்னு நேர்கோட்டுல பயணிச்சிட்டு இருக்கேன். 

எந்தக் காரணத்திற்காகவும் நமக்குப் பிடித்த விஷயங்களை விட்டுக்கொடுக்க கூடாது. நமக்கான வரலாறு ரொம்ப முக்கியமானது. இப்போ நடக்கற விஷயங்களையெல்லாம் புரிஞ்சுக்கணும்னா, வரலாறு ரொம்ப முக்கியம். தமிழர் பண்பாடு, அரசியல், சுதந்திரம்னு எல்லாத்தையுமே படிக்கணும். கடந்த ஆறுமாசமா, பிரேக்கிங் நியூஸ் என்கிற விஷயமே பயங்கரமா போய்ட்டு இருக்கு. எத்தனையோ இளைஞர்கள் வீதிக்கு வர ஆரம்பிச்சிட்டாங்க.  இன்றைய இளைஞர்கள் வீதியில் போராட்டுறதுக்கு  நம்முடைய வரலாறு தெரிஞ்சிருக்க வேண்டியது அவசியம். அப்போ தான் நமக்கான உரிமையை விட்டுக்கொடுக்க கூடாதுனு புரியும். நிறைய படிக்கிறதும், உழைக்கிறதும் தான் இன்றைய காலத்தில் தேவையான விஷயமா பார்க்குறேன்" என்று சிரிப்புடன் முடித்தார். 

எந்த இடத்தில் பிரச்னையென்றாலும் களத்தில் செய்திக்காக முதல் ஆளாக ஆஜராகிவிடுகிறார் சரண்யா. வாடிவாசல் களத்திற்குப் பிறகு நெடுவாசல் களம் என்று செய்திப்பணியை சமூக அக்கறையுடன் செயல்பட்டுவருகிற சரண்யாவுக்கு வாழ்த்துகள் சொல்லி விடைபெற்றோம். 

-முத்து பகவத்-