Published:Updated:

‘புதிய லட்சியம் நோக்கி என் பயணம்!' - யுனிசெப் அங்கீகார உற்சாகத்தில் நியூஸ் 7 சுகிதா

ரா.அருள் வளன் அரசு
‘புதிய லட்சியம் நோக்கி என் பயணம்!' - யுனிசெப் அங்கீகார  உற்சாகத்தில்  நியூஸ் 7 சுகிதா
‘புதிய லட்சியம் நோக்கி என் பயணம்!' - யுனிசெப் அங்கீகார உற்சாகத்தில் நியூஸ் 7 சுகிதா

தொடர்ச்சியாக விருதுகளை வென்ற உற்சாகத்தில் இருக்கிறார்  நியூஸ் 7 நெறியாளர் சுகிதா. வெறுமனே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தாண்டி, முற்போக்குக் கருத்துகளை மேடைகளிலும் இதழ்களிலும் பதிவு செய்வதில் முக்கியமானவர் சுகிதா.

"2014-2015 ம் ஆண்டுக்கான சிறந்த கட்டுரைப் பிரிவில் 'உயிர்மை' இதழில் வெளியான என்னுடைய 'தண்டனைக்களமாகும் பெண்ணுடல்' என்ற கட்டுரைக்காக 'லாட்லி விருது' கிடைத்தது. அது, இந்தியா முழுவதும் உள்ள  பெண்களின் மாதவிடாய் தொடர்பான சடங்குகள் மற்றும் மூடநம்பிக்கைகள் குறித்த ஆய்வுக் கட்டுரைக்கு கிடைத்த பரிசு. 'குழந்தை உரிமைகள்' குறித்து நான் எழுதிய கட்டுரை மற்றும் விவாதம் நிகழ்ச்சிகளுக்காக 2016-ம் ஆண்டுக்கான யுனிசெப்பின்  'ஃபெல்லோஷிப்பை  சமீபத்தில்தான் நான் பெற்றேன். தற்போது 2015-2016-ம் ஆண்டுக்கான 'லாட்லி விருதும்' என்னுடைய 'பெண்களின் அரசியலும் - அதிகாரமும்' என்ற 'உயிர்மை' கட்டுரைக்காக கிடைத்துள்ளது. 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறாதது, உலகளவில் நாடாளுமன்றங்களில் பெண்களின் பங்கு எவ்வளவு, உள்ளாட்சி அமைப்புகளில் கொடுக்கப்பட்டிருக்கும் 33 சதவீத பெண்களுக்கு என்ன பயன் அளித்தது என்று நான் எழுதிய ஆய்வுக் கட்டுரைக்காகத்தான் இந்த விருதுக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். இதனால், என் நட்பு வட்டத்தில் 'விருதுகளின் அரசி' என்றே நண்பர்கள் கலாய்க்கிறார்கள்" என்று சிரிக்கிறார்.

புதிய தலைமுறை, தந்தி டி.வி. வருவதற்கு முன்பே, கலைஞர் டி.வி.யில்..'மக்களின்  குரல்' என்ற நிகழ்ச்சி மூலம்; அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒரு பெண் தொகுப்பாளராக இவர் தொடர்ந்து வழங்கி வந்தார். தற்போது நியூஸ் 7 சேனலில் நெறியாளராக, 'இன்றைய செய்தி' என்று அரசியல் மற்றும் சமூக விவாத நிகழ்ச்சிக்கு நெறியாளராகவும் உள்ளார்.  

"எங்கள் கிராமத்தின் முதல் பத்திரிக்கையாளர் நான். சொல்லவே பெருமையாக இருக்கிறது. தஞ்சை மாவட்டம், கள்ளம்பட்டி என்னும் கிராமத்தில் எந்த அரசியல் குடும்ப பின்னணியும், ஊடகப் பின்னணியும் இல்லாமல், வெறும் வாசிப்பை மட்டுமே வைத்து மீடியாவுக்கு வந்தேன். அதற்காக என்னை நான் தயார்படுத்திக்கொண்டதும், போட்டி நிறைந்த இந்த ஊடக உலகில் என்னை நிலை நிறுத்திக்கொள்வதும் கடும் சவாலான ஒன்றாகவே ஆரம்பத்தில் இருந்தது. இன்றளவிலும் அது, சவாலாகவே இருக்கிறது. எனக்குள் வாசிப்பு தாகம் ஏற்படவும், ஏற்பட்ட அந்த வாசிப்பு தாகத்துக்குத் தீனிப்போட்டதும், என்னை உண்மையான பத்திரிகையாளராய் வளர்த்தெடுத்ததும் 'விகடன்' தான்.

நான் விஷுவல் மீடியாவில் சேர்ந்த புதிதில் இருந்த சூழல், இப்போது இல்லை. மீடியாவில், பெண்களுக்கு வாய்ப்புகள் கொடுப்பதில் வைத்திருந்த விதிமுறைகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன. தற்போது, ஒரு சேனலுக்குத் தலா ஒரு பெண்ணாவது, நேரலையில் அரசியல் பேசிக் கொண்டிருக்கிறார். இதை ஆரோக்கியமான வளர்ச்சியாகவே நான் பார்க்கிறேன். அதே நேரத்தில், விஷுவல் மீடியாவில் பணியாற்றுபவர்களுக்கு எழுதத் தெரியாது என்று சொல்வதுண்டு. அந்தப் பெயரையும் உடைத்தெறிய வேண்டும் என்பதற்காகவே இதழ்களில் தொடர்ந்து நான் எழுதி வருகிறேன். 'அகில இந்திய வானொலியில்' விளையாட்டுச் செய்தியை தொகுத்தளிக்கும் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு அறிவிப்பதும் உண்டு. இப்படியான அனுபங்களுடன் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் மருத்துவத் தொழில் நுட்பப் பிரிவினருக்கு பாலின சமத்துவம் குறித்து சிறப்பு வகுப்புகள் எடுத்து வருகிறேன். வழக்கமாகப் பெண்கள் வேலைக்கு செல்லும்போது குழந்தைகளைக் கவனித்துக் கொள்வது இரட்டை சவாலாக இருக்கும். அத்தகைய சவால்களை நானும் பல முறை சந்தித்து இருக்கிறேன். 'சென்னை பெருவெள்ளம்', 'வர்தா புயல்' போன்று இயற்கைப் பேரிடர் காலங்களில், அரசியல் திருப்பங்கள் நிறைந்த பரபரப்பான சூழலில்.. என் ஒரே மகளை நண்பர்கள் வீடுகளில் விட்டுவிட்டு அலுவலகம் வந்து பணியாற்றிய தருணங்கள் நிறைய உண்டு. 

சென்னை வெள்ளத்தின்போது, வெள்ளம் பாதித்த பகுதிகளில் இடுப்பளவு தண்ணீரில் நின்று நேரலையில் செய்திகளை வழங்கியதும், நேரலையில் செய்திகள் வழங்கிக் கொண்டிருக்கும்போதே.. 'வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட முதியவர் ஒருவருடைய உடல், கண்முன்னே மிதந்து வந்த காட்சியெல்லாம் இன்னும் நினைத்தால் பதறும். 

கலைஞர் டி.வி.யின் இயக்குநராக 'ரமேஷ்பிரபா' இருந்த காலகட்டத்தில், ஒரு முறை என்னிடம் அவர் 'நீங்கள் 60 வயதிலும் எந்தச் சேனலிலாவது அமர்ந்து ஒரு தேர்ந்த பத்திரிகையாளராக இருப்பீர்கள்' என்றார். அந்த வார்த்தைகளை எனக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாகவே நான் பார்க்கிறேன். அந்த வார்த்தைகள்தான், நான் சோர்ந்து போகும் போதெல்லாம், என்னை உற்சாகப்படுத்தும்.

இப்படியான வாழ்த்துகளும், ஆதரவும்தான்  எனக்குள் ஒரு  புதிய லட்சியத்தை தற்போது ஏற்படுத்தி உள்ளது. அது வேறொன்றும் அல்ல... எதிர்காலத்தில் ஒரு தொலைக்காட்சியை வழிநடத்தக்கூடிய பொறுப்பில் அமர வேண்டும். ஆசிரியர் பதவியை அலங்கரிக்க வேண்டும் என்பதுதான். பெண்களும்  செய்தியை உருவாக்கி, நெறிப்படுத்தி சிறப்பாக பணியாற்ற முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும். விஷுவல் மீடியாவில் முதல் 'பெண் ஆசிரியர்' என்ற முத்திரையை பதிக்க வேண்டும் என்ற ஆசை, தாகம் தற்போது ஏற்பட்டுள்ளது. அந்த இலக்கை நோக்கி  இனி என் மீடியா பயணம் இருக்கும்." என்கிறார் உற்சாகமாக.

 - ரா.அருள் வளன் அரசு, படங்கள்: மீ.நிவேதன்