Published:Updated:

“கல்யாணம் என் பெர்சனல் விஷயம்!” - படபடக்கும் ப்ரியா பவானிசங்கர் #VikatanExclusive

பா.விஜயலட்சுமி
“கல்யாணம் என் பெர்சனல் விஷயம்!” - படபடக்கும் ப்ரியா பவானிசங்கர் #VikatanExclusive
“கல்யாணம் என் பெர்சனல் விஷயம்!” - படபடக்கும் ப்ரியா பவானிசங்கர் #VikatanExclusive

டிவி உலகில் செய்திவாசிப்பாளராக இருந்தவர் என்று சொல்வதைவிட ‘KMKV’ ஹீரோயின் என்று சொன்னால்தான் ரசிகர்களுக்கு ப்ரியாவை டக்கென்று அடையாளம் தெரியும். விஜய் டிவியின் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ தொடர் மூலமாக ப்ரியா பவானிஷங்கர் அவ்வளவு பிரபலம். ஆனால், திடீரென்று தொடரிலிருந்து அவர் விலகியதும் வதந்திகள் அவரைச் சுற்றி சிறகடித்துப்பறந்தன. ‘ப்ரியா கல்யாணம் செய்துகிட்டார்’, ‘ப்ரியா ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆய்ட்டார்’ என்றெல்லாம் எக்கசக்க ப்ரேக்கிங் நியூஸ்கள். உண்மையில் ப்ரியா பவானிசங்கர் ஏன் தொடரிலிருந்து விலகினார், வதந்திகளின் நிஜப்பின்னணி என்ன என்று அவரிடமே கேட்டோம்.

 ”நியூஸ் ரீடரா பயணிச்சுட்டு இருந்த நீங்க ஏன் திடீர்னு நடிக்க வந்தீங்க?”

“புதிய தலைமுறையில் செய்திவாசிப்பாளராக பிசியா போய்ட்டு இருந்தது லைஃப். அதைவிட்டு வெளியே வர முடிவெடுத்தப்போ தற்செயலா சீரியல் சான்ஸ் வந்துச்சு. நானும் சரினு ஒத்துக்கிட்டேன். டிவிக்குள் நுழைஞ்சப்போ பெருசா நிறைய நடிக்கணும் அப்படிங்கறதெல்லாம் நினைக்கலை. சீரியல்னா 20 நாள் ஷூட் இருந்தா 10 நாள் ரெஸ்ட் கிடைக்கும் அப்படிங்கற எண்ணம் மட்டும்தான் மனசில் இருந்தது.”

“'கல்யாணம் முதல் காதல் வரை' நல்லாத்தானே போய்ட்டு இருந்துது. ஏன் டக்குனு வெளியேறினீங்க?”

“சீரியல் ஆரம்பிச்சப்போவே நான் இயக்குநர்,  தயாரிப்பாளர் மற்றும் சேனல் தரப்பிலும் தெளிவா சொல்லித்தான் கையெழுத்தே போட்டேன். மெகா சீரியல்னா இழுத்துட்டே இருக்கும். என்னால இரண்டு வருஷம் மட்டும்தான் கால்ஷீட் தரமுடியும்னு சொல்லியிருந்தேன். அதனால நான் வெளில வந்தப்போ சேனலுக்கோ, இயக்குநருக்கோ அது பெரிய ஷாக் கிடையாது. ஒருசில பேட்டிகள்ல கூட சொன்னேனே.. இருந்தாலும், ரசிகர்களுக்கு இந்த விஷயம் முழுசா போய்ச் சேராததால நான் சீரியலை விட்டு விலகியதை அவங்களால ஏத்துக்க முடியலை. ஐ அம் சாரி ஆடியன்ஸ்.”

“KMKV அனுபவம் எப்படி இருந்தது? என்னலாம் கத்துக்கிட்டீங்க?”

”சின்னவயசில் ஸ்கூல், காலேஜ் எங்கேயும் நடிச்சதில்லை. சீரியல் கமிட் ஆனப்போ கூட அங்க போய் நடிக்கணுமே அப்படிங்கறதை நான் யோசிக்கலை. முதல்நாள் ஷூட், எல்லாரும் பயங்கரமா நடிக்கறாங்க. நான், ‘இவங்களாம் என்ன பண்றாங்க?’னு வேடிக்கைதான் பார்த்தேன். ‘கல்யாணம் முதல் காதல் வரை’ இந்தி சீரியலோட ரீமேக் அப்டிங்கறதால, அதைவிட பெஸ்ட்டாதான் எதிர்ப்பார்ப்பாங்க டீம்ல. அப்போலாம், ‘நமக்கு வராத வேலையைக் கையில் எடுத்துட்டோமோ?’னு மனசுக்கு கஷ்டமா இருக்கும். அப்புறம் கொஞ்சகொஞ்சமா மத்தவங்க நடிப்பை பார்த்து நானா கத்துக்கிட்டேன். எனக்கு யாராவது உன்னோட வேலை சரியில்லைனு சொல்லிட்டங்கனா ரொம்ப அப்செட் ஆய்டுவேன். அப்படி ஆய்டக்கூடாதுங்கறதுக்காகவே ரொம்ப மெனக்கெட்டு நடிக்க ஆரம்பிச்சேன். அது சக்சஸ்-ம் ஆச்சு. எனக்கு நடிப்புக்கு ஒரு நல்ல ஸ்கூல் கேஎம்கேவி.”

”நீங்க சீரியலில் இருந்து வெளியேறினப்போ உங்களோட நம்பர் உபயோகத்தில் இல்லை. சீரியல் டீம் மெம்பர்ஸூம் சரியா பதில் சொல்லலை. அவங்களுக்கு கூட தெரியாதா?”

”ஹையோ இல்லை. அவங்க எல்லாருக்குமே இதுதான் காரணம்னு தெரியும். இருந்தாலும் நான் சொல்லலை அப்படிங்கறதுக்காக சொல்லாம இருந்துருக்கலாம். மத்தபடி வெளிவந்த எல்லா நியூஸூம் வதந்திதான். என்னோட ஃபேஸ்புக் பக்கத்தில் கூட, ‘நான் கல்யாணத்துக்காக சீரியலில் இருந்து வெளியேறலை’னு தெளிவா போட்டுருந்தேன். எங்கருந்து, யார் ஆரம்பிச்சாங்கனு தெரியலை அந்தளவுக்கு ப்ரியாக்கு கல்யாணம், ப்ரியாக்கு கல்யாணம்னு பரவிடுச்சு. நிஜமாவே நான் கல்யாணம் பண்ணிக்கும்போது நிறைய பேர், ‘இந்தப் பொண்ணு எத்தனை தடவை கல்யாணம் செய்துக்கும்?’னு கேட்கப்போறாங்கனு நினைக்கறேன். ரகசியமா கல்யாணம் பண்ணிக்கற அவசியம் எனக்கு இல்லையே. அது ஒரு சந்தோஷமான விஷயம். ஆகவே, ‘ரசிகர்களே நான் கல்யாணம் எல்லாம் பண்ணிக்கலை... இப்போதைக்கு அப்படி எந்த ஐடியாவும் கிடையாது. கல்யாணம் பண்ணிக்கறப்போ கண்டிப்பா உங்களுக்கெல்லாம் சொல்லிட்டுதான் செய்துப்பேன்’.”

”உங்களுக்கும், ஹீரோ அமித்க்கும் சண்டை. அதுவும் ஒரு காரணம்னு கேள்விப்பட்டோமே?”

“எனக்கும், அமித்க்கும் சண்டையா? அவர் என்னோட சக ஊழியர். ஒரு நல்ல ப்ரெண்ட். அவர்கிட்ட போய் நான் ஏங்க சண்டை போடப்போறேன். அவர் என்ன என்னோட எதிரியா? நடிக்கறப்போ பார்த்துப்போம்... பேசிப்போம் அவ்ளோதான். மத்தபடி அவருக்கும், எனக்கும் எந்த பிரச்னையும் கிடையாது. அமித் மட்டுமில்லாம டீம்ல எல்லாருமே எனக்கு இன்னைக்கும் நல்ல நண்பர்கள்.”

“ஃபேஸ்புக் போட்டோக்களில் உங்க கூட இருக்கற அந்த நபர் உண்மையில் யாரு?”

“அது ரகசியமெல்லாம் கிடையாது. இட்ஸ் மை பர்சனல். அதனாலதான் அதைப்பத்தி பெருசா நான் வெளில பேசறதில்லை. ஆனால், நிறைய பேர் நியூஸ்காகவே அதை ஊதிப் பெருசாக்கிட்டாங்க. எனக்கும், அவருக்கும் என்னவேணாலும் இருக்கட்டும். அது என்னோட சொந்தவிஷயம். அவ்வளவுதான். இப்போதைக்கு நோ கல்யாணம். தட்ஸ் இட்.”

“சினிமாவில் நடிக்கற ஐடியாவோட இருக்கீங்கனு நினைக்கறேன். படம் ஏதாவது க்ளிக் ஆகியிருக்கா?”

“அதுபத்தி இன்னும் பேசிகிட்டு இருக்கேன். இந்த கல்யாண வதந்தியால கொஞ்சம் லேட் ஆகுது. நிறைய பேர் எனக்கு கல்யாணம் ஆய்டுச்சுனு நம்பினதன் பின்விளைவு அது. கேஎம்கேவி மூலமா ஒரு நல்ல பெயர் கிடைச்சுருக்கு. அதை கெடுத்துக்காத மாதிரி நல்ல கேரக்டரா நடிக்கணும். சினிமா என்ட்ரி விரைவில் நடக்கும்.”

“KMKV சீரியலுக்கு முன்னாடி, பின்னாடி லைஃப் எப்படி மாறியிருக்கு?”

“நிஜமாவே நான் ரசிகர்களுக்கு பெரிய நன்றி சொல்லணும். ஒரு சினிமா ஹீரோயின் அளவுக்கு எனக்கும் நிறைய சோஷியல் மீடியா பாலோயர்ஸ் இருக்காங்க இப்போ. வாழ்க்கை ரொம்பவே சந்தோஷமா, ரசிகர்களோட அன்பு நிறைஞ்ச உலகமா மாறியிருக்கு.”

“கல்யாணம்னு வதந்தி கிளம்பினப்போ நண்பர்களோட ரியாக்‌ஷன் எப்படி இருந்துச்சு?”

“என்னோட ப்ரெண்ட்ஸ்க்கு உண்மை தெரியும். இருந்தாலும், சோஷியல் மீடியால ப்ரியாக்கு கல்யாணம்னு நியூஸ் வரப்போலாம் காய்ஞ்சு கிடக்கிற வாட்ஸப் க்ரூப்களில் நான் தான் பலியாடு. ‘என்னமா ப்ரியா உனக்கு கல்யாணமாமே...நீ இன்னுமா கோலம் போட்டுகிட்டு இருக்க?’னு செமத்தியா கலாய்க்க ஆரம்பிச்சுடுவாங்க.”

”படிச்சது எஞ்சினியரிங், எம்.பி.ஏ. ஆனால், வேலைக்குத் தேர்ந்தெடுத்தது தமிழ். அவ்வளவு ஆர்வமா தமிழ் மேல?”

“என்னோட தாய்மொழியே தமிழ்தானேங்க. வேற மொழி பேசறவளா இருந்து, நான் தமிழ் பேசினால் இந்த கேள்வி கேட்கலாம். ஆங்கிலத்தில் படிச்சாலும் இன்னைக்குவரை என்னை வாழவச்சுகிட்டு இருக்கறது என்னோட தமிழ் மொழிதான்.” என்று உணர்வுகள் பொங்கிவழிய எல்லா விஷயங்களையும் சொல்லிமுடித்து விடைகொடுத்தார் ப்ரியா.