Published:Updated:

'நம்புங்க... பாலிடிக்ஸ்லாம் இல்லைங்க..!' - கலக்கப்போவது யாரு சாம்பியன் வினோத் கலகல #VikatanExclusive

வெ.வித்யா காயத்ரி
'நம்புங்க... பாலிடிக்ஸ்லாம் இல்லைங்க..!' - கலக்கப்போவது யாரு சாம்பியன் வினோத் கலகல #VikatanExclusive
'நம்புங்க... பாலிடிக்ஸ்லாம் இல்லைங்க..!' - கலக்கப்போவது யாரு சாம்பியன் வினோத் கலகல #VikatanExclusive

கடந்த மாதம் விஜய் டிவி-யின் கலக்கப்போவது யாரு சீசன்-6 இறுதிச்சுற்று மதுரையில் நடைபெற்றது. அதற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் சந்தானம் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் இறுதிப்போட்டிக்கு ஆறு போட்டியாளர்கள் தேர்வாகியிருந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த வினோத், பாலா இருவரும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். டைமிங் கவுன்ட்டரில் அசத்தி வின்னரான வினோத்துடன் ஒரு சண்டே ஸ்பெஷல் சிட் சாட்... 

"சொந்த ஊர் சென்னையின் திருவொற்றியூர். பி.பி.ஏ படிச்சிருக்கேன். சின்ன வயசுலேர்ந்து மீடியா, சினிமானு ஆர்வம். ஆனால், குடும்பச் சூழல்களால கார்ப்பரேட் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். கனவுக்கும், வாழ்க்கைக்கும் இடையில் சிலவற்றை காம்ப்ரமைஸ் பண்ணித்தானே ஆகவேண்டியிருக்கு. 'கலக்கப்போவது யாரு' பார்த்துட்டு அதுக்கு ட்ரை பண்ணினேன். முதலில் கலந்துக்க சான்ஸ் கிடைக்கலை. அதற்கு அப்புறம், வின் டி.வி, ஜீ தமிழ், வேந்தர் டி.வி-னு சில சேனல்களில் வந்துட்டு, திரும்பவும் விஜய் டி.வி-யில் கலந்துக்கிட்டேன். ஆறு வருஷம் வேற வேலை பார்த்துக்கிட்டே அப்பப்போ காமெடி பண்ணிட்டுருந்தேன்.  வாய்ப்புக் கிடைச்சதும் அந்த வேலையையும் விட்டாச்சு. கடந்த சீசன்ல ரன்னர். இந்த சீசன்ல வின்னர். சந்தோஷமா இருக்கு. ' சாம்பியனுக்கான ஆரவாரமில்லாமல் பேசுகிறார் வினோத்.

"கலக்கப்போவது யாரு அனுபவம் எப்படி இருந்துச்சு..?"
"கலக்கப்போவது யாரு ப்ரோகிராம்னாலே காமெடிதான். ஷூட்டிங்லயும் காமெடிக்குக் கொஞ்சமும் பஞ்சம் இருக்காது. தௌஃபிக் கூட சேர்ந்து நான் பெர்ஃபார்ம் பண்ணினேன். ஒவ்வொரு எபிஸோட்லயும் என்னால முடிஞ்ச அளவுக்கு சிறப்பா பெர்ஃபார்ம் பண்ணினேன்னு நம்புறேன். கடைசியா ஃபைனலுக்கு ஆறு பேர் போனோம். அதில் ரசிகர்களுக்கு மத்தியில் நானும், பாலாவும் சாம்பியன் ஆனது எனது வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணம்." 

"உங்களோட ஸ்பெஷாலிட்டி என்னனு நினைக்கிறீங்க..?"
"கவுன்ட்டர்தான் என்னோட ஸ்பெஷல். இந்த சீசன்ல குடிகாரர் கெட்டப், கிழவி கெட்டப்தான் செம்மயா இருந்துச்சுனு எல்லோரும் சொல்லுவாங்க. ரோபோ சங்கர் அண்ணனும், காமெடி நடிகர் சதீஷும், 'உன் பெர்பாமன்ஸுக்கு நாங்க ரசிகன் தம்பி. அதுலயும் அந்த கெழவி கெட்டப்ல பிரிச்சிட்ட'னு பாராட்டினாங்க. இந்த நிகழ்ச்சிக்கு வந்ததுக்கு அப்புறம் டைமிங் ஹூமர் சென்ஸ் இன்னும் இம்ப்ரூவ் ஆகிடுச்சு."

"காமெடியன் ஆனதால் இழந்தவை - அடைந்தவை..?"
"முன்னாடி, ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் நைட் ஷிஃப்ட் வொர்க் பண்ணிக்கிட்டே மற்ற டி.வி.நிகழ்ச்சி சூட்களில் கலந்துக்கிட்டேன். 'கலக்கப்போவது யாரு' வந்ததுக்கு அப்புறம் நேரம் கிடைக்காம வேலையை விட வேண்டியதாப்போச்சு. காமெடியன் ஆகணும்னு ஆசை வந்ததால் இழந்தது என் வேலை மட்டும்தான். 
வேலை தேடின காலங்கள்ல எச்.பி உள்பட என்னை ரிஜக்ட் பண்ணின பல கம்பெனிகளுக்கு காமெடி கெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ் பண்றதுக்காகப் போயிருக்கேன். அப்போவெல்லாம் மனசுல ஒரு சந்தோஷம் வரும். தோல்வியைச் சந்திச்ச இடத்துலயே கெத்தா போய் நிக்கிறது ரிவெஞ்ச் எடுக்கிற மாதிரி."

"ஒவ்வொரு சீசன் முடியும்போதும் பாலிடிக்ஸ்னு பேசப்படுதே... அதைப்பற்றி..?"
"அட... பாலிடிக்ஸ்லாம் இல்லைங்க. அந்தந்த எபிஸோட்ல யார் நல்லா பெர்ஃபார்ம் பண்றாங்களோ அவங்களுக்குத்தான் நல்ல மார்க் கிடைக்கும். ஃபைனல்ஸ்ல நானும், பாலாவும் நல்லா பண்ணினதால நாங்க சாம்பியன் ஆகிட்டோம். பாலிடிக்ஸ்னு சொல்றதெல்லாம் சும்மா கப்ஸா..."

"குடும்பம்..?"
"அண்ணனும், நானும் வேலைக்குப் போனதுக்கு அப்புறமும் எங்க அப்பா வாட்ச்மேன் வேலைக்குப் போய்க்கிட்டு இருக்கார். எனக்குக் கல்யாணம் ஆகி, ஒரு குழந்தை இருக்கு. குடும்பத்தை நடத்துறது ரொம்பக் கஷ்டமா தான் இருக்கு. நல்ல வாய்ப்பு கிடைச்சுட்டா கஷ்டமெல்லாம் தீர்ந்திடும். பார்க்கலாம்..!" மெல்லிய புன்னகையோடே பேசி முடித்தார் வினோத்.