Published:Updated:

'ரெஜினா டீச்சர் பத்தி சொல்லணும்னா..!' - 'காமெடி ஜங்ஷன்' அன்னலட்சுமி

வே.கிருஷ்ணவேணி
'ரெஜினா டீச்சர் பத்தி சொல்லணும்னா..!' - 'காமெடி ஜங்ஷன்' அன்னலட்சுமி
'ரெஜினா டீச்சர் பத்தி சொல்லணும்னா..!' - 'காமெடி ஜங்ஷன்' அன்னலட்சுமி

விஜய் டி.வியின் 'கலக்கப்போவது யாரு?' அன்னலட்சுமி என்றால், தெரியாதவர்கள் கிடையாது. நிகழ்ச்சியின் நடுவர்கள் அவரை 'அக்கா' என அழைத்தே கலாய்த்து தள்ளினார்கள். அந்த சீசனில் அன்னலட்சுமி தேர்வாகாவிட்டாலும் வாய்ப்புகளுக்குப் பஞ்சமில்லை. தற்போது, சன் டி.வியின் 'காமெடி ஜங்ஷன்' நிகழ்ச்சியில் கலக்கிவருகிறார். 

''உங்க வாய்ஸ் இனிமையா இருக்கே, நல்லாப் பாடுவீங்களோ...'' 

''கலாய்க்கறீங்கனு நல்லாத் தெரியுது. ஆனாலும் சொல்றேன், உண்மையிலேயே நான் நல்லாப் பாடுவேன். நண்பர்கள் மத்தியில் அடிக்கடி பாடும் பாட்டு, 'ஊருசனம் தூங்கிருச்சு'. மேடைகளில் பாடி பாராட்டு வாங்கியது 'மச்சான் மீசை வீச்சருவா' பாடல்'' (பாடிக் காண்பிக்கிறார்). 

''சன் டி.வி 'காமெடி ஜங்ஷன்' தவிர்த்து வேறு என்னென்ன நிகழ்ச்சிகளில் இருக்கீங்க?'' 

'' 'காமெடி ஜங்ஷன்' நிகழ்ச்சியில் கடந்த ஒரு வருஷமா இருக்கேன். மதுரை முத்து, ஜெயசந்திரன் போன்ற காமெடி பட்டாளதோடு நிகழ்ச்சி பண்றதே செம எக்ஸ்பீரியன்ஸா இருக்கு. என் பேஸே பட்டிமன்றம்தான். அதை எப்போதும் விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து பட்டிமன்றங்களில் பேசிட்டிருக்கேன். கவிஞர் நந்தலாலா, மதுரை முத்து, 'கலக்கப்போவது யாரு?' பழனி என பல பேருடைய தலைமையில் பேசறேன். 'விஜய் சூப்பர்' சேனலின் 'இன்னிசை பட்டிமன்றம்' நிகழ்ச்சியிலும் பேசுறேன். என்னை எப்பவும் பிஸியாக வெச்சுக்கறதுதான் என் ஸ்டைல்.'' 

''உங்களுக்குப் பேச்சுத் திறமை இருக்குனு எப்போ கண்டுபிடிச்சீங்க?'' 

''மூன்றாம் வகுப்பு படிக்கும்போது என் கிளாஸ் மிஸ் ரெஜினா எந்தப் போட்டியாக இருந்தாலும் என்னை கலந்துக்க வைப்பாங்க. என் கையில் ஸ்கிரிப்டைக் கொடுத்து படிக்கச் சொல்வாங்க. வகுப்பிலிருக்கும் சக மாணவர்களுக்கு நான்தான் சொல்லிக்கொடுப்பேன். எனக்கு ஆடத் தெரியும், பாடத் தெரியும், பேசத் தெரியும் என்பதையெல்லாம் அடையாளம் காட்டினது ரெஜினா டீச்சர்தான். நாம வளர்ச்சி அடையும்போது பொறாமைப்படாத ஒரே நபர்னா, அது நமக்குக் கற்றுக்கொடுத்த டீச்சராதான் இருக்கும். நான் படிச்ச அந்த ஸ்கூலிலேயே போய் பேசணும். அதுதான் என் வாழ்க்கையின் முக்கியமான ஆசை.'' 

'' 'கலக்கப்போவது யாரு?' உங்கள் முதல் நிகழ்ச்சியா?'' 

''இல்லை, நான் எட்டு வருஷமாக மீடியாவுல இருக்கேன். முதன்முதல்ல கலைஞர் டி.வியில் ஒளிபரப்பான 'அழகிய தமிழ் மகள்' நிகழ்ச்சியில்தான் கலந்துக்கிட்டேன். பிறகு அந்த நிகழ்ச்சிக்கே ஷோ டைரக்டரா வேலைப் பார்த்தேன். அடுத்த ஒரு வாரத்திலேயே சன் டி.வியின் 'அரட்டை அரங்கத்தில்' பேசும் வாய்ப்பு கிடைச்ச்சது. அதைப் பார்த்து ஜி தமிழ் 'ஞாயிறு பட்டிமன்றம்' வாய்ப்பு வந்துச்சு. ஞாயிறு பட்டிமன்றத்தில் நான் வெற்றிபெற்றேன். திருச்சியின் காட்டூரில் பிறந்து வளர்ந்து, இன்றைக்கு பலருக்கும் தெரிஞ்ச ஒரு பேச்சாளராக மாறியிருக்கிறதை பெருமையாக நினைக்கிறேன்.'' 

''வீட்டில் பெற்றோர் உங்கள் வெற்றியை எப்படிப் பார்க்கிறாங்க?'' 

''எங்கள் குடும்பத்தில் நான்தான் இப்படி. பேச்சு, மீடியா எல்லாம் எங்கள் குடும்பத்துக்குப் புதுசு. அதனால், ராத்திரி, பகல் என நினைச்ச நேரத்தில் போய்வருவதைப் பார்த்து அப்பாவும் அம்மாவும் பயந்துதான் போயிருக்காங்க. 'இதெல்லாம் உனக்குத் தேவையா?'னு கேட்பாங்க. அவங்களைக் கொஞ்சி கெஞ்சி சமாதானம் செஞ்சுடுவேன். எந்த இடத்துக்கும் பயப்படாம கிளம்பிடுவேன். தைரியமும் தன்னம்பிக்கையும்தான் நம்மை எப்பவுமே முன்னேற்றப் பாதைக்கு கூட்டிட்டுப் போகும்னு நம்புறவ நான்.'' 

''சில நிகழ்ச்சிகளில் காமெடியாக உங்களைத் தாக்கிப் பேசும்போது வருத்தமாக இருக்குமா?'' 

''வைகை புகழ் வடிவேலு சார் எத்தனை இடங்களில் அடிவாங்கற மாதிரியும், தன்னை தாழ்த்திக்கிற மாதிரியும் நடிச்சிருக்கார். மற்றவர்களைத் தன்னை மறந்து சிரிக்கவைக்கிறதுதான் ஒரு நகைச்சுவை கலைஞனின் கடமை. அந்த இடத்தில் நான் இருக்கேன். ஸோ, யார் எவ்வளவு கலாய்ச்சாலும் அந்த மேடையிலேயே விட்டுட்டு இறங்கிடுவேன். சில கஷ்டமான நேரங்களில் 'இதுவும் கடந்துபோகும்' என்கிற நம்பிக்கையோடு என் பயணத்தை தொடர ஆரம்பிச்சுடுவேன். மக்களுடைய பாராட்டு கிடைக்க கிடைக்க இன்னும் நல்லாப் பண்ணணும் என்கிற பயம் மட்டும் இருக்கு. 'ஊருக்காக வாழும் கலைஞன் தன்னை மறப்பான்' என்கிற வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்துட்டிருக்கேன்.'' 

''இதுவரை நீங்கள் வாங்கியிருக்கும் விருதுகள்...'' 

''இசைமாமணி, நாடக கலைச்செல்வர், செந்தமிழ் நாவலர், நகைச்சுவைப் பேரரசி, சிம்மக்குரல் என பல விருதுகளை வாங்கியிருக்கேன். நான் பிறந்ததற்கான பலனை, சமூகத்தில் எனக்கான அடையாளத்தை விட்டுவிட்டுப் போகணும்னு நினைக்கிறேன்'' என்கிறார் அன்னலட்சுமி புன்னகை மாறாமல்.