Published:Updated:

“என்னைப் பற்றி ஒரு சீக்ரெட்!’’- ஜாக்குலின் முதல் அஞ்சனா வரை... சின்னத்திரை நட்சத்திரங்களின் பெர்சனல்!

முத்து பகவத்
சுஜிதா சென்
“என்னைப் பற்றி ஒரு சீக்ரெட்!’’- ஜாக்குலின் முதல் அஞ்சனா வரை... சின்னத்திரை நட்சத்திரங்களின் பெர்சனல்!
“என்னைப் பற்றி ஒரு சீக்ரெட்!’’- ஜாக்குலின் முதல் அஞ்சனா வரை... சின்னத்திரை நட்சத்திரங்களின் பெர்சனல்!

லைவ் ஷோவில் மொக்கைபோடுவதில் தொடங்கி சீரியலில் கண்ணீர்விடுவது வரையில் சின்னத்திரை நட்சத்திரங்கள்தான் தொலைக்காட்சிகளின் ஹார்ட் பீட். டிவி ப்ரியர்களின் குட் புக்கில் இருக்கும் சின்னத்திரை ஸ்டார்களின் பெர்சனல் பக்கங்கள் இதோ! 

மணிமேகலை:

“ஐ லைக் டான்ஸ்! யார் டான்ஸ் ஆடினாலும் உறைஞ்சுபோய் வேடிக்கை பார்ப்பேன். என்னை இம்ப்ரெஸ் பண்ணணும்னா நல்லா டான்ஸ் ஆடத்தெரிஞ்சாலே போதும். நல்லா டான்ஸ் ஆடுற பையனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்.” 

ரக்‌ஷன்: 

சினிமாவில் ஹீரோ ஆக வேண்டும் என்பதே ஒருகாலத்தில் ரக்‌ஷனின் கனவு. பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களின் வீட்டுக் கதவைத் தட்டியவர்.  சினிமாவுக்காக போட்டோ ஷூட் எடுக்க 17,000 ரூபாயை ஒருவரிடம் கொடுத்து ஏமாந்திருக்கிறார். ``கடைசிவரைக்கும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோகூட எடுக்கலை. அப்போ வீட்டுல ரொம்ப கஷ்டம். சினிமாவே வேணாம்னு வந்துட்டேன். கொஞ்சநாள் சேலை பிசினஸ் பண்ணிட்டிருந்தேன். மெஸ்கூட வெச்சு நடத்தினேன். அப்புறம் ஃபார்மசியில் வேலை பார்த்தேன். கடைசி முயற்சியா ராஜ் மியூசிக்ல ஆடிஷன் போனேன். வேலையும் கிடைச்சது. அப்புறம் விஜய் டிவி-யில் கிடைச்ச வாய்ப்புனால இவ்வளவு தூரம் வந்திருக்கேன். 

ஜாக்குலின்:

ஶ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சின்னத்திரைக்கு வந்த முதல் பெண் தொகுப்பாளினி. ஏர் ஹோஸ்டஸ் வேலையை விட்டுவிட்டு சின்னத்திரைக்குள் நுழைந்தவர். விஜய் டிவி-யின் டாப் ஃபேவரைட் தொகுப்பாளினி. கலாய் வாங்கியே பிரபலமான சின்னப்பொண்ணு. ``என் ஊருக்கெல்லாம்  எந்த சினிமா பிரபலமும் வந்ததா எனக்கு ஞாபகமே இல்லை. அப்படிப்பட்ட ஒரு சின்ன ஊரில் இருந்து வந்து விஜே-வா இருக்கிறதே எனக்குப் பெருமைதான். நான் ரொம்பத் துணிச்சலான பொண்ணு. கலாய் வாங்கினாத்தானே திருப்பிக் கலாய்க்க முடியும். என்னப் பற்றி ஒரு சீக்ரெட் சொல்லவா, பொண்ணுங்கன்னாலே மெலடி சாங்ஸ்தான் பிடிக்கும்னு  நினைப்பீங்க. ஆனா, எனக்கு குத்துப்பாட்டுதான் ஃபேவரைட்.” 

தியா: 

பிறந்தது மலையாளக் கரை. படித்து வளர்ந்தது குன்னூரில்.  திருமணமாகி சிங்கப்பூரில் செட்டிலாகிவிட்டாலும், வேலைக்காக அடிக்கடி சென்னைக்கு வந்துவிடுகிறார். தனிமை விரும்பி, அமைதியான இடங்களில் நேரம் கழிப்பது தியாவின் பொழுதுபோக்கு. ``இந்த உலகத்துலேயே சாப்பாடுதான் எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம். `கிரேசி கண்மணி' நிகழ்ச்சி பண்ணியதால் சென்னையில் எல்லா ஏரியாக்களிலும் நல்ல சாப்பாடா தேடித் தேடிச் சாப்பிட்டிருக்கேன். `நல்ல ஹோட்டல் எங்கே இருக்குனு சென்னைவாசிகளுக்கே நான்தான் கைடு. பாஸ்... நீங்க எந்த ஏரியா?” என்று கேப் விடாமல் பேசிக்கொண்டே போகிறார் தியா. 

நட்சத்ரா: 

இணையத்தைத் தட்டினால் நட்சத்ரா நடித்த குறும்படங்கள் வந்து குவியும். குறும்பட நடிகையாகத் தொடர்ந்து நடித்ததால், தந்தி டிவி-யில் தொகுப்பாளினியாக  இவருக்கு வாய்ப்பு வந்தது. இவர் சிறந்த ஒடிசி டான்ஸர். `சன் சிங்கர்- 2' சீஸன்களை ரகளையாகக் கொண்டுசென்றவர். மூன்றாவது சீஸனிலும் தொகுப்பாளினியாக அசத்திவருகிறார்.

சித்ரா:- 

``என்னுடைய க்யூட் ஸ்மைலிக்குப் பின்னாடி ஒரு சீரியஸ் எமோஜி இருக்கிறது யாருக்குமே தெரியாது. நான் பயங்கர கோவக்காரிங்க. எந்த அளவுக்குன்னு பார்த்தீங்கன்னா, பசங்களை ரோட்ல நிக்கவெச்சு காலரைப் பிடிச்சு அடிக்கிற அளவுக்கு. ஒருநாள், அப்படித்தான் சிக்னலில் கார் நின்னுட்டு இருந்தப்போ, ஒருத்தன் பயங்கர வேகத்துல வந்து கார் பின்னாடி இடிச்சுட்டான். கார்ல இருந்து இறங்கி அவனோட சட்டையைப் பிடிச்சு பளார் பளார்ன்னு அறைஞ்சுட்டேன். அதுக்கு அப்புறம்தான் தோணுச்சு, `ச்ச்ச்சா... அந்தப் பையன் பாவம் ரொம்ப அடிச்சுட்டோம்'னு இப்படி என்னோட கார்ல மோதி அறை வாங்கின பசங்க ஏராளம்.” 

நவீந்தர் மூர்த்தி, சீரியல் ஆர்ட்டிஸ்ட்:

``ஒவ்வொரு முறையும் சீரியல் ஷூட் ஆரம்பிக்கிறப்போ, பூஜை போட்டு சாமி கும்புடுவாங்க. அப்போ கற்பூரம் ஏற்றி அதை எல்லாரும் தொட்டுக் கும்பிடும்போது, நானும் அதை ஒரு பேச்சுக்குத் தொட்டுக்கும்பிடுவேன். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லைங்கிற விஷயம் என்கூட வேலைபார்க்கிறவங்களுக்குக்கூடத் தெரியாது. நிறைய பொண்ணுங்ககிட்ட லவ் சொல்லி திட்டு வாங்கியிருக்கேன். நல்லா சைட் அடிப்பேன். இப்படியான லெளகீக மொமன்ட்ஸ் நிறைய இருக்கு. அதெல்லாம் உங்களுக்குச் சொன்னா... அதுவே ஒரு தனி ஆர்ட்டிக்கிளா வந்திருமே... பரவாயில்லையா!"

ஆண்ட்ரூஸ்

``நான் ஸ்கூல் படிக்கும்போதே நல்லா டான்ஸ் ஆடுவேன். ஒருதடவை அப்படித்தான் டான்ஸ் போட்டியில என்னை `லேடி கெட்டப்' போட்டு ஆடச் சொன்னாங்க (!) உங்க கேள்வி எனக்குப் புரியுது பாஸ். அது பாய்ஸ் ஸ்கூல்... ஸோ, நாங்கதான் லேடி கெட்டப்லாம் போடுவோம். அந்தத் தடவை குறவன், குறத்தி டான்ஸ் டீம்ல இருந்தேன். குறத்தியான எனக்கு ஷார்ட் ஸ்கர்ட்தான் காஸ்ட்டியூம். அதைப் போட்டுட்டு நான் ஆடும்போது விசில் பறந்துச்சு. எக்கச்சக்க கிளாப்ஸ். நானும் குதூகலமா ஆடி முடிச்சுட்டு மேடையிலிருந்து கீழ இறங்கி வந்தா... என்னோட டீச்சர், `ஏன்டா... இப்படி வேட்டியைத் தூக்கித் தூக்கி `லுங்கி டான்ஸ்' ஆடுற மாதிரி, பாவாடையைத் தூக்கித் தூக்கி ஆடுற? மொத சீட்ல உட்காந்துட்டு இருந்த கெஸ்ட் மேடம் என்னையே பார்த்துட்டிருந்தாங்க தெரியுமா? ரொம்ப அசிங்கமா போச்சுடா. இனிமேலாவது நல்லவிதமா டான்ஸ் ஆடு'ன்னு அறிவுரை சொன்னது இன்னிக்கு எந்த ஷூட்டிங் செட்ல ஆடச் சொன்னாலும் ஞாபகத்துக்கு வரும். "

``நான் அழகு சாதன பொருள்கள் அதிகம் வாங்க மாட்டேன். ஆனா, லிப்ஸ்டிக் மட்டும் அவ்வளோ பிடிக்கும். நிறைய கலெக்‌ஷன்ஸ் வேற வேற கலர்ல வெச்சிருக்கேன். என்னமோ தெரியலை, என்னால லிப்ஸ்டிக் வாங்குறதை மட்டும் குறைச்சுக்கவே முடியலை. அதுலயும் குறிப்பா `பிங்க்' கலர் என்னோட ஆல்டைம் ஃபேவரிட். ஒரே கலர் வேற வேற பேக்கிங்ல இருந்தா, எல்லாத்தையும் வாங்கிருவேன். `இந்த கலர் எல்லாமே உன்கிட்ட இருக்கே'ன்னு கேட்டா, `அது டார்க் பிங்க், இது லைட் பிங்க்'ன்னு சொல்லி என் கணவரை எப்படியாவது சமாளிச்சு வாங்கிக் கொடுக்கவெச்சுருவேன். 

கமல் - சீரியல் ஆர்ட்டிஸ்ட்

``எனக்கு சினிமாவுல நடிக்கணும்னு ரொம்ப ஆசை. `தூத்துக்குடி'ன்னு ஒரு படத்துல சின்ன சீன்ல, ஃப்ரேம் ஓரத்துல நின்னுட்டிருப்பேன். அந்தப் படத்துல நடிச்சதை இதுவரை நான் யார்கிட்டயுமே சொன்னதில்லை. அந்தப் படம் வந்ததே பாதிப் பேருக்குத் தெரியாது. இதுல நான் நடிச்சேன்னு எப்படிச் சொல்றது? இருந்தாலும் தூத்துக்குடி என்னோட ஊரு. அதனால் அந்தப் படத்துல நடிச்சதை நான் ரொம்பப் பெருமையா நினைக்கிறேன்."

அருள், சீரியல் ஆர்ட்டிஸ்ட்:

``லேட் நைட் பார்ட்டி முடிஞ்சதும், நண்பர்கள் எல்லாரையும் வீட்ல கொண்டுபோய் பத்திரமா டிராப் பண்றது எப்பவுமே என்னோட வேலையாத்தான் இருக்கும். ஏன்னா... நான் குடிக்க மாட்டேன். அப்படி ஒருநாள், நண்பர்கள் எல்லாரையும் டிராப் பண்ணப் போகும்போது, மஃப்டியில இருந்த போலீஸோடு பயங்கர தகராறு. அவங்க போலீஸ்னு தெரியாம நண்பர்கள் எல்லாரும் அவங்களைத் திட்டிட்டாங்க. சண்டை பெருசாகிடுச்சு. நானும் கோபத்துல அவங்களை அடிச்சுட்டேன். அப்புறம் எங்க எல்லாரையும் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுபோயிட்டாங்க. அப்போதான் எங்களுக்கு அவங்க போலீஸ்ங்கிற விஷயமே தெரியவந்துச்சு. மீடியா நண்பர்களை வரச் சொன்னதுக்கு அப்புறம்தான் பிரச்னை ஒருவழியா முடிஞ்சது. அதெல்லாம் ஒரு திக் திக் மொமென்ட்!"

ரியோ ராஜ்  நிகழ்ச்சித் தொகுப்பாளர்:

``நான் சன் மியூசிக்ல `கல்லூரி காலம்' ஷோ பண்ணிட்டிருந்த நேரம். அப்போ நிறைய காலேஜுக்கு நேர்ல போய் பசங்களைப் பேட்டி எடுத்து அவங்களோட திறமையை வெளிக்கொண்டு வர்றதுதான் அந்த ஷோவின் நோக்கம். அதுக்காக மதுரையிலிருந்த பிரைவேட் காலேஜுக்குப் போயிட்டிருந்தப்போ, நடு வழியில் அவங்க எனக்காக பத்தாயிரம் வாலா சரவெடியெல்லாம் வெடிச்சு மெர்சல் பண்ணிட்டாங்க. என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத அனுபவம்னா அதுதான். எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம், அந்தப் புகைமூட்டத்துல இருந்து நான் ஹீரோ மாதிரி என்ட்ரி ஆனேன் பாருங்க... அதெல்லாம் வேற லெவல் மெமரீஸ். நீங்களே சொல்லுங்க... யாருக்குக் கிடைக்கும் இந்தப் பாக்கியம்? 

தினேஷ், சீரியல் ஆர்ட்டிஸ்ட்:

``நான் எட்டாவது படிக்கும்போது வீட்ல இருந்து சென்னைக்கு ஓடிவந்துட்டேன். `சென்னையில சோழமண்டலம் ஆர்ட்டிஸ்ட் வில்லேஜ்ல இருக்கிற ஆர்ட் கேலரியைப் பார்க்கணும், எனக்கு பெர்மிஷன் கொடுங்க'ன்னு வீட்ல கேட்டேன். எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் கடைசி வரைக்கும் அவங்க விடவே இல்லை. ஸ்ரீவில்லிபுத்தூர்ல இருந்து சென்னைக்கு பஸ் பிடுச்சுப் போயிடலாம்னு முடிவுபண்ணேன். ஒருவழியா மதுரைக்கு வந்து சென்னை பஸுக்காக வெயிட் பண்ணிட்டிருந்தப்போ, ஒருத்தன் என்னோட பர்ஸை பிக்பாக்கெட் அடிச்சுட்டான். நடுராத்திரில என்ன பண்றதுன்னே தெரியாம முழிச்சுட்டிருந்த நேரத்துல, மீனாட்சி அம்மன் கோயில் பக்கத்துல இருந்த போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கிட்ட  நூறு ரூபாய் வாங்கிட்டு ஒருவழியா சென்னை வந்து சேர்ந்தேன்.

அந்த நேரம் நடுராத்திரி 12 மணி. வேற வழியில்லாம பீச்ல படுத்துத் தூங்கிட்டு, காலையில எழுந்து பெல்ஸ் ரோடு சிக்னல் வழியா சோழமண்டலம் ஆர்ட்டிஸ்ட் வில்லேஜை நோக்கிப் போயிட்டிருந்தேன். அப்போ என்னை ஒரு நூறு போலீஸ் மடக்கிப் பிடிச்சுட்டாங்க. என்னன்னு பார்த்தா, மறுநாள் காலையில சேப்பாக்கம் ஸ்டேடியத்துல இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் நடக்கப்போகுது. பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு `ஹிந்துத்துவ செளராஷ்டிரா' கட்சியினர், பிட்சில் மண்ணைத் தோண்டி பன்னி தலையை நட்டுவெச்சதுனால ஒரே கலவரம். அந்த ரோட்ல நூறு போலீஸுக்கு மேல பாதுகாப்பு. அதுல ஒரு போலீஸ் என்னைப் பிடிச்சு, `யார் நீ, எதுக்காக இங்கே வந்த?'ன்னு கேட்டார். நான் சரியா பதில் சொல்லாததுனால, D-1 போலீஸ் ஸ்டேஷன்ல என்னை உட்காரவெச்சுட்டாங்க. அதுக்கப்புறம், வீட்டுல சொல்லி என்னோட சொந்தக்காரங்க ஸ்டேஷனுக்கு வந்து என்னைக் கூட்டிட்டு போனாங்க.''