Published:Updated:

“எதையும் ஈஸியா எடுத்துக்கிற ஓவியாவை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” - ‘பிக் பாஸ்’ குறித்து ஃபாத்திமா பாபு #BigBossTamil

வே.கிருஷ்ணவேணி
“எதையும் ஈஸியா எடுத்துக்கிற ஓவியாவை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” - ‘பிக் பாஸ்’ குறித்து ஃபாத்திமா பாபு #BigBossTamil
“எதையும் ஈஸியா எடுத்துக்கிற ஓவியாவை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” - ‘பிக் பாஸ்’ குறித்து ஃபாத்திமா பாபு #BigBossTamil

'பிக் பாஸ்' நிகழ்ச்சி... மக்களிடம் மட்டுமின்றி, பல பிரபலங்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் ஒருவர், செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான ஃபாத்திமா பாபு. 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் பிரபலங்கள் மற்றும் விமர்சனங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். 

“ 'பிக் பாஸ்' நிகழ்ச்சி ஒளிபரப்பாவதற்கு முன்பே ஆர்த்தி அதில் பங்கேற்கப்போவதாக ஃபேஸ்புக்கில் பதிவுசெய்தீர்களே...'' 

“ஆமாம். நான் நடித்துக்கொண்டிருந்த ஷூட்டிங்கும், 'பிக் பாஸ்' ஹவுஸ் இருக்கும் இடமும் அருகருகே இருந்தது. தற்செயலாக கணேஷைப் பார்க்க நேர்ந்தது. அவரிடம் விசாரித்தபோது, ஆர்த்தி அதில் கலந்துகொள்வதாகச் சொன்னார். உறுதியான தகவல் என்பதால், என் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவுசெய்திருந்தேன்.'' 

“அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா?'' 

''பல வருடங்களாக டி.வியில் சினிமா, சீரியல் என எதையும் பார்ப்பதில்லை. தியேட்டர் போன்று பெரிய ஸ்கிரீனில்தான் படம் பார்ப்பேன். 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மீதுள்ள ஆர்வத்தில், நேரம் கிடைக்கும்போது செல்போனில் பார்க்கிறேன். நீங்கள் இப்போது தொடர்புகொள்வதற்கு முன்புதான், நேற்று ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைப் பார்த்தேன்.'' 

“இந்த நிகழ்ச்சியால் சமூகத்துக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை என்கிறார்களே...'' 

“அப்படிச் சொல்ல முடியாது. சமூகம் என்பதே மக்கள் இணைந்து வாழக்கூடிய விஷயம். தன் குடும்பத்தை தவிர்த்து மற்றவர்களோடு எப்படி இணைந்து வாழ்கிறார்கள் என எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்ச்சியாகத்தான் இதைப் பார்க்கிறேன். அப்படி ஒன்றாகச் சேர்ந்து வாழும்போது என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்கவேண்டி வரும்; ஒவ்வொருவருடன் எப்படி இணங்கிப்போகிறோம் என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் தெரிந்துகொள்ள முடியும், நம்மைத் திருத்திக்கொள்ளவும் முடியும். டி.வியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிப்பரப்பாகுது. அதில், உறவுகளைப் பற்றி தவறாக சித்தரிக்கிறார்கள். அதுக்காக, சீரியலைப் பார்க்காமல் இருக்காங்களா? நம்ம கைலயிலதானே ரிமோட் இருக்கு. அடுத்த சேனலை மாத்திடலாமே. பிடிக்காததைப் பார்த்துட்டு வந்து ஏன் திட்டணும்?'' 

“அப்போ இந்த நிகழ்ச்சியில் தவறு எதுவும் இல்லை என்கிறீர்களா?” 

“இன்றைக்கு ஒவ்வொருத்தர் கையிலும் செல்ஃபோன் இருக்கு. ஒரு நிமிஷத்தில் என்ன வேணுமோ அதைப் பார்த்துடலாம். 'பிக் பாஸ்' பார்த்துத்தான் கெட்டுப் போகணும்னு இல்லை. ஒரு சிலர் ஓவியா அணிந்துவரும் டிரெஸ் பற்றி கமெண்ட் பண்றாங்க. அவங்களுக்கு அது கம்ஃபர்டெபிளா இருக்கு. அது அவங்க உரிமையும்கூட. சில நாட்களுக்கு முன்பு அதே நிகழ்ச்சியில் ஓவியா தோப்புக்கரணம் போடவேண்டியிருந்தது. அப்போ, 'இந்த டிரெஸ் சரியாயிருக்காது'னு சொல்லி பேண்ட் போட்டுட்டு வந்தாங்க. அப்படி ஒவ்வொருத்தருக்கும் தன்னோட தனிப்பட்ட எல்லை பத்தி தெரியும். மற்றவர்கள் அதைச் சொல்லிக்கொடுக்க தேவையில்லை. அணிகிற ஆடையில் அல்ல கலாச்சாரம். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எத்தனை பேர் அந்த நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு பாடிப் பார்த்திருப்போம். அந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் கோடிக்கணக்கான மக்களிடம் அது சென்றடைந்ததே என பாசிட்டிவா பாருங்க.'' 

'' 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் உங்களுக்குப் பிடித்த நபர்கள் பற்றி...'' 

''எனக்கு ஓவியாவை ரொம்பப் பிடிக்கும். லவ்லியான, ஆனந்தமானப் பொண்ணு. ஆரவ்விடம் லவ் புரொப்போஸ் செய்யும்போதும் சரி, ஆரவிற்கு விருப்பமில்லை என்றதும் ஒதுங்கிக்கொண்டதும் சரி, மற்ற பெண்கள் ஆரவிடம் நெருக்கம் காட்டும்போதும் அதை ஸ்போட்டிவாக எடுத்துக்கொண்டதும் எனக்குப் பிடித்திருந்தது. கஞ்சா கருப்பை 'ஷட்டப்'னு சொல்லிட்டு பிறகு மன்னிப்பு கேட்டுப் பேசியதும், அடிக்கடி டான்ஸ் ஆடி ஜாலியாக இருக்கிறதும், எந்த விஷயத்தையும் அத்தனை எளிதா, ஈஸியா, ஸ்போட்டிவா எடுத்துக்கிறதும் அருமை. அந்த டீம்லயே செம்ம அழகாகத் தெரியுறாங்க. அதேபோல 'கிளீனிங்' பற்றி வலியுறுத்திய நமீதாவையும் பிடிக்கும். அதேபோல கணேஷ் வெங்கட்ராமையும் ரொம்பப் பிடிக்கும் '' 

“இந்த நிகழ்ச்சியில் உங்களைப் பாதித்த விஷயம்...'' 

''பரணியை வெளியில் போகவெச்சது. பரணி தப்பிக்க நினைச்சு சுவர் ஏறியபோது ஒருத்தர்கூட காப்பாற்ற நினைக்கலையே ஏன்... அவருக்கு ஏதாவது ஆகியிருந்தா அந்தப் பழி அவங்களையும் சேர்ந்திருக்குமே. ஒருத்தன் பொய்யானவனாகவே இருக்கட்டும். அதுக்காக, ஜந்துவைப் பார்க்கிற மாதிரியா பார்க்கிறது... வாழவே முடியாத அளவுக்கா அவர் இருந்தார்... அதேபோல, 'ஹைஜீனிக்'னு அடிக்கடி சொல்லிட்டிருந்த நமீதா, யூரினரி இன்ஃபெக்‌ஷனால் உடம்பு முடியாமல் படுத்திருந்தபோது, யாரும் அவரை கவனிக்கலை. இது என்ன மாதிரியான மனநிலைனு தெரியலை.'' 

“நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கமலை விமர்சிப்பது பற்றி என்ன நினைக்கிறீங்க?'' 

''கலாசாரத்தைக் கெடுப்பதாக கமலை எப்படி குற்றம் சாட்ட முடியும்? அந்த நிகழ்ச்சியில் ஒருவர் செய்யும் தவறை ஆயிரம் பேர் பார்த்து தன்னைத் திருத்தியிருக்கலாம். காயத்ரி சொன்ன சில வார்த்தைகள் குறித்தும் கமல் பேசியிருக்கலாம். அது எடிட்டிங்ல போயிருக்கலாம். எல்லாத்துக்கும் கமலை எதிர்த்துட்டு நின்னா எப்படி? கமல் என்ன பண்ணாலும் குற்றமென்றால் அது நியாயமா? அமைதியாகப் போகிறார் என்பதற்காக அவரைச் சீண்டுவது ரொம்ப தவறு.''