Published:Updated:

`மிமிக்ரி கலைஞர் டு காமெடியன்’ - முடிவுக்கு வந்த 20 ஆண்டுக்கால `வேணு மாதவ்'வின் கலைப் பயணம்!

Venu Madhav
Venu Madhav

பிரபல தெலுங்கு நடிகர் வேணு மாதவ் உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் தெலுங்கு சினிமாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தெலுங்கு சினிமாவின் பிரபல காமெடி நடிகராக வலம்வந்தவர் நடிகர் வேணு மாதவ் (39 வயது). தெலுங்கில் முன்னணி காமெடி நடிகர் என்றால் அது பிரம்மானந்த்தைக் குறிப்பிடலாம். அவருக்குப் பிறகு அதிக படங்களில் நடித்தவர் அதிகளவு ரசிகர்களை கொண்டவர் என்றால் அது வேணு மாதவ்தான். தனது 19 வயதில் சினிமாத் துறைக்கு வந்தவர். 1990 காலகட்டங்களில் மிமிக்கிரி ஆர்ட்டிஸ்டாக இருந்து அதன்மூலம் சினிமாத் துறைக்குள் நுழைந்தார். கடந்த 1996-ல் வெளியான சம்ப்ரதாயம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான வேணு மாதவ் இதுவரை 170-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

Venu Madhav
Venu Madhav

தெலுங்கின் மாஸ் ஹீரோக்கள் எனப் புகழப்படும் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, பவன் கல்யாண், மகேஷ் பாபு, ஜூனியர் என்.டிஆர், நிதின், அல்லுர் அர்ஜுன், ரவிதேஜா என இரண்டு தலைமுறை முன்னணி நடிகர்களின் படங்களில் தவறாமல் இடம்பிடித்துவிடுவார் வேணு. அந்த அளவுக்கு அவரின் காமெடிக்கு ரசிகர்களின் மத்தியில் மவுசு இருந்தது. இதுபோக ஹங்காமா, பூகைலாஸ், பிரேமாபிஷேகம் போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளவர் தமிழில் என்னவளே, காதல் சுகமானது போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

`சிட்டி' ஆக்‌ஷன், `காமெடி' வடிவேலு, `லவ் யூ' மாதவன்,  தமிழ் சினிமாவின் ரயில் சிநேகங்கள்!

துரத்திய நோய்த் தாக்குதல்!

மிமிக்கிரி கலைஞராக திரைத்துறைக்குள் நுழைந்த சம்ப்ரதாயம் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்தாலும் அடுத்தடுத்த படங்களில் தனது நகைச்சுவை திறனால் ரசிகர்களை ஈர்த்தார். குறிப்பாக ஆரம்ப காலகட்டங்களில் தான் நடித்த மாஸ்டர், சுஸ்வகதம், தோலி பிரேமா மற்றும் தமுடு போன்ற படங்களில் தனது தனிப்பட்ட நகைச்சுவையால் ரசிகர்களின் நெஞ்சில் குடியேறினார். இந்தப் படங்களுக்குப் பிறகு அவர் சினிமா வாழ்வு உச்சத்தில் சென்றது.

Venu Madhav
Venu Madhav

1996ல் திரைத்துறைக்குள் வந்தாலும் இளம் தலைமுறை நடிகர்களுடன் அதிகமாக சேர்ந்து நடித்தார். மகேஷ் பாபு, பிரபாஸ், அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர். என அவர் இளந்தலைமுறை நடிகர்களின் படங்களில் நடித்துவந்தார். சிரஞ்சீவியுடன் ஷங்கர் தாதா எம்.பி.பி.எஸ், அந்தரிவாடு, மற்றும் ஜெய் சிரஞ்சீவா, ஜூனியர் என்.டி.ஆரின் பிருந்தாவனம், பிரபாஸின் சத்ரபதி, ரவி தேஜாவின் கிக் உள்ளிட்ட பல படங்களில் இவரின் காமெடி ஒர்க் அவுட் ஆக தெலுங்கு சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம்வந்தார்.

`ஸ்டார் ஹோட்டலில் விருந்து; மெட்ரோ ரயிலில் பயணம்!'- சென்னை புறப்பட்ட பழங்குடியின குழந்தைகள் குஷி

இதனால் வருடத்துக்கு 8 படங்களுக்குக் குறையாமல் நடித்துக்கொண்டே இருந்தார். ``ஒரு நாளில் ஆறு முதல் ஏழு ஷிஃப்ட் கணக்கில் படங்களில் நடித்துவந்தேன். அதனால் என்னால் சரியாகக்கூட சாப்பிட முடியவில்லை. அதுவே எனது உடல்நலனை பாதித்துவிட்டது'' என ஒருமுறை வேணு மாதவ்வே தனது வேலைப்பளுவை பற்றித் தெரிவித்துள்ளார். ஆம்.. அவர் சொன்னது உண்மைதான். தொடர்ச்சியான வேலைப்பளுவால் தனது உடல்நிலையைக் கவனிக்கத் தவறினார் வேணு. இதனால் சமீபகாலமாக கடுமையான நோய்த் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டிருந்தார். நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த அவரை நீரிழிவு, ரத்தக் கொதிப்பு நோய்களும் விட்டுவைக்கவில்லை.

Venu Madhav
Venu Madhav

இதனால் 2016ல் கடைசியாக ஸ்டூடன்ட் கேங் படத்தில் நடித்தவர் அடுத்து வேறு எந்தப் படங்களிலும் கமிட்டாகவில்லை. வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுவந்தவருக்கு நேற்று தீவிர உடல்நலக்குறைவு ஏற்படவே, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் போகவே இன்று மதியம் உயிரிழந்துள்ளார். காமெடி நடிகராக இருந்தாலும் எதையும் துணிச்சலாகப் பேசுபவர் வேணு மாதவ். ``எனக்கு ஈகோ அதிகம், கோபம் அதிகம், என்னை யாரும் நிர்பந்திக்கவோ, அவமானப்படுத்தவோ முடியாது. எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ நான் மட்டுமே.

சினிமாவில் வாய்ப்பு வரவில்லையென்றாலும் இதே மனநிலையில்தான் இருப்பேன். என் பி.காம் படிப்புக்கு எங்காவது வேலை செய்து சம்பாதிப்பேன்'' எனப் பல மேடைகளில் பேசியுள்ளார். ஒருகட்டத்தில் சில படங்களில் நடிக்க மறுத்தார் வேணு. அதற்கு சில இயக்குநர்கள் அவரை வசைபாட, ``நான் நடித்த சில படங்களை, என் பிள்ளைகளுடனேயே பார்க்க முடியவில்லை. காரணம் நகைச்சுவை என்ற பெயரில் ஆபாசம் கொண்ட வேடங்கள். அதனால்தான் இனி ஆபாச நகைச்சுவை கொண்ட கதாபாத்திரங்களில் நடிக்கப் போவதில்லை'' எனக் கூறி வசைபாடிய இயக்குநர்களை வாயடைக்க வைத்தார்.

Venu Madhav
Venu Madhav

அதேநேரம் நன்றி மறக்காதவர் என்று பெரும்பாலான தயாரிப்பாளர்களால் புகழப்பட்டவர் என்றும் வேணுவைக் கூறலாம். அதற்கு உதாரணம். தனக்கு முதல் சினிமா வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர் அச்சி ரெட்டி, இயக்குநர் கிருஷ்ணா ரெட்டி ஆகியோரின் பெயர்களைச் சேர்த்துத் தான் கட்டிய அனைத்து வீடுகளுக்கும் 'அச்சி வச்சின கிருஷ்ணா நிலையம்' என்று வைத்து தனது நன்றிக் கடனைக் கூறியுள்ளார். அவரின் இழப்பு தெலுங்கு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இருந்த காமெடி புயல் முடிவுக்கு வந்துள்ளது எனப் பல்வேறு நடிகர்கள் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

RIP வேணு மாதவ் காரு!

அடுத்த கட்டுரைக்கு