Published:Updated:

“தமிழ்நாட்டுப் பாராட்டுகள் உற்சாகமளித்தன!”

ஷியாம் சிங்கா ராய் படத்தில்
பிரீமியம் ஸ்டோரி
ஷியாம் சிங்கா ராய் படத்தில்

காதலின் உன்னதம் காலங்கள் கடந்தது. அதனால் மறுஜென்மக் காதல் கதையை படமாக்க நினைத்தேன்.

“தமிழ்நாட்டுப் பாராட்டுகள் உற்சாகமளித்தன!”

காதலின் உன்னதம் காலங்கள் கடந்தது. அதனால் மறுஜென்மக் காதல் கதையை படமாக்க நினைத்தேன்.

Published:Updated:
ஷியாம் சிங்கா ராய் படத்தில்
பிரீமியம் ஸ்டோரி
ஷியாம் சிங்கா ராய் படத்தில்

ஷியாம் சிங்கா ராய்... நானி நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான டோலிவுட் சினிமா. தமிழிலும் ஓ.டி.டி-யில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட இப்படத்துக்கு எக்கச்சக்க வரவேற்பு. வழக்கமாக மார்வல் ஹீரோக்களுக்கே சவால் விடும் புழுதி பறக்கும் மாஸ் மசாலாப் படங்களைப் பார்த்த ரசிகர்களுக்கு சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் தேவதாசி முறைக்கு எதிராகவும் குரல் கொடுக்கும் ஒரு புரட்சிகர எழுத்தாளராக ஹீரோவைக் காட்டிய விதம் புருவம் உயர்த்த வைத்தது. படத்தின் இயக்குநர் ராகுல் சாங்கிரித்யனிடம் பேசினேன். மிகத் தெளிந்த நீரோடை போலப் பேசினார்.

 ராகுல் சாங்கிரித்யன்
ராகுல் சாங்கிரித்யன்

“மறு ஜென்மம் பற்றிய கதைதான் இந்த ஷியாம் சிங்கா ராய். புரட்சிகர எழுத்தாளரின் வாழ்க்கைக்கான இன்ஸ்பிரேஷன் எங்கிருந்து வந்தது?”

“காதலின் உன்னதம் காலங்கள் கடந்தது. அதனால் மறுஜென்மக் காதல் கதையை படமாக்க நினைத்தேன். கதாசிரியர் சத்யதேவ் `பழைமையான நிலப்பரப்பும் கலாசாரமும் கொண்ட ஒரு பின்னணியில் கதை சொல்லலாம்’ என்று யோசனை சொன்னார். 50 வருடத்துக்கு முந்தைய காலகட்டத்தில் கதாநாயகனை ஓர் எழுத்தாளராக கொல்கத்தா பின்னணியில் நாங்கள் எழுதியபோதே புரட்சிகர கம்யூனிசக் கோட்பாடுகளைக் கொண்டவராகக் கதாநாயகன் உருவாகிவிட்டார். ஏனென்றால், கதை நிகழும் 1970 காலகட்டத்தில் வங்கத்தில் நக்சல்பாரி கிளர்ச்சி முக்கியப் பங்கு வகித்தது. அதுபற்றி நிறைய வாசித்து கதைக்குத் தேவையானதை மட்டும் உள்ளே கொண்டு வந்தோம்.”

“அம்பேத்கர் பற்றிய வசனம், சாதிய ஏற்றத்தாழ்வுகளைக் கடுமையாகச் சாடும் காட்சிகள் வைத்திருப்பது எதனால்..?”

“சமூகத்தில் இன்றுவரை தொடரும் புரையோடிப்போன சாதியப் பிரச்னையைப் பேச அம்பேத்கர் தேவைப்பட்டார். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக ஷியாம் சிங்கா ராய் பேசும், ‘தண்ணி கீழதான் இருக்கு. தரையும் கீழதான் இருக்கு. எந்த நீர்த்துளி மேல எந்த சாதின்னு எழுதியிருக்கு? அவனும் இதே ஊருலதான் பொறந்தான். இதே ஊருலதான் வளர்ந்தான். இதே ஊருலதான் மண் ஆவான். அந்த மண்ணுல விளைஞ்சதைத்தான் உன் புள்ளைங்களும் தின்னுவாங்க!’- இந்த வசனத்துக்கு அதிக பாராட்டுகள் வருவது ரொம்பவே மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு சாதிய ஒழிப்பில் காட்டிய முன்னெடுப்பும் தேவதாசி முறையை ஒழித்ததிலும் முன்னோடி மாநிலம் என்பதை நானறிவேன்!”

“இந்தப் படத்துக்காக நிறைய தலைவர்களைப் பற்றியும் வரலாற்றுச் சம்பவங்களையும் தேடித்தேடி வாசித்தீர்களா?”

“பெண்ணியத்துக்கு ஆதரவாக தீவிரமாகப் பேசிய பெரியார், தெலுங்கு எழுத்தாளர்  போன்றோர்களை, முன்பே என் தந்தை எனக்கு அறிமுகப்படுத்தியிருந்தார். புத்தக வாசிப்புப் பழக்கமிருந்ததால் தமிழகத்தில் தேவதாசி முறையை ஒழிக்கப் போராடிய மூவலூர் ராமாமிர்தம், முத்துலெட்சுமி ரெட்டி போன்ற புரட்சிப் பெண்களைப் பற்றியும் வாசித்தறிந்திருக்கிறேன். இது ஒரு லவ் ஸ்டோரி என்பதால் கதையோட்டத்துக்குத் தேவையானதை மட்டும் கொடுத்திருக்கிறேன். சினிமாவும் இலக்கியம் போலத்தான். பொறுப்புணர்வோடு கதை சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். அதே சமயத்தில் நிறைய சித்தாத்தங்களையும் சம்பவங்களையும் ஒரே படத்தில் பேசிப் பார்வையாளர்களை மிரட்சியடைய வைக்க எண்ணமில்லை.”

“தமிழ்நாட்டுப் பாராட்டுகள் உற்சாகமளித்தன!”

“இந்த ஸ்டோரிக்கு நானியும் சாய் பல்லவியும்தான் ஃபர்ஸ்ட் சாய்ஸா?”

“ஆமாம்... கதை எழுதும்போதே அவர்கள் வந்து போனார்கள். இருவருமே அந்தப் பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருந்தார்கள். ஒருவேளை நானி கால்ஷீட் கிடைக்கலைன்னா வேறு ஒருத்தரை வைத்துப் பண்ணியிருக்கும் சூழல் அமைஞ்சிருக்கலாம். ஆனால், பாரம்பர்ய நடனம் தெரிந்த ஒரு பெண்ணாக சாய் பல்லவியை விட்டால் அந்த ரோஸி பாத்திரத்துக்கு என்னால் யாரையும் யோசிக்கவே முடியவில்லை. படத்தின் க்ளைமாக்ஸைத்தான் முதலில் எடுத்தோம். ப்ராஸ்த்தெடிக் மேக்கப்பில் அவரும் நானியும் சந்திக்கும் அந்தக் காட்சியில் நடித்த விதத்தைப் பார்த்து சிலிர்ப்பாய் இருந்தது. இந்தப் படம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்பதை அப்போதே உணர முடிந்தது!”

“படமாக்கும்போது சந்தித்த சவால்கள் என்ன?”

“ஃப்ளாஷ்பேக் போர்ஷன் நீளமென்பதால் நம்பகத்தன்மையான லொகேஷன்களில் படமாக்க புரொடக்‌ஷன் டிஸைன் டீம் இடம் பார்த்தார்கள். கொல்கத்தா இன்னமும் பழைமையைத் தாங்கிய நகரம் என்பதால் அந்த வேலை கொஞ்சம் இலகுவானது. ஆனால் கொரோனா லாக்டௌனில் ஷூட்டிங் தாமதமானது. நடுவில் 6.5 கோடி மதிப்பில் போடப்பட்ட கோயில் செட் புயல் காற்றில் சேதமானதால் மீண்டும் அதை அதே செலவில் உருவாக்கினோம். இப்படி நிறைய இருக்கிறது. அது எல்லா இயக்குநர்களும் சந்திக்கும் சவால்கள்தான். நல்ல டீம் அமைந்தது என் அதிர்ஷ்டம்!”

“முதல் படம் ‘தி எண்ட்’ ஒரு ஹாரர், இரண்டாவது படம் ‘டாக்ஸிவாலா’, ஃபேண்டஸி த்ரில்லர், மூன்றாவது படம் ஷியாம் சிங்கா ராய் ‘மறுபிறவிக் காதல் கதை’... ஆக நார்மலான கதைகள் எப்போது இயக்குவதாக உத்தேசம்?”

“அடுத்த படம் டைம் டிராவலை மையமாக வைத்து இயக்கப்போகிறேன். என்ன செய்வது, சினிமாவை நான் சினிமா பார்த்துதான் கற்றுக்கொண்டேன். ஷியாம் சிங்கா ராய் படத்தில் வரும் வாசு கேரக்டர் அப்படியே நான்தான். இன்ஜினீயரிங் படித்து சாஃப்ட்வேர் இன்ஜினீயர் வேலையை விட்டுவிட்டு குறும்படம் எடுத்து அப்படியே படமெடுக்க வந்தவன் தான். அந்த வாசு கேரக்டரில் நானி எப்படியெல்லாம் குறும்படமெடுக்கச் சிரமப்பட்டாரோ அந்தச் சிக்கல்களை நானும் சந்தித்திருக்கிறேன். எல்லாமே சினிமாக்கள் பார்த்து நானே கற்றுக்கொண்டவைதான்.”

“தமிழ்நாட்டுப் பாராட்டுகள் உற்சாகமளித்தன!”

“உங்கள் பெயரில் ஒரு பெரிய எழுத்தாளர் இருந்திருக்கிறார். இது உங்கள் நிஜப்பெயரா?”

“அப்பா பிரசாத் எனக்கு புத்தகங்கள்மீது காதல் வரக் காரணமாக இருந்தவர். அவர் ஒரு சமூகச் செயற்பாட்டாளர். மிகத் தேர்ந்த எழுத்துகளை இளம் வயதிலேயே என்னை வாசிக்கப் பழக்கியவர். அதனால் தான் வங்கத்து எழுத்தாளர் ராகுல் சாங்கிரித்யாயன் பெயரை எனக்கு வைத்தார்.”

“படத்துக்கு எதிர்ப்புகள், விமர்சனங்கள் வந்தனவா?”

“வராமலா இருக்கும்? என்னை இந்து மதத்துக்கு எதிரானவனா சிலர் மோசமா சித்திரிக்கக்கூடச் செஞ்சாங்க. நான் தீவிர கம்யூனிஸ்ட்னு விமர்சிச்சாங்க. ஆனா, அதையெல்லாம்விடப் பாராட்டுகள் அதிகம் குவியுது. தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும்னு சத்தியமா நான் நினைக்கலை. அது எனக்குப் பெரிய உற்சாகமளித்தது. அதனால் அந்த நெகட்டிவ் விமர்சனங்களை மனசில் ஏத்தக்கலை!”

“தமிழ்நாட்டுப் பாராட்டுகள் உற்சாகமளித்தன!”

“படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைக்க வைக்க முயற்சி செய்தீர்களாமே?”

“ஆமாம். அந்தச் சமயம் சார் அவருடைய சொந்த புராஜெக்ட்டில் பிஸியாக இருந்தார். பரவாயில்லை, ‘மகாநடி’ படத்தின் இசையமைப்பாளர் மிக்கி ஜே.மேயர் இந்தப்படத்துக்கு மிகப் பிரமாதமான இசையை வழங்கியிருந்தார்.”

“தமிழ் சினிமா இயக்கும் எண்ணம் இருக்கிறதா? இயக்கினால் யார் உங்கள் சாய்ஸாக இருப்பார்கள்?”

“நான் படம் இயக்க இருக்கும் ஒரே சிக்கல், நான் அந்த மண்ணில் வளரவில்லை, மொழி குறித்த புரிதல் இல்லை என்பது மட்டும்தான். தமிழ்நாடு பற்றிய பிம்பம் நான் பார்த்த சினிமாக்கள் வழி கிடைத்தது மட்டும்தான். அது போதாது என்று நினைக்கிறேன். ஒருவேளை அப்படி இயக்கும் வாய்ப்பு அமைந்தால் இயக்குவேன். ஆனால், அதற்கு முன்பு மொழியைக் கற்றுக்கொள்வேன். தமிழ் சினிமாவில் நிறைய பேரைப் பிடிக்கும். அது நீண்ட பட்டியல். சூர்யா, விஜய் சேதுபதியை இன்னும் மனசுக்கு நெருக்கமாகப் பிடிக்கும்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism