Published:Updated:

தலைவி - சினிமா விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு

திராவிட அரசியல் காலத்தை இக்காலத்து இளைஞர்களுக்குக் கொண்டுசெல்லும் விஜய்யின் முயற்சி பாராட்டுக்குரியதுதான்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையின் ஒரு பாதியைப் பேசும் படமே ‘தலைவி.’

ஜெயாவாகக் கங்கனா ரணாவத். பதின்பருவத்து அம்மு தொடங்கி நாற்பதுகளின் நரை சுமந்து சட்டமன்றம் செல்லும் தலைவி வரையிலான நான்கு தசாப்த பயணத்தை வெகு எளிதாகத் தோளில் சுமந்து அசரடிக்கிறார். உடல்மொழி தொடங்கி உணர்ச்சிகள் வரை இயன்றளவிற்கு ஜெயலலிதாவை நம் முன் கொண்டுவர முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஆனால் கொஞ்சமும் பொருந்தாத வசன உச்சரிப்புகள் பெரிய உறுத்தல்.

எம்.ஜே.ஆராக அரவிந்த்சாமி. ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தின் கனம் உணர்ந்து உழைத்திருக்கும் அவரின் மெனக்கெடல் பாராட்டுக்குரியது. ஆனால் சில காட்சிகளில் அவரின் குரல் அவரை அரவிந்த்சாமியாகவே உருவகப்படுத்துவதுதான் சிக்கல். கருணாவாக நடித்திருக்கும் நாசர் இயல்பான நடிப்பில் கவர்கிறார். படம் நெடுக வரும் கதாபாத்திரம் ஆர்.என்.வீ. நிஜத்தில் எம்.ஜி.ஆரையும் அ.தி.மு.கவையும் நகர்த்திச் சென்றதைப்போலவே திரையிலும் அடுத்தடுத்து கதையை நகர்த்திச் செல்வது ஆர்.என்.வீதான். கங்கனாவிற்கு இணையாகத் திரையில் மிளிர்கிறார் சமுத்திரக்கனி.

தலைவி - சினிமா விமர்சனம்

தத்ரூபமாய் அந்தக்கால சினிமா செட் தொடங்கி போயஸ் கார்டன் பங்களா வரை செதுக்கியிருக்கும் ராமகிருஷ்ணா - மோனிகா நிகோத்ரே இணையின் கலை ஆக்கம், கறுப்பு வெள்ளைக் காலத்திலும் வண்ணங்கள் தீட்டும் நீத்தா உல்லாவின் ஆடை வடிவமைப்பு, தமிழ்சினிமாவின் பிரதான பிதாமகர்களைத் திரையில் அப்படியே நிறுத்தும் பட்டணம் ரஷீதின் ஒப்பனை - இவை அத்தனையையும் கலை நேர்த்தியோடு கேமராவில் அடக்கி நமக்குக் கடத்திய விஷால் விட்டல் என ஒவ்வொரு துறையிலும் தங்களின் தேர்ந்த பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள் இக்கலைஞர்கள்.

ஜி.வி பிரகாஷின் இசை ஏமாற்றம். விஜயேந்திர பிரசாத்தின் கதையில் வழக்கமாய் இருக்கும் கமர்ஷியல் தன்மை இதிலும் நன்றாகவே எடுபடுகிறது. அதுவே படத்தை ஓரளவிற்கு ரசிக்கவும் வைக்கிறது. ஆனால் கதை 1991-ல் முடிந்துவிடுவதால் அவரின் அரசியல் வாழ்க்கையையும் சரி, பர்சனல் பக்கங்களையும் சரி, முழுமையாகப் பேசவில்லை என்கிற எண்ணமே எழுகிறது.

தலைவி - சினிமா விமர்சனம்

திராவிட அரசியல் காலத்தை இக்காலத்து இளைஞர்களுக்குக் கொண்டுசெல்லும் விஜய்யின் முயற்சி பாராட்டுக்குரியதுதான். ஆனால் வாழ்க்கை வரலாற்றுப் படங்களுக்கே உரிய அதீத ஹீரோயிசத் தன்மை, அரசியல்படமான இதிலும் இருப்பதுதான் பிரச்னை.

பேச நினைத்த வரலாறை சமரசமில்லாமல் முழுமையாகப் பேசியிருந்தால் ‘தலைவி’யும் இன்னமும் அதிகம் பேசப்பட்டிருப்பார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு