Published:Updated:

சிடி சினிமா, தங்கம் தியேட்டர், மீனாட்சி பாரடைஸ்... தூங்காநகர் மதுரையின் அழிந்த அடையாளங்கள்! #MaduraiTheatres

மதுரையில் பிரபலமாக, மதுரையின் அடையாளமாகவே இருந்த பல திரையரங்குகள் தற்போது காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன.

சி டி சினிமா திரையரங்கம்
சி டி சினிமா திரையரங்கம்

தூங்கா நகரம் மட்டுமல்ல சினிமாவை விட்டு நீங்கா நகரம் என்றும் மதுரையைச் சொல்லலாம். சங்க காலம் முதற்கொண்டு இசை, நடனம், கூத்து என்று கொண்டாடி மகிழ்பவர்கள் மதுரை மக்கள். அதன் நீட்சியாக, திரைப்படங்களைக் குடும்பத்துடன் பார்ப்பதை திருப்பணியாக கொண்டிருந்தவர்கள்.

மதுரை
மதுரை

அது மட்டுமல்லாமல், அறிமுகமாகும் நடிகர் - நடிகைகள், வில்லன்கள், துணை நடிகர்கள் எனப் பாராபட்சமில்லாமல் திரைக்கலைஞர்கள் அனைவருக்கும் முதல் ஆளாக ரசிகர் மன்றத்தைத் தொடங்கி விடுவார்கள். திரைப்படம் வெளியாகும் தினத்தைத் திருவிழாபோலக் கொண்டாடுவார்கள்.

இப்போதும் சிவாஜி சண்முகம், எம்.ஜி.ஆர் கண்ணன், ரஜினி ரவி, கமல் சேது என்று பெயர் மாற்றிக்கொண்ட ரசிகர்களை இங்கு காணலாம். ஆனாலும், இப்படியெல்லாம் இருந்தது ஒரு காலம் என்று சொல்லும்படி ஆகிவிட்டது. ஆம், மதுரையில் பிரபலமாக, மதுரையின் அடையாளமாக இருந்த பல திரையரங்குகள் தற்போது காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன.

தொழில்நுட்ப வளர்ச்சியால் தொலைக்காட்சி வருகை, சேனல்களின் பெருக்கம்... அது மட்டுமல்லாமல், அலைபேசி வழியாக சினிமா இருக்கும் இடத்துக்கே வந்துவிட்டதால், கடந்த சில வருடங்களாகத் திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்க்கும் பழக்கம் மதுரை மக்களிடம் குறைய ஆரம்பித்தது. அதன் விளைவால் மதுரைக்கே அடையாளமாகத் திகழ்ந்த பல திரையரங்குகள் மூடப்பட்டன. அதோடு இல்லாமல், அத்திரையரங்குகள் இருந்த இடம் தெரியாமல் இடிக்கப்பட்டு, அங்கு வேறு வகையான வர்த்தக நிறுவனங்கள் முளைத்து நிற்கின்றன.

தங்கம் சினிமாஸ்
தங்கம் சினிமாஸ்

ஆசியாவிலயே மிகப்பெரியதாக விளங்கியது, 'தங்கம்' திரையரங்கம். ஒரு காட்சிக்கு 1,500 பேர் அமர்ந்து படம் பார்க்கலாம். இந்தத் திரையரங்கில் 25 நாள்கள் படம் ஓடினாலே 100 நாள்கள் ஓடியதுபோல என்று கணக்கிடுவார்கள். இதே திரையரங்கில் சில படங்கள் 100 நாள்கள் ஓடி பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளன.

இப்படி மதுரை மக்களுக்கு மட்டுமல்லாமல், தமிழகத்துக்கே பெருமை சேர்த்த இத்திரையரங்கம் இப்போது இல்லை. அந்த இடத்தில் பிரபல துணிக்கடை ஒன்று எழுந்துள்ளது. ஆனாலும், அந்த லேண்ட் மார்க்கை மக்கள் மறந்துவிடக்கூடாது என்பதால், தங்கம் என்ற பெயரில் நகைக்கடை ஒன்றையும் அருகில் வைத்து பெருமை சேர்த்துள்ளார்கள்.

இதேபோல் நெல்பேட்டை அருகே மிகவும் பழைமையான திரையரங்கமான 'சிந்தாமணி' இருந்த இடத்தில் இப்போது பிரபல நிறுவனம் ஒன்றின் துணிக்கடை திறக்கப்பட்டுள்ளது.

சிந்தாமணி தியேட்டர்
சிந்தாமணி தியேட்டர்
சி டி சினிமா திரையரங்கம்
சி டி சினிமா திரையரங்கம்

மதுரையில் 1930-ல் கட்டப்பட்ட சிடி சினிமா திரையரங்கில் 'சிந்தாமணி' என்ற திரைப்படம் மூன்று வருடங்கள் ஓடி சாதனை படைத்ததால், அதில் வந்த வருமானத்தில் கட்டப்பட்டதுதான், 'சிந்தாமணி' திரையரங்கம்.

அவ்வளவு பெருமை வாய்ந்த இத்திரையரங்கில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெள்ளி விழா கண்டிருக்கிறது. கால மாற்றத்தால் கூட்டம் குறையவே, திரையரங்கு மூடப்பட்டு இப்போது அங்கு பிரமாண்ட ஜவுளிக்கடை எழுந்து நிற்கிறது. இத்திரையரங்கம் கட்ட காரணமான 'சிடி சினிமா' ஜவுளிக்கடை குடோனாக மாறிவிட்டது.

கரக்காட்டக்காரன்
கரக்காட்டக்காரன்

ராமராஜன் நடித்த 'கரகாட்டக்காரன்' ஒரு வருடம் ஓடிய 'நடனா சினி காம்ப்ளக்ஸ்'ஸை ராமராஜனே விலைக்கு வாங்கியதாக அப்போது சொல்லப்பட்டது.

தற்போது அந்தத் திரையரங்கம் பார்க்கிங் ஏரியாவாக காட்சியளிக்கிறது. இதுபோல், புதூரில் பிரபலமாக இருந்த 'லட்சுமி' திரையரங்கம் அப்பார்ட்மென்ட்டாக எழுந்து நிற்கிறது. முனிச்சாலை சந்திப்பில் கம்பீரமாகக் காட்சியளித்த 'தினமணி' திரையரங்கம் மைதானமாக மாறிவிட்டது. 'சந்திரா டாக்கீஸ்', 'சாந்தி', 'தேவி திரையரங்கம்' ஆகியவை வர்த்தக நிறுவனங்களாக மாறிவிட்டன.

பார்க்கிங்காக காட்சியளிக்கும் நடனா திரையரங்க வளாகம்
பார்க்கிங்காக காட்சியளிக்கும் நடனா திரையரங்க வளாகம்

பல படங்களை வெற்றிப் படங்களாக்கிய 'மீனாட்சி', 'மீனாட்சி பாரடைஸ்' திரையரங்குகளை நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக அறநிலையத்துறை எடுத்துக்கொண்டது.

முக்கியமான இத்திரையரங்குகள் காணாமல்போன வருத்தம் மதுரை மக்களிடம் பேசும்போது வெளிப்படுகிறது.