Published:Updated:

தி கிரேட் இந்தியன் கிச்சன்... இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்குத் தொடரும்?

- இயக்குநர் செழியன்

பிரீமியம் ஸ்டோரி

`The Great Indian Kitchen' என்ற தலைப்பே படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத் தைத் தூண்டுகிறது. ரொம்ப எளிமையான, எல்லாக் குடும்பங்களிலும் நிகழ்கிற, நம் அம்மாக்களுக்கும் அக்காக்களுக்கும் நடந்து கொண்டிருக்கும் விஷயங்களை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ஜோ பேபி.

படத்தில் வசனங்கள் குறைவு. அதற்குப் பதிலாக கிச்சன் தொடர்பான ஒலிகளை அழகாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கதையில் நான் கவனித்த இன்னொரு நுட்பமான விஷயம், யாருக்கும் பெயர்கள் இருந்ததாக நினைவில்லை. படத்தின் நாயகி சமைத்துக்கொண்டிருப்பாள், அவளின் கணவர் யோகா செய்துகொண்டிருப்பார். மாமனார் சாப்பிடுவார், தூங்குவார், சாப்பிடுவார், தூங்குவார்... ஒரு குடும்பத்தில் ஆண்கள் சாப்பிடுகிறார்கள், சாப்பாட்டைக் குறை சொல்கிறார்கள், அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்கிறார்கள், சாப்பிட்டு வேலைக்குப் போய்விடுகிறார்கள். பெண்ணின் தேவைகள் மட்டும் நிறைவேறுவதில்லை. சமையலறையில் ஒழுகிக்கொண்டிருக்கும் குழாயை சரிசெய்ய பிளம்பர் கேட்கிறாள். அதுகூட படம் முடியும்வரை நிறைவேறவில்லை. டான்ஸ் டீச்சராக வேண்டும் என்ற அவளது ஆசையும் மறுக்கப்படுகிறது. கணவனுடன் நெருக்கமாக இருக்கும் தருணங்களிலும் அவளின் சுய விருப்பங்கள் நிறைவேற்றப்படவில்லை. அவள் கணவனுக்கு ஒரு கருவியாக மட்டுமே இருக்கிறாள்.

இயக்குநர் செழியன்
இயக்குநர் செழியன்

இந்திய தன்மையில் குடும்ப அமைப்பில் பெண்கள் என்னவாக இருக்கிறார்கள் என்பதைப் படம் அழகாகப் பதிவு செய்திருக் கிறது. குடும்பத்தில் முக்கியமானவர்களாக இருக்கும் அதே பெண்களை கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை என்ற அந்தப் பாரபட்சத்தை, கேரளாவில் நடந்த அரசியலை மிக நாசுக்காக உள்ளே கொண்டு வந்திருக்கிறார்கள்.

`எங்கம்மா பத்தாயிரம் தோசைகளாவது சுட்டிருப்பாளா' என எழுத்தாளர் அம்பை ஒரு கதையில் எழுதியிருப்பார். அதைப் படித்தபோது நான் அதிர்ந்துபோனேன். என் அம்மாவெல்லாம் கடைசி காலம்வரை கிச்சனில்தான் இருந்திருக்கிறார். வங்காள இயக்குநர் மிருணாள் சென், பெண்ணியப் படங்கள் பலவற்றை இயக்கியவர். தன் மனைவியோடு ஒரு நிகழ்ச்சிக்குப் போய்விட்டு வீட்டுக்குத் திரும்புகிறார். வந்ததும் `எனக்கொரு காபி போடு' என்கிறார் மனைவியிடம். மனைவியிடம் அதைச் சொன்ன பிறகுதான் அவருக்கு `நாமே இத்தனை பெண்ணியப் படங்கள் இயக்கியிருக்கிறோம், மனைவியும் நம்முடன்தான் வந்தார், அவரை காபி போடச் சொல்கிறோமே' என்று தோன்று கிறது. எல்லோரும் இப்படித்தான்... தம் தேவைகளுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் கருவிகளாகவே பெண்களைப் பார்க்கிறோம் என்பதை இந்தப் படம் அழகாகப் பதிவு செய்திருக்கிறது.

தி கிரேட் இந்தியன் கிச்சன்...   
இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்குத் தொடரும்?

குடும்பத்தோடு, குறிப்பாக மனைவியோடு பார்க்க வேண்டிய படம். பார்க்கும்போது `அட நாமும் இப்படித்தானே இருக்கோம்' என நினைக்க வைக்கும் கதை. நாயகி நிமிஷாவின் நடிப்பு வெகு இயல்பாக இருக்கிறது. எடிட்டிங் மிக நுட்பமாகக் கையாளப்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு ஒரு காட்சி. வீட்டில் டேபிள் மேனர்ஸை பின்பற்றாத கணவன், ஹோட்டலில் அதைப் பின்பற்றுவது குறித்து மனைவி கேட்கிறாள். அது சண்டையாகிறது. வீட்டுக்குத் திரும்பியதும் கணவனின் கவனம் விளக்கை அணைப்பதில்தான் இருக்கும். அதற்கடுத்த காட்சியில் மறுபடி வீட்டு டைனிங் டேபிளில் கணவன் சாப்பிட்டுப் போட்ட அதே குப்பைகள் சிதறிக் கிடக்கும். அவளுக்காக அந்த வீட்டில் எதுவுமே மாறவில்லை, அவரவர் அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், சந்தோஷமாக இருக்கிறார்கள், கோயிலுக்குப் போகிறார்கள், அவள் மட்டும் கிச்சனுக்குள்ளேயும் மாத விடாயின்போது சிறை போன்ற ஓரிடத்திலும் இருக்கிறாள்.

கடைசியில் ஹீரோ இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்கிறான். அவளும் அவன் டீ குடித்த கப்பை நீண்ட நேரம் கழுவிக்கொண்டே இருக்கிறாள். அந்தக் காட்சி ஏன் அவ்வளவு நேரம் நீடிக்கிறது என்று தோன்றலாம். முதல் மனைவி இருந்தபோதும் அவன் அந்த கப்பில்தான் டீ குடித்தான். அடுத்த மனைவி வந்தபோதும் அதே கப்பில்தான் குடிக் கிறான். அந்த கப் கழுவப் பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆட்கள் மாறினாலும் அந்த வேலை மட்டும் மாறவில்லை என்பதை உணர்த்துவதாக...

`தி கிரேட் இந்தியன் கிச்சன்' இன்றுவரை தொடர்கிறது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு என்பதுதான் தெரிய வில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு