பிஎம்டபிள்யூ பைக் நிறுவனம் ஆண்டுதோறும், பைக் ரேஸ் போட்டியினை 'Make life a ride' என்ற தலைப்பில் ஹைதராபாத்தில் நடத்திவருகிறது. இந்தாண்டுக்கான போட்டியில் அஜித் குமார் பங்கேற்று, பைக் ரேஸில் வெற்றி பெற்ற சாம்பியன்களுக்கு பரிசு வழங்கியிருக்கிறார். இதன் வீடியோதான் சமீபத்தில் வைரல் ஆகியிருக்கிறது.

இதுபற்றி அஜித் தரப்பில் விசாரித்தோம்.
"அஜித் ஒரு பைக் ரேஸர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரிடம் இப்போது வெளிநாட்டு ரேஸ் பைக்குகளுடன், பிஎம்டபிள்வின் S1000 SR என்ற ரேஸ் பைக்கும் உள்ளது. இதன் மதிப்பு 22 லட்சத்துக்கும் மேல். ஹைதராபாத்தில் நடந்த 'வலிமை' படப்பிடிப்புக்குக்கூட லாக்டெளனுக்கு முன்பாகச் சென்னையில் இருந்து பைக்கிலேயே பயணமானார்.
அவருக்கு இந்தியா மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள பைக் ரேஸர்கள் பலரும் நன்கு பழக்கமானவர்கள். அவர்கள் அனைவருடனும் இன்றுவரை தொடர்பில் உள்ளார் அஜித். 'வலிமை' படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தபோது, அங்கே பிஎம்டபிள்யு பைக் ரேஸ் கிளப்பில் அவரை விருந்தினராக அழைத்திருந்தார்கள். அங்கே பைக் ரேஸைத் தொடங்கி வைத்ததுடன், அதில் வெற்றி பெற்றவருக்கு பரிசுகள் வழங்கியும் மகிழ்ந்தார். பைக் ரேஸர்களுக்கு சீனியர் ரேஸர் என்ற முறையில் சில டிப்ஸ்களையும் வழங்கி, அவர்களை நெகிழ வைத்தார்" என்றார்கள்.