Published:Updated:

`கோச்.. நண்பனின் கனவு.. பழிதீர்க்கும் படலம்..!’ - பரபரக்கும் பிகில் மல்ட்டி ஒன்லைன்கள்

பிகில்
பிகில்

`அட, இத்தனை கதைகள் இருக்கிறதா..?’ என அட்லியே ஆச்சர்யப்படும் அளவுக்கு `பிகில்' படத்தின் கதை இதுதான் என தெறிக்க விடுகிறார்கள் இணைய கதாசிரியர்கள்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் பிகில். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா முதல், பிகில் குறித்த பேச்சு அரசியல் வட்டாரத்திலும் சூடுபிடித்தது. படத்துக்கு எதிரான கதை திருட்டு வழக்கு ஒருபக்கம் என்றால், மறுபக்கம் டிரெய்லர், சென்சார் சான்றிதழ், டிரெய்லருக்கு இரண்டு மில்லியன் லைக்ஸ், ரிலீஸ் தேதி என உலக டிரெண்ட் வரை விஜய்யைக் கொண்டு சென்றனர் ரசிகர்கள்.

Vijay
Vijay

சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குநர் செல்வா என்பவர், ``பிகில் திரைப்படம் தன்னுடைய கதை. 256 பக்கங்கள் கொண்ட கதையை தயார் செய்து தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். எனவே, பிகில் படத்துக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கில் அட்லி தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், ``கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதியே பிகில் கதை பதிவு செய்யப்பட்டது. ஆனால், மனுதாரர் தன் கதையை அக்டோபரில்தான் பதிவு செய்துள்ளார். இந்த வழக்கு தொடர எந்தக் காரணமும் இல்லை. பணம் பறிப்பதற்காகவும், விளம்பரத்துக்காகவும் கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

Vijay, atlee
Vijay, atlee
Twitter/Sony Music South

பிகில் படத்தின் கதை தொடர்பான சர்ச்சை பரபரப்பான கட்டத்தில் நீடிக்க, டிரெய்லர் வெளியானது முதல் பிகில் படத்தின் கதை இதுதான் என இணையத்தைக் கலக்கி வருகிறது பல கதைகள். `அட, இத்தனை கதைகள் இருக்கிறதா..?’ என அட்லியே ஆச்சர்யப்படும் அளவுக்கு `பிகில்' படத்தின் கதை இதுதான் என தெறிக்க விடுகிறார்கள் இணைய கதாசிரியர்கள். இன்னும் சிலர், அடுத்தகட்டதுக்கே சென்று, சென்சார் போர்டில் `மாமா, சித்தப்பா....’ பணியாற்றுகிறார்.. படத்தை அவர் பார்த்துவிட்டார். ராயப்பன் கேரக்டர் மாஸ் என தொடங்கி மறுபக்கம் தங்கள் கதையை ஓட்ட ஆரம்பிக்கிறார்கள்.

`பணம் பறிக்கவும் விளம்பரத்துக்காகவும் தொடர்ந்துள்ளார்!’ - `பிகில்’ தடை கோரி வழக்கில் வாதம்

உண்மையில் பிகில் படத்தின் கதைதான் என்ன? படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே, டிக்கெட்டுகளை விற்கும் இணைதளங்கள், விரைவில் வரும் பட்டியலில் `பிகில்’ படத்தை இணைத்து வெளியிடத் தொடங்கினர். இதில் அனைத்துப் படங்களுக்கு ஒரு ஒன்லைன் கொடுக்கப்பட்டிருக்கும். சரி, பிகிலுக்கு என்ன ஒன்லைன் இருக்கும் என தேடிப் பார்த்தோம்.

பிரபல டிக்கெட் விற்கும் இணையதளமான புக் மை ஷோ, ``பிகில் படத்தில் விஜய் பெண்கள் அணியின் கோச்சாக நடிக்கிறார். அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வதே படத்தின் கதை” எனக் குறிப்பிட்டுள்ளது.

பி.வி.ஆர் இணையதளத்தில், ``பிகில் படம் ஒரு கால்பந்து அணியின் பயிற்சியாளரின் கதை. அவர், இறந்துபோன தன் நண்பனின் கனவை நினைவாக்க கடுமையான முயற்சிகள் மேற்கொள்கிறார். அதேநேரத்தில் தன் உயிர் நண்பனின் மரணத்துக்கும் பழிவாங்குகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளது.

டிக்கெட்ஸ்நியூ இணையதளம், ``விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராப் ஆகியோர் முக்கிய ரோலில் பிகில் படத்தில் நடிக்கிறார்கள். இந்த விளையாட்டு.. ஆக்ஷ்ன் டிராமா கதையை அட்லீ இயக்கியுள்ளார்” என்பதோடு முடித்துக்கொண்டது.

இந்த இணையதளங்களில் போடப்பட்டுள்ள ஒன்லைன்கள் ஸ்க்ரீன் ஷாட்களாகவும் சுற்றிவருகிறது. ஏ.ஜி.எஸ் சினிமாஸ் மற்றும் எஸ்.பி.ஐ சினிமாஸ் ஆகிய இணையதளங்களில் இன்னும் பிகில் புக்கிங் குறித்த அப்டேட் வெளியாகவில்லை. பிகில் டிரெய்லரைக் கொண்டு நீங்கள் நினைக்கும் படத்தின் ஒன்லைனை கமென்டில் பதிவு செய்யுங்கள் மக்களே....!

அடுத்த கட்டுரைக்கு