Published:Updated:

"வெறும் 5 லட்சம் கொடுக்கவா மு.க.ஸ்டாலினைச் சந்தித்தார்?"- சூடுபிடிக்கும் ஷங்கர் - வடிவேலு சண்டை!

"முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோடு இயக்குநர் ஷங்கருக்கு நல்ல நட்பு இருப்பதாகவும், அதனால்தான் அவரது மகள் திருமணத்தில் முதலமைச்சர் கலந்துகொண்டார் என்பதும் இந்தப் பஞ்சாயத்தின் நடுவே பேச்சாகியிருக்கிறது."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நகைச்சுவை நடிகர் வடிவேலு கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதி அளித்தார். பின்னர் செய்தியாளர்களையும் சந்தித்து தடுப்பூசியின் அவசியம் குறித்தும் தன் பாணியிலும் பேசியிருந்தார். ஆனால், கொரோனா நிவாரண நிதி கொடுப்பதற்காக மட்டும் வடிவேலு மு.க.ஸ்டாலினை சந்திக்கவில்லை, இயக்குநர் ஷங்கருக்கு செக் வைக்கவே இந்த சந்திப்பு நடந்தது என பரபரக்கிறது கோலிவுட்.

என்ன விவகாரம் என விசாரித்தோம். பெயரை வெளியிட விரும்பாமல் பலரும் நம்மிடம் பேசினார்கள். அதன் தொகுப்பு இங்கே!

" 'இம்சை அரசன்' பஞ்சாயத்து, சினிமா உலகத்துல எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். ஆரம்பத்துலயே சிலர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எதுவும் எட்டலை. இந்த சூழல்லதான் சில வாரங்களுக்கு முன்னாடி ஐசரி கணேஷ் தலையிட்டு இந்தப் பிரச்னையைத் தீர்க்கலாம்னு பேசினார்.

வடிவேலு
வடிவேலு

அந்தப் பேச்சுவார்த்தை முதல்ல சுமூகமா முடியற மாதிரிதான் போச்சு. ஆனா, இடையில் என்ன நடந்ததுன்னு தெரியல வடிவேலு கடுப்பாகிட்டார். ஐசரி கணேஷ் ஷங்கருக்கு ஆதரவா செயல்படுறாரோங்கிற சந்தேகம் அவருக்கு வந்துடுச்சு. அதனால மேற்கொண்டு பேச்சுவார்த்தையில அவர் ஆர்வம் காட்டலை. வடிவேலுவின் இந்த நடவடிக்கைகள் ஷங்கர் தரப்புக்கு மேலும் ஆத்திரத்தைத் தர, அவரும் சில வார்த்தைகளை விட்டதா சொல்றாங்க.

அதாவது, 'எனக்குன்னு ஒரு ராசி இருக்கு. நான் எந்தக் காலமும், எந்த கோர்ட் படியையும் மிதிக்க மாட்டேன். இதுக்கு முன்னாடி கூட சில பிரச்னைகளை சந்திச்சிருக்கேன். அதனால இந்தப் பிரச்னை போற போக்குல போகட்டும். அவரும் எங்க வேணாலும் போகட்டும்' என ஐசரியிடமே ஷங்கர் சொன்னதாகச் சொல்கிறார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோடு இயக்குநர் ஷங்கருக்கு நல்ல நட்பு இருப்பதாகவும், அதனால்தான் அவரது மகள் திருமணத்தில் முதலமைச்சர் கலந்துகொண்டார் என்பதும் இந்தப் பஞ்சாயத்தின் நடுவே பேச்சாகியிருக்கிறது.

மு.க.ஸ்டாலின் - இயக்குநர் ஷங்கர்
மு.க.ஸ்டாலின் - இயக்குநர் ஷங்கர்

'முதலமைச்சரோடு எங்களுக்கு நெருக்கம் அதிகம்' என்கிற இந்தப் பேச்சு வடிவேலுவின் காதுகளுக்குப் போனதும் அவர் கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டார். 'நான்லாம் எந்தக் காலத்துல இருந்து நெருக்கம்னு காட்டுறேன்' எனச் சொல்லித்தான் பூச்சி முருகன் மூலம் முதல்வரைச் சந்திக்க ஏற்பாடு செய்யச் சொல்லி நேரில் போய் சந்தித்துவிட்டு வந்தார் வடிவேலு. நீங்கள் ஆளும்கட்சிக்கு நெருக்கம் என்றால் நான் அதைவிட நெருக்கம் என்பதுதான் இந்தச் சந்திப்பின் மூலம் வடிவேலு உணர்த்த விரும்பியது'' என்கிறார்கள் கோலிவுட் பட்சிகள்.

ஆக மொத்தத்தில், 'இம்சை அரசன்' பஞ்சாயத்து இப்போதைக்கு தீராது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு