Published:Updated:

`காப்பான்' ரிலீஸ் தள்ளிப்போன காரணம் இதுதான்!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா - மோகன் லால் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'காப்பான்.'

Suriya - Mohanlal
Suriya - Mohanlal ( Kaappan )

'என்.ஜி.கே' படம், வேறு படங்களின் ரிலீஸ் எனப் பல்வேறு காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்காமலே இருந்தது படக்குழு. இந்நிலையில், படத்தின் ரிலீஸை ஆகஸ்ட் 30-ம் தேதி என அறிவித்திருந்தார்கள்.

Suriya - Sayeesha
Suriya - Sayeesha
Kaappan

சூர்யாவின் 37-வது படமாக காப்பான் தயாராகி வந்தது. மோகன் லால், ஆர்யா, சயிஷா, பொமன் இரானி, சமுத்திரக்கனி எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இதில் நடித்திருக்கின்றனர். சூர்யா - கே.வி.ஆனந்த் காம்போவில் வெளியான 'அயன்' படத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு ஆகியோர்களே இப்படத்திலும் பணியாற்றியுள்ளனர். பட்டுக்கோட்டை பிரபாகரன் இப்படத்துக்கு வசனம் எழுத, ஆண்டனி படத்தொகுப்பாளராகவும், திலீப் சுப்புராயன் சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றினர். லைகா நிறுவனம் தயாரித்த இப்படத்தை, ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தது படக்குழு. காரணம், வினோத் - அஜித் கூட்டணியில் உருவான 'நேர்கொண்ட பார்வை' ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாவதாலும், பிரபாஸ் நடிக்கும் 'சாஹோ' ஆகஸ்ட் 15-ம் தேதி வெளிவர இருந்ததாலும், 'காப்பான்' படத்தை ஆகஸ்ட் 30-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

இதற்கிடையே 'சாஹோ' படத்தில் சில மாற்றங்கள் செய்து படப்பிடிப்பு மீண்டும் நடந்ததால் குறித்த நாளான ஆகஸ்ட் 15-ம் தேதி படம் வெளியாகாது என்று படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டு, ஆகஸ்ட் 30-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

சூர்யா - கே.வி.ஆனந்த் - ஆர்யா
சூர்யா - கே.வி.ஆனந்த் - ஆர்யா
காப்பான்

'பாகுபலி' படத்துக்குப் பிறகு பிரபாஸின் நடிப்பில் வெளிவரும் படம், ஷ்ரதா கபூர், ஜாக்கி ஷெராப், நீல் நித்தின் முகேஷ், அருண் விஜய் ஆகிய பெரும் நட்சத்திரங்கள் இணைந்திருக்கும் படம், பெரும் செலவில் எடுக்கப்பட்டிருக்கும் படம் போன்ற பல்வேறு காரணங்களால் இது சர்வதேச படமாகிவிட்டது. 'காப்பான்' விவகாரத்தில் தமிழ்நாட்டில் தியேட்டர் கிடைப்பதில் எந்தவித சிக்கலும் இல்லை. ஆனால், இப்படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கு அங்கு திரையரங்குகள் கிடைப்பதில் பெரிய சிக்கல் ஏற்பட்டது. இதே நிலைதான் வெளிநாடுகளிலும் ஏற்பட்டது. இதனால், சூர்யாவின் 'காப்பான்' ஆகஸ்ட் 30-ம் தேதியிலிருந்து செப்டம்பர் 20-ம் தேதிக்குத் தற்போது தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.