Published:Updated:

விஜய் சேதுபதிக்கு மறுக்கப்பட்ட எம்.ஜி.ஆர் பட டைட்டில்; காரணம் இதுதான்!

விஜய் சேதுபதி
News
விஜய் சேதுபதி

அப்ப 'புரட்சித் தலைவர்' கிடையாது. கலைஞர் அவருக்குக் கொடுத்த 'புரட்சி நடிகர்' அடைமொழிதான் இந்தப் படத்தின் டைட்டில் கார்டுல வரும். 1961-ம் ஆண்டு படம் ரிலீஸாச்சு. சரியா இப்போ 60 வருஷமாகுது.

எம்.ஜி.ஆர்., சரோஜா தேவி நடித்த 'திருடாதே' படத்தின் டைட்டிலை நடிகர் விஜய்சேதுபதி நடித்து வரும் படத்துக்குக் கேட்டதாகவும், ஆனால் படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் அதை வழங்க மறுத்து விட்டதாகவும் கோடம்பாக்கத்தில் ஒரு தகவல் பரவிவருகிறது.

இதுகுறித்து மேற்கொண்டு விசாரித்த போது,

நடிகர் விஜய் சேதுபதிக்கு 'எம்.ஜி.ஆர் நடித்த 'திருடாதே' டைப் கதையில நடிக்கணும்னு ஒரு ஆசை இருக்கு. இதைப் பல இடங்கள்ல அவரே வெளிப்படுத்தி இருக்கார். இந்த நிலையில, அவர் நடித்த 'லாபம்' படத்தின் தயாரிப்பாளர் மீண்டும் அவரை வைச்சு ஒரு படத்தை எடுக்க முடிவு செய்து, அந்தப் படத்துக்கு 'திருடாதே'ன்னு டைட்டில் வச்சிடலாம்னு ஃபிலிம் சேம்பர்ல அந்த டைட்டிலை பதிவு செய்ய அணுகியிருக்காங்க.

ஃபிலிம் சேம்பர்ல இருக்கிற டைட்டில் கமிட்டியில இருக்கிறவங்களும், இந்த டைட்டிலுக்கு ஒப்புதல் சொல்லியிருக்காங்க.

இந்த விஷயம் 'திருடாதே' படத்தைத் தயாரித்த 'சாரதா ஸ்டூடியோ' எ.எல்.சீனிவாசனின் குடும்பத்தினருக்குத் தெரிய வர, எ.எல்.சீனிவாசனின் மரும்கள் ஜெயந்தி கண்ணப்பன், உடனடியா இதுக்கு ஆட்சேபனை தெரிவிச்சு. டைட்டிலைத் தர மறுத்துட்டாங்க' என்றனர் விவரமறிந்தவர்கள்.

ஜெயந்தி கண்ணப்பனிடம் பேசினேன்.

எம்.ஜி.ஆர் - சரோஜா தேவி
எம்.ஜி.ஆர் - சரோஜா தேவி

''பழைய டைட்டில்களை மறுபடியும் வைக்கிறதே சினிமாவுல ஒரு ஆரோக்கியமான விஷயம் கிடையாது. பழைய அந்த ஹிட் படங்களின் சாதனைகள் இதன் மூலம் மறைக்கப் பட்டுடும்.

'திருடாதே' படத்தின் டைட்டிலை முன்னாடி மறைந்த வசந்தகுமார் தன்னுடைய மகனுக்காகக் கேட்டார். அப்பவே நான் மறுத்துட்டேன். இப்ப என்னன்னா, எங்க கவனத்துக்கு வராமலே டைட்டிலைப் பயன்படுத்திக்க முயற்சி செய்திருக்காங்க.

'திருடாதே' படத்தைப் பொறுத்தவரைக்கும் எம்.ஜி.ஆர். நடித்த முதல் சமூகப்படம்னு அதைக் குறிப்பிடுவாங்க. ஏன்னா இந்தப் படத்துக்கு முன்னாடி வரை அவர் வாள் சண்டை போடுகிற மாதிரியான வரலாற்றுக் கதைகள்லதான் நடிச்சிட்டிருந்திருக்கிறார். அவருடைய சினிமாப் பயணம் தொடங்கி சரியா 25 வருஷத்துல நடிச்ச படம் இது. அப்ப 'புரட்சித் தலைவர்' கிடையாது. கலைஞர் அவருக்குக் கொடுத்த 'புரட்சி நடிகர்' அடைமொழிதான் இந்தப் படத்தின் டைட்டில் கார்டுல வரும். 1961ம் ஆண்டு ரிலீசாச்சு. சரியா இப்ப 60 வருஷமாகுது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாங்க இந்தப் படத்தின் டைட்டிலைக் கொடுக்க விரும்பாததுக்குக் காரணமும், இந்தப் படத்தின் சிறப்புகளும் சாதனைகளும் மறைக்கப் பட்டுடும்னுதான்..

விஜய் சேதுபதி நடிச்சு 'திருடாதே'ன்னு படம் வெளிவந்தா கொஞ்ச காலத்துக்குப் பிறகு அந்தப் படத்தின் பெயரைச் சொன்னாலே எம்.ஜி.ஆருக்குப் பதில் விஜய் சேதுபதி முகம்தான் கண் முன்னாடி வரும் '' என்கிறார் ஜெயந்தி கண்ணப்பன்.

'லாபம்' தயாரிப்பாளர் தரப்பில் பேசிய போது, 'திருடாதே' படத்தின் டைட்டிலைக் கேட்டது உண்மைதான். இது தொடரபா இன்னொரு முறை பேசிப்பார்க்கலாம்னு இருக்கோம்' என்றவர்கள், ``விஜய் சேதுபதி நடித்து வரும் படத்துக்குத்தான் இந்தத் தலைப்புக் கேட்கப்பட்டதா" என்ற கேள்விக்குப் பதிலளிக்க மறுத்து விட்டனர்.

ஒருவேளை 'திருடாதே' டைட்டில் கிடைக்கவில்லையென்றால், இவர்கள் 'மலைக் கள்ளன்' டைட்டிலை கேட்கலாமென முடிவெடுத்திருப்பதாகச் சொல்லப் படுகிறது.