Published:Updated:

ஐஸ்வர்யா ராஜேஷின் `பூமிகா'... பேய் சொல்லும் மெசேஜ் என்னன்னா?! ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

பூமிகா

இன்று தொலைக்காட்சி மற்றும் ஓடிடியில் வெளியாகவிருக்கிறது 'பூமிகா'. ஐஸ்வர்யா ராஜேஷ், விது நடிப்பில், ரத்திந்திரன் R.பிரசாத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த ஹாரர் த்ரில்லர் படத்தின் ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட் இதோ!

ஐஸ்வர்யா ராஜேஷின் `பூமிகா'... பேய் சொல்லும் மெசேஜ் என்னன்னா?! ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

இன்று தொலைக்காட்சி மற்றும் ஓடிடியில் வெளியாகவிருக்கிறது 'பூமிகா'. ஐஸ்வர்யா ராஜேஷ், விது நடிப்பில், ரத்திந்திரன் R.பிரசாத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த ஹாரர் த்ரில்லர் படத்தின் ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட் இதோ!

Published:Updated:
பூமிகா
ஒரு புதிய பில்டிங் புராஜெக்ட்டுக்காக ஆள் அரவமில்லாத ஒரு ஸ்கூல் கேம்பஸுக்குள் செல்கிறது ஒரு குழு. அங்கு அடுத்தடுத்து நிகழும் அமானுஷ்யங்களும், பிரச்னைகளும், அதற்கான காரணங்களும்தான் 'பூமிகா' திரைப்படத்தின் கதை.

ஒரு பெரிய இடத்தை பிளாட் போட்டு விற்கும் பெரிய அசைன்மென்ட் ஒன்று கவுதமுக்கு வருகிறது. கவுதம் மற்றும் குடும்பத்தினர் அந்த வீட்டுக்குச் செல்ல, அமானுஷ்யங்கள், ஆபத்துகள் என இரவு நீள்கிறது. வந்திருக்கும் நபர்களின் பின்னணி, அந்த இடம் ஏன் அப்படிச் செயலாற்றுகிறது போன்ற விஷயங்களை வைத்து ஒரு பசுமை சார்ந்த (எக்கோ) த்ரில்லரை முன்வைத்திருக்கிறார் நவரசா சீரிஸின் 'இன்மை' புகழ் ரத்திந்திரன் R பிரசாத்.

பூமிகா
பூமிகா

பல்வேறு புது முகங்களுக்கு இடையே தனித்து நிற்கிறார் சம்யுக்தாவாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ். சைக்காலஜிஸ்ட், குழந்தையின் தாய் என ஐஸ்வர்யா ராஜேஷ் கரியரில் இன்னும் ஓர் அழுத்தமான கதாபாத்திரம். சிறப்பாகச் செய்திருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ், பாவேல் நவகீதன், நக்கலைட்ஸ் குழு தவிர்த்து படம் முழுக்கவே பல புதுமுகங்கள். கதையின் நாயகன் கவுதமாக விது. கவுதமின் தோழியும் கட்டடக் கலைஞருமான காயத்ரியாக சூர்யா கணபதி. கவுதமின் தங்கை மாதுரியாக அதிதி. அதில் இருவர், 'பேயா, சரி சரி வா உட்காரு' டோனில் நடிக்கிறார்கள். இன்னொருவரோ டூ மச் பீதியைக் கிளப்பிக் கடுப்பேற்றுகிறார். இரு துருவங்களுக்கு மத்தியில் ஒரு கனகச்சிதமான மீட்டரைப் பிடித்திருக்கலாமே இயக்குநர் சார்?! எல்லோருக்கும் சேர்த்து ஐஷ்வர்யா ராஜேஷே நடிக்க வேண்டியதாயிருக்கிறது.

இரண்டாம் பாதி முழுக்கக் கதையைத் தாங்கி நிற்பது அவந்திகா வந்தனபூ தான். வித்தியாசமான முதல் படம். சவாலான பாத்திரத்தின் தன்மை அறிந்து நடித்திருக்கிறார். அந்த வீட்டின் வேலையாளாக வரும் பாவேல் நவகீதன் மற்றுமொரு நல்ல பாத்திரத்தில் நடித்த திருப்தியுடன் கடந்துபோகிறார்.

பூட்டிக்கிடந்த வீடு என்றாலே பேய் இருக்கும், கரன்ட் போகும், வண்டி ஸ்டார்ட் ஆகாது என நாம் ஒரு லிஸ்ட் போட்டால், அந்த லிஸ்ட்டில் எல்லா பாயின்ட்டுக்கும் டிக் போடும் மற்றுமொரு பேய் படம்தான் 'பூமிகா'. படத்தைப் பெருமளவு காப்பாற்றுவது படத்தின் டெக்னிக்கல் டீம்தான்.

பூமிகா
பூமிகா

ஒரு த்ரில்லர் கதை, அதில் ஒரு உலகளாவிய கருத்து என முன்வைத்திருக்கிறார் ரத்திந்திரன் R பிரசாத். சற்றே பிரசார தொனி வந்தாலும், சமீபத்திய IPCC அறிக்கை எல்லாம் படித்தால், இந்தப் பிரசாரம் தேவையென்றே தோன்றுகிறது.

"பூமிக்குத் தன்னைக் காப்பாத்திக்கறது எப்படின்னு தெரியும். உன்னைய காப்பாத்திக்க, முடிஞ்சா காப்பாத்திக்க" போன்ற வசனங்கள் அருமை. பிருத்வி சந்திரசேகரின் பின்னணி இசை படத்துக்கு பெரும் பலம். ராபர்டோ ஜஸாராவின் ஒளிப்பதிவு அந்த இருள் சூழ்ந்த இரவுகளையும் அவ்வளவு சிரத்தையுடன் படமாக்கியிருக்கிறது. படத்தில் வருகின்ற ஓவியங்களும், அந்த அனிமேஷன்களும் அருமை. கலை இயக்கம் குழுவுக்கு ஒரு சபாஷ். செந்நாய் போன்ற மிருகங்கள் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் உறுத்தினாலும் இந்த பட்ஜெட்டில் அதைச் சிறப்பாகவே கையாண்டு இருக்கிறார்கள்.

த்ரில்லராக படம் ஈர்த்தாலும், முதல் பாதி முழுக்கவே பேயை ஜஸ்ட் லைக் தட் இந்தக் குடும்பமே டீல் செய்வது ஒரு கட்டத்தில் நமக்கே பேயை ரேஷன் கார்டில் சேர்த்துவிடலாமோ என்று தோன்றுகிறது. அதுவும் ஹாலிவுட் படங்களில் வருவதுபோல, பேய் இருக்கிறது எனத் தெரிந்த பின்னரும், குழந்தையைத் தனி ரூமில் படுக்கவைப்பது, மேல் மாடியிலிருந்து செல்போன், எமர்ஜென்ஸி லேம்ப் எடுத்துவருவது, பேய் சொல்லும் வீடு, லைப்ரரி என நினைத்த இடங்களுக்கு எல்லாம் தைரியமாகத் தனியாக சென்றுவருவது போன்றவை சாகசம்தான் என்றாலும், அவர்களே அடுத்த காட்சியில் பேய்க்குப் பயப்படுவது என்ன லாஜிக்கோ!

பூமிகா
பூமிகா

அதேபோல், தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும் பேய் சிலரைப் போட்டுத்தள்ளக் காலம் தாழ்த்துவதும், மற்றவர்களுக்கு ஜஸ்ட் லைக் தட் கேம் ஓவர் சொல்வதும் ஏன் என்று தெரியவில்லை. எல்லாம் ரத்திந்திரனுக்கும் பேய்க்குமே வெளிச்சம்!

இவற்றைத் தாண்டி படம் சொல்லும் அந்த மெசேஜும், அதை ப்ளாஷ்பேக்கில் 'ஆட்டிசம்', நிஜ அறிவியல் அறிஞர்களின் தியரிகள் போன்றவற்றுடன் இணைத்த விதமும் சுவாரஸ்ய முயற்சி. தமிழ் சினிமாவில் வெகு நாள்களுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு ஃப்ரெஷ் டீம், ஒரு ஃப்ரெஷ்ஷான கன்டென்ட்டுடன் களமிறங்கி அதைத் திறம்பட செய்திருக்கிறது என்பதை நிச்சயம் பாராட்டலாம்!

உலகுக்கு மிகவும் தேவையான ஒரு விஷயத்தைப் பேய் மூலம் சொல்லியிருக்கிறார்கள். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். இந்த வார வீக்கெண்டுக்கு 'பூமிகா' ஒரு நல்ல சாய்ஸ்.